சேட்டன்ஸ் பிச்சிட்டாங்க.. அடியோஸ் அமிகோ எதற்காக பார்க்க வேண்டும்?.. படத்தில் என்னென்ன ஸ்பெஷல்

சென்னை: மலையாளத்தில் சமீப காலமாகவே வெளியாகும் படங்கள் பல ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. சிம்பிள் லைனை வைத்துக்கொண்டு மேக்கிங்கில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படி வெளியான படங்களில் ஒன்றுதான் அடியோஸ் அமிகோ. ஆசிப் அலி, சூரஜ் வெஞ்சாரமுடு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

மலையாள திரையுலகுக்கு கடந்த சில காலங்கள் பொன்னானவை என்றே சொல்லலாம். மஞ்சும்மல் பாய்ஸ், குருவாயூர் அம்பல நடையில், பிரம்மயுகம், ஆடுஜீவிதம், கிஷ்கிந்தா காண்டம் என வெளியான படங்கள் வரிசையாக ஹிட்டடித்துக்கொண்டிருக்கின்றன. வியாபார ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கேரளாவை தாண்டி கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிம்பிள் லைனை வைத்துக்கொண்டு சேட்டன்கள் எப்படி அடிபொலி செய்கிறார்கள் என்று வாயை பிளந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

adios amigo asif ali suraj venjaramoodu

அடியோஸ் அமிகோ: அந்த வரிசையில் ஒன்றுதான் அடியோஸ் அமிகோ. பணக்கார நபர் ஒருவர், பணம் இல்லாமல் வறுமையில் இருக்கும் ஒருவர் சந்தித்துக்கொள்வதும்; அவர்களின் பயணமும்தான் கதை. லைன் என்னவோ சிம்ப்பிள் லைன் தான். ஆனால் அந்த லைனை வைத்துக்கொண்டு இயக்குநர் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். காட்சிக்கு காட்சி சுவாரஸ்யத்தோடும், எமோஷனலோடும் நகர்த்தி ஆடியன்ஸை கட்டிப்போட்டுவிட்டார் இயக்குநர் நஹாஸ் நாசர். கதை எழுதியது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

செம ஸ்பெஷல்: வாழ்வில் எல்லோரும் ஒருகட்டத்தில் கடன் வாங்கியிருப்போம், பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்போம்; வாங்கிய கடனை மீண்டும் ஒழுங்காக செலுத்த முடியாமல் சம்பந்தப்பட்டவரிடம் கூனி குறுகி நின்றிருப்போம். அந்த நேரத்தில் இன்னொரு நெருக்கடி வந்து குறுகி நின்றவரிடமே சென்று மீண்டும் கடன் கேட்டிருப்போம். இந்த சுழற்சி முறையை அவ்வளவு அசால்ட்டாக சூரஜ் ஏற்றிருந்த கேரக்டரை வைத்து விளையாடியிருக்கிறார் இயக்குநர்.

அதிலும் நாம் ஒரு காலத்தில் உதவி செய்தவர்கள் நம்மை மறந்துவிட்டு மட்டம் தட்டும்போது வரும் வலி என்பதை எழுத்தில் அடக்க முடியாது. அந்த வலியை அவ்வளவு ஆழமாக போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மருத்துவமனையில் இருக்கும் தாயின் சிகிச்சைக்காக பணம் கேட்டு பேருந்து நிலையத்தில் சத்யப்ரியன் (சூரஜ்) வெயிட் செய்துகொண்டிருக்கும்போது எப்படியாவது அவருக்கு பணம் கிடைத்துவிட வேண்டும் என்று ஆடியன்ஸையும் நினைக்க வைத்துவிடுகிறார். முக்கியமாக எந்த எமோஷனலையும் பெரிதாக காண்பிக்காமல் சத்யா தவிப்போடு காத்திருக்கும்போதெல்லாம் நமக்கு மனது வலிக்கிறது.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் ஆசிப் அலி தோன்றுகிறார். உண்மையில் சூரஜுக்கான தேவதூதன் என்றுதான் ஆசிப் அலி கேரக்டரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆசிப் அலியை பொறுத்தவரை தன்னிடம் இருக்கும் பணம் செலவு செய்வதற்கும் பிறருக்கு உதவி செய்வதும்தான் என்பதில் தீர்க்கமாக இருப்பவர். அந்த குணம் கொண்ட ஒரு கேரக்டரை திரையில் உலாவவிட்டு பணத்தை பதுக்கி வைத்து சுகம் காணும் பலருக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக பேருந்து நிலையத்தில் ஒரு பாட்டியிடம் 7,500 ரூபாய்க்கு லாட்டரி சீட் வாங்கும் காட்சியில் எல்லாம் பலர் நெகிழ்ந்துதான் போனார்கள். அதுபோல் கேரக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் என்ன நாம் ஓடும் அவசரத்தில் அப்படிப்பட்டவர்களை பார்க்க மறந்துவிடுகிறோம் என்பதுதான் எதார்த்தம்.


அதேபோல் சூரஜும் ஆசிப் அலியும் அறிமுகமாகும் இடமாகட்டும்; சூழ்நிலை காரணமாக ஆசிப்பை விட்டு விலக முடியாமலும், இருக்க முடியாமலும் தவிக்கும் சூரஜ் தவிக்கும் சீன்கள் ஆகட்டும் அனைத்துமே மாஸ்டர் பீஸ்கள். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் முதன்முறையாக புது உடுப்பை உடுத்திக்கொண்டு கூலிங் க்ளாஸை அணிந்துகொண்டு கண்ணாடியில் பார்க்கையில்; ஒரு எளிய மனிதனுக்குள் இருக்கும் ஆசையும் ஏக்கமும் தெரியும். அதேபோல் ஒருகட்டத்தில் 100 ரூபாய்க்குகூட எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா என்று ஆசிப்பிடம் அவர் கூறுகையில் எளிய மனிதன் பண தாளை எப்படி பார்க்கிறான் என்பதையும், பணக்காரன் பண தாளை எப்படி பார்க்கிறான் என்பதையும் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

எப்போது சிரித்துக்கொண்டே இருப்பவர்களுக்குள்தான் ஆறாத வலி ஒன்று இருக்கும். அந்த விதி ஆசிப் அலி கேரக்டருக்குள்ளும் இருக்கும். ஒரு நிலைமையில் தனது தொலைந்து போன உறவை சுராஜோடு சென்று பார்க்கையிலும், அன்றைய இரவு நடக்கும் ஒரு விஷயத்தால் சூரஜை கடிந்துகொண்டு கிளம்புகையிலும் ஆடியன்ஸுக்கு பரபரப்பையும் பரிதாபத்தையும் ஒரே நேரத்தில் கடத்தப்படுகிறது. ஆனால் அந்த பரபரப்பும், பரிதாபமும் அடங்குவதற்குள் நகைச்சுவையை கொண்டு வந்தது எல்லாம் இயக்குநர் மற்றும் எழுத்தாளரின் க்ளாசிக் டச்.

தனக்கு இருக்கும் வெறுமையையும், வலியையும் கொண்டாட்டங்களை வைத்தும், உதவிகளை வைத்தும் போக்கிக்கொள்ள துடிக்கும் ஒருவனுக்கும், உதவி கிடைக்காமல் வெறுமையோடும்; ஆசிப்பிடம் அந்த உதவியை கேட்க முடியாமல் தவிப்போடும் இருப்பவனுக்கும் இடையே உள்ள உறவை இதற்கு மேல் அழகாக காட்சிப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. ஒருகட்டத்தில் சூரஜ் தனக்கு தேவைப்படும் உதவியை கேட்டுவிட; அந்த சூழ்நிலையில் ஆசிப்புக்கு நடக்கும் விஷயங்கள் எல்லாம் பலரது வாழ்க்கையில் நடந்து இருக்கும்.

முக்கியமாக அந்த சூழ்நிலையில் நடக்கும் விஷயங்களால் குற்ற உணர்வுக்கு ஆளான ஆசிப் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் சூரஜுக்கு உதவ தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருப்பதை பார்க்கையில் இப்படிப்பட்ட மனிதர்கள் மெஜாரிட்டியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். தோற்றத்தை வைத்து இந்த உலகம் எப்போதும் வேறு மாதிரிதான் கணிக்கும் என்பதை ஒரே காட்சியில் இயக்குநர் காண்பிக்கையில்; சூரஜின் நடிப்பும் முக பாவனையும் மனதை கனக்க வைக்கின்றன.

அந்த கனத்தோடுதான் படம் முடியும் என்று நினைக்கையில் கனத்த மனதை லேசாக்கும்படியாக படத்தை முடித்த இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மனதை இலகுவாக மாற்றி இதமாக வைத்துக்கொள்வதற்கு சில குறைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் நியாயம். எனவே குறைகளை கண்டுகொள்ளாமல் அடியோஸ் அமிகோவை தாராளமாக கொண்டாடலாம். அடியோஸ் அமிகோ என்றால் பிரியாவிடை, நண்பர், குட் பை என்று பல பொருள்கள் இருக்கின்றன. ஆகமொத்தம் இந்தப் படத்தை பார்த்து முடிக்கையில் பிரின்ஸுக்கும் (ஆசிப் அலி) சத்யப்ரியனுக்கும் (சூரஜ்) தெளிந்த மனதுடன் இறுக்கமாக கைகைளை பற்றி ஒரு அடியோஸ் அமிகோ சொல்ல தோன்றும். வாழ்த்துகள் இயக்குநரே

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X