twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகளிர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் வரலாற்றை.... மாற்றியெழுதிய மனோரமா

    By Manjula
    |

    சென்னை: ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்பது போல, ஆயிரம் படங்கள் கண்ட அபூர்வ சிந்தாமணி என்று ஆச்சி மனோரமாவைக் குறிப்பிடலாம்.

    ஆமாம் 1958 தொடங்கி 2015 வரை 15௦௦க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா.

    அப்படி நடிப்பில் பேர், புகழுடன் கொடிகட்டிப் பறந்த மனோரமாவை, இந்த மகளிர் தினத்தில் அவ்வளவு எளிதாக தாண்டிச்சென்று விட முடியுமா?

    மகளிர் தின சிறப்பு பதிவாக ஆச்சி மனோரமா மற்றும் அவரது படங்கள் குறித்து இங்கே காணலாம்.

    மனோரமா

    மனோரமா

    தனது வாழ்நாளில் சுமார் 1500 படங்களுக்கும் மேல் நடித்துப் புகழ்பெற்றவர் மனோரமா. மேலும் 4 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.1958 ம் ஆண்டு மாலையிட்ட மங்கையில் தொடங்கிய இவரின் திரைப்பயணம் 57 ஆண்டுகளைத் தாண்டி கடந்த 2015 ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

    5 முதல்வர்களுடன்

    5 முதல்வர்களுடன்

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என்று தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன்(அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டி.ராமராவ்) சேர்ந்து நடித்த பெருமை இவருக்கு உண்டு.

    மாலையிட்ட மங்கை

    மாலையிட்ட மங்கை

    நடிகையாக மனோரமா அறிமுகமான முதல் படம் மாலையிட்ட மங்கை. மனோரமா கடைசியாக நடித்த படம் சிங்கம் 2. அனுஷ்கா, சூர்யா என்று இளைய தலைமுறையுடன் சிங்கம் 2 வில் இணைந்து நடித்திருந்தார். சிங்கம் 3 படத்திலும் நடிப்பேன் என்று உற்சாகமாக பேட்டியளித்த சில மாதங்களிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். சிங்கம் 3 க்கு முன் எமன் முந்திக்கொண்டு விட்டான்.

    100 க்கும் மேற்பட்ட

    100 க்கும் மேற்பட்ட

    சுமார் 100 படங்களுக்கும் மேல் மனோரமா பின்னணி பாடியிருக்கிறார். அவற்றில் டில்லிக்கு ராஜான்னாலும்(பாட்டி சொல்லை தட்டாதே), மெட்ராசை சுத்திப் பாக்க போறேன்(மே மாதம்), வா வாத்தியாரே வீட்டாண்ட(பொம்மலாட்டம்) போன்ற பாடல்கள் மனோரமாவிற்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த பாடல்கள்.

    நகைச்சுவை நடிகை

    நகைச்சுவை நடிகை

    தமிழ் சினிமாவில் ஆண்களுக்கு நிகராக நகைச்சுவை செய்து அசத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிற்காலத்தில் பெண்களும் நகைச்சுவை செய்யலாம் என்று புதிய பாதையை பெண்களுக்கு அமைத்துக் கொடுத்தவர். நகைச்சுவையின் சிறந்த ஜோடிகள் என்று நாகேஷ்- மனோரமா ஜோடி புகழ் பெற்றது. பிற்காலத்தில் கவுண்டமணி போன்றவர்களுடனும் காமெடி செய்து பல அசத்தலான படங்களைக் கொடுத்திருக்கிறார்.

    சிவாஜி கணேசன்

    சிவாஜி கணேசன்

    இன்றும் கூட நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இயக்குநர்கள் தயங்கும் சூழ்நிலையில் நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்றவர்களுடன் அக்காலத்திலேயே போட்டிபோட்டு நடித்தவர் மனோரமா. திரையுலகில் ஆணாதிக்கத்தை தகர்த்த முதல் நடிகை மனோரமாவாகத் தான் இருப்பார்.

    நடிகைகளின் ரோல்மாடல்

    நடிகைகளின் ரோல்மாடல்

    இன்றைக்கு முன்னணியில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆச்சி போன்று நகைச்சுவை வேடங்களில் நடிக்கவே ஆசை என்று கூறுகின்றனர். அப்படி வெளிப்படையாக தெரிவிக்கும் அளவுக்கு இந்தத் தலைமுறையினரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இவரின் நடிப்பு.

    உலக சாதனை

    உலக சாதனை

    1௦௦௦ படங்கள் நடித்த முதல் நடிகை என்ற மனோரமாவின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு, இனிமேல் யாருக்கும் கிடைக்கவே போவதில்லை. 'நீ நடிகையாக இல்லாமல், நகைச்சுவை நடிகையாக இரு' என்று அன்றே சொன்ன கவிஞர் கண்ணதாசன் உண்மையில் தீர்க்க தரிசியாகத் தான் இருக்க வேண்டும். இல்லையேல் யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு பெயரும், புகழும்.

    மருத்துவர் ராமதாஸ் கூறியது போல மனோரமாவைத் தவிர்த்து விட்டு, தமிழ் சினிமா வரலாற்றை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

    English summary
    Women's Day Special: Manorama Create new Records in Tamil Cine Industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X