twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எழுத்தாளர்களும் இயக்குநர்களும் - திரைப்படத்தை ஆக்கும் எழுத்தும் இயக்கமும்

    By Ka Magideswaran
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    திரைப்படங்கள் ஒலியற்ற நகர்வுப் படங்களாக இருக்கையில் நடிப்பையும் ஒளிப்பதிவையும் நம்பியிருந்தன. மேலை நாடுகளில் அந்நிலையிலேயே பெருங்கலைஞர்கள் தோன்றிப் புகழ்பெற்றுவிட்டனர். அன்றைய சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட தொடக்க நிலைத் திரைப்படங்கள் பேசாப்படங்களாக இருக்கையில் மக்களைக் கவர்ந்தாகத் தெரியவில்லை. பேசாமொழிப் படங்களைக் காட்டிலும் கூத்தும் நாடகமும் உவப்பான நிகழ்த்து கலைகளாக இருந்திருக்கின்றன. திரைப்படத்தில் ஒலிப்பதிவியல் மேம்பட்டவுடன் பேசும்படங்கள் வந்தன. பேசும் படங்கள் வழியாகத் தேனான பாடல்களையும் தித்திக்கும்தமிழ் உரையாடல்களையும் கேட்ட மக்கள் சொக்கிப் போயினர். திரைப்படங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.

    திரைப்படத்துறையின் “முதற் சுடர் உடு” (First Super Star) என்று அறியப்படுகின்ற தியாகராஜ பாகவதர் வெண்கலக் குரலில் கானம்பாடுபவர். அவரை அடுத்து வந்தவர்களும் நன்கு பாடத்தெரிந்தவர்களே. ஒலிப்பதிவியலின் வளர்ச்சி பாடல் பதிவு, உரையாடல் பதிவு என்று தொடர்ந்தது. பாடத்தெரிந்தவர்களைவிடவும் தமக்குத் தரப்படும் உரையாடல்களைத் தேர்ச்சியாகப் பேசத் தெரிந்தவர்கள் அடுத்த சுடர் உடுக்கள் ஆனார்கள். பேசும் படங்கள் வரத்தொடங்கிய பிறகு தமிழை நன்கு எழுதத் தெரிந்தவர்கள் இயக்குநர்களை மீறிய புகழோடு வளரத் தொடங்கினர்.

    writers and directors of cinema

    படமாக்கம் முழுவதும் அரங்குக்குள்ளேயே நிகழ்த்தப்பட்டபோது இயக்குநர்களின் பணிகள் யாவும் வரம்புக்குட்பட்டே இருந்தன. எழுத்தாளர்கள் எழுதிக்கொடுப்பனவற்றை அப்படியே படம்பிடித்துத் தரவேண்டியதுதான் இயக்குநர்களின் வேலை. அதற்கு வேண்டிய அரங்கிலிருந்து நடை உடை மெய்ப்பாடு வரையிலானவற்றுக்கான மேற்பார்வையாளர் அவர். இயக்குநர்களை எப்படி நினைவுகூர்கின்றோமோ அவ்வாறே தமிழ்த் திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதியோரையும் நினைக்க வேண்டும்.

    புனைவிலக்கியம் எழுதும் எழுத்தாளர்கள் பலர்க்கும் திரைப்படத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற கனவு கட்டாயம் இருக்கும். இன்றைய இளைஞர்கள் இயக்குநர் கனவினைத்தான் துரத்துகிறார்கள். எழுத்தாளராகும் கனவோடு திரைத்துறைக்கு வருபவர்கள் குறைவே. ஒருவரிடம் கதை இருந்தால் அதனைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் திரையுலகம் அவரை அக்கதையின் எழுத்தாளராக ஏற்றுக்கொள்கிறதா என்பது கேள்வியே. அச்சுத்துறையில் கதை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளரை அழைத்து தாம் எடுக்க வேண்டிய படக்கதையின் கூறுகளைச் செப்பி அதனை எழுத்து வடிவமாகப் பெற்றுக்கொள்வதும் நடக்கிறது. இஃது ஒரு குழப்பமான பரிமாற்றம் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஏனென்றால் கோடம்பாக்கத்தில் திரைக்கதையைக் கையில் வைத்திருக்கின்ற ஒருவர்தான் இயக்குநர் வாய்ப்பைத் தேடி அலைய முடியும். “எந்தக் கதையை வேண்டுமானாலும் கொடுங்கள்…. நான் நன்றாகப் படமெடுத்துக் காட்டுகிறேன்…” என்று இங்கே யாரும் இயக்குநர் வாய்ப்பினைக் கேட்பதில்லை. ஆக, நம் திரையுலகில் வெற்றி பெற்ற பலரும் எழுதத் தெரிந்தவர்களே.

    எழுதத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் எழுத்தாளர்கள் ஆகிவிடமாட்டார்கள். எழுத்தை ஆள்வது வேறு. புனைவின் வழியாக எழுத்தை ஆள்வது என்பது மொழியியலுக்கும் மனித உளவியலுக்கும் இடையில் இன்ன பிற சமூகப் பண்பாட்டு அற மதிப்பீடுகளை இடைக்கற்களாகச் செருகி யாராலும் அழிக்க முடியாத பெரும்பாதை போடுவதாகும். எழுத்தாளர் எழுத்துக்கலையின் வழியாகத் தாம் கூற வருவனவற்றை எழுதித் தருகிறார். ஓர் இயக்குநர் காட்சிக்கோவையின் வழியாகத் தாம் காட்ட வருவனவற்றைக் காண்பிக்கிறார். காட்சிக்கோவையினை ஆக்குவதற்கு முன்பு அதனை எழுத்துப் படியாக்கிக்கொள்வது முன்வரைவாக உதவுகிறது. எழுத்தாளரின் எழுத்துக்கு அவர் நேரில் கண்டவையும் கற்பனையில் கண்டவையும் கருதுபவையும் முன்வடிவாக நின்று உதவக்கூடும். அத்தகையவற்றை அவர் பெற்றிருப்பார். பிறரிடம் கேட்டோ படித்தோ அறிந்திருப்பார். எழுத்தாளர் தனியொருவராக ஆக்கித் தரும் கலைச்செயலில் ஈடுபட்டிருப்பவர். இயக்குநர் பற்பலரின் கூட்டுழைப்பைத் தொகுத்துக் கலையாக்குகின்ற பொறுப்பில் இருப்பவர். ஓர் இயக்குநர் இயக்குநராக மட்டும் இருந்ததால்தான் எல்லீஸ் ஆர் டங்கன் போன்ற ஆங்கிலேயர் தமிழ்ப்படங்களை இயக்கினார். பிறமொழி இயக்குநர்கள் தமிழ்ப்படங்களை இயக்கினர். நம்மவர்களும் பிறமொழிப் படங்களை இயக்கினர்.

    ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் தலையெடுக்கும் வரையில் தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் இயக்குநர்களாகவே இருந்திருக்கிறார்கள். கதை உரையாடல்களை எழுதித் தருவதற்கு எழுத்தாளர்களை நாடியிருக்கின்றார்கள். அன்றைய திரைப்படத்துறை முதலீட்டு நிறுவனத்தைச் சார்ந்திருந்தது. அந்நிறுவனம் படப்பிடிப்பு அரங்கங்களையும் கட்டி வைத்திருந்தது. படமுதலாளிதான் கதையைத் தேர்வார். அந்தக் கதையை ஆக்கியளிக்கும் தகுதியான இயக்குநரையும் கண்டடைவார். படநிறுவனத்திடம் எழுத்தாளர் இயக்குநர் உள்ளிட்டவர்கள் தங்கியிருந்து தொடர்ந்து வேலை செய்யக்கூடிய நிரந்தரப் பணியாளர்களாக இருந்திருக்கின்றனர். இயக்குநரே தமக்கான திரைப்படத்தை எழுதத் தொடங்கிய பிறகுதான் அவர்க்குக் கொம்பு முளைத்தது.

    எழுத்து கைவரப்பெற்றால் அவர் திரைப்படத்திற்கு எழுத வேண்டும், சிறிதேனும் முயலவேண்டும் என்பது இங்கே மனத்தில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. கவிதை எழுதினால் திரைப்பாட்டு எழுதியாக வேண்டும். கதை எழுதினால் திரைப்படத்திற்கு முயற்சி செய்ய வேண்டும். என் இளமையில் கவிதை எழுதிக்கொண்டிருந்ததை அறிந்தவர்கள் “அப்ப சினிபீல்டுக்கு எப்ப போகப்போறே ?” என்று தவறாமல் கேட்டார்கள். பாரதி காலத்தில் திரைப்படத்துறை இல்லை. கம்பதாசன், பாரதிதாசன், புதுமைப்பித்தன், விந்தன் தொடங்கி எல்லாரும் திரைத்துறைக்கு வந்தார்கள். திரைத்துறைக்கு வராமல் எழுத்தில் மூழ்கியிருந்த கல்கியின் தியாக பூமியைத் திரைப்படமாக்கினார்கள். பொன்னியின் செல்வனை அறுபது ஆண்டுகளாகவே கற்பனையில் படமாக்கிக்கொண்டுள்ளார்கள்.

    திரைத்துறையை நோக்கி எழுத்தாளர் வராவிட்டால் அவரை நோக்கி திரைத்துறை வரத் தயங்காது. இதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றைய நிலவரத்தின்படி இலக்கியப் புனைவில் பெரும்பங்கு நேரத்தைச் செலவிடும் எல்லா இலக்கியவாதிகளோடும் யாரேனும் ஒரு திரைப்படக்காரர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏனென்றால் எந்தத் திரைப்படத்துக்கும் எழுத்தின்வழியே ஆக்கியெடுக்கும் கதையுலகமே முதன்மை உணவு. அந்தத் திறன் இயக்குநர்க்கு இருந்தால் அவரே தம் திரைக்கதையை ஆக்கிக்கொள்கிறார். அல்லது குழுவாகக்கூடி கூடை முடைவதைப்போல் ஒவ்வொரு காட்சியையும் ஈர்க்கு ஈர்க்காகச் செருகி உருவாக்குகிறார். இல்லையேல் எழுத்தாளரின் துணையைத்தான் நாடவேண்டும். காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரையில் இனி வருங்காலம் எழுத்தாளர்களுக்குத் தோதாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

    English summary
    Cinema article about the writers and directors of cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X