இந்த 2024ம் ஆண்டு இந்தியாவையே பரபரப்பாக்கிய 10 படங்கள்.. கூகுள் தேடலில் இடம்பிடித்த தமிழ் படங்கள்!
சென்னை: 2024ம் ஆண்டுக்கு குட்பை சொல்லிவிட்டு 2025ம் ஆண்டை வெல்கம் செய்ய அனைத்து மக்களும் தயாராகிவிட்டனர். கொரோனா காலக் கொடுமைகளில் இருந்து இந்த ஆண்டு தான் முழுமையாக மக்கள் சுதந்திர காற்றை மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் கூட்டமாக கூடி சுவாசிக்க ஆரம்பித்தனர். பண்டிகை நாட்கள் ஆனாலே பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக மீண்டும் மாஸ்க் கூட அணியாமல் மக்கள் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
தியேட்டர்களிலும் மக்கள் படையெடுக்கும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் படங்கள் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளன. முதல் 6 மாசம் மலையாள திரையுலகத்துக்கு பொற்காலமாக இருந்தது. அதன் பின்னர் கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் இந்த ஆண்டு சூடுபிடித்தன.

500 கோடி முதல் 1000 கோடி வரை பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆண்டு மக்கள் அதிகமாக கூகுளில் தேடிய டாப் 10 படங்கள் இதுதாம்ப்பா என தற்போது கூகுளே அதிகாரப்பூர்வ லிஸ்ட்டை அனுப்பியுள்ளது. கடவுளே அஜித்தேன்னு கத்திய விடாமுயற்சி இல்லையே என்றும் கங்குவாவை எங்கே காணோம் என ரசிகர்கள் பதற வேண்டாம். வாங்க பட்டியலில் உள்ள 10 படங்கள் குறித்தும் இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஸ்ட்ரீ 2: இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முதலிடத்தில் ஸ்ட்ரீ 2 படம் தான் உள்ளது. அமர் கவுஷிக் இயக்கத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் இந்தியில் மட்டுமே வெளியாகி 700 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. தமிழில் அரண்மனை 4 ஹிட் அடித்த நிலையில், பாலிவுட்டில் புல் புலாயா 3 படத்தை ஓரங்கட்டிவிட்டு இந்த பேய் படம் பேய் ஹிட் அடித்தது.

கல்கி 2898 ஏடி: 2ம் இடத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்த கல்கி 2898 ஏடி படம் இடம்பிடித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படம் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. புஷ்பா 2 திரைப்படம் இந்த படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12த் ஃபெயில்: 3ம் இடத்தில் விக்ராந்த் மசாய் நடித்த 12த் ஃபெயில் படம் இடம்பிடித்துள்ளது. ஷாருக்கானின் டன்கி படத்தையே ஓரங்கட்டிய 12த் ஃபெயில் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், விக்ராந்த் மசாய் சினிமாவுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுக்கப்போவதாக அறிவித்ததும் காட்டுத்தீ போல பரவியது.

லாபதா லேடீஸ்: அமீர்கானின் எக்ஸ் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான லாபதா லேடீஸ் பாலிவுட் ரசிகர்களை மட்டும் இந்தியளவில் ஓடிடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாகவும் இந்த படம் தேர்வானது குறிப்பிடத்தக்கது. 4ம் இடத்தில் இந்த படத்தை தான் அதிக மக்கள் தேடியுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஹனுமான்: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தையே வீழ்த்தி தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் இந்த ஆண்டு இந்தி ரசிகர்களை கவர்ந்து 300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இந்த படம் குறித்து ஏகப்பட்ட ரசிகர்கள் தேடியதால் டாப் 5ல் இடம்பிடித்திருக்கிறது.

மகாராஜா: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, சாச்சனா, நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் தமிழ்நாட்டில் தியேட்டரில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், ஓடிடியில் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில், சீனாவில் வெளியான இந்த படம் 60 கோடிக்கும் மேல் அதிகமாக அங்கே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த பட்டியலில் 6வது இடத்தை மகாராஜா பிடித்துள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ்: குணா குகையின் டெவில்ஸ் கிச்சனில் விழுந்த சுபாஷை அவரது நண்பர்கள் மீட்ட கதையை மையமாக கொண்டு இந்த ஆண்டு வெளியான மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் படம் 7வது இடத்தை பிடித்துள்ளது. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி 240 கோடி ரூபாய் வரை மஞ்சுமெல் பாய்ஸ் ஈட்டி தென்னிந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

கோட்: தளபதி விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் கூகுள் தேடலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் சேதுபதியின் மகராஜா மற்றும் விஜய்யின் கோட் என இரண்டு தமிழ் படங்களை மட்டுமே இந்த ஆண்டு ரசிகர்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளனர். ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா, சிவகார்த்திகேயனின் அமரன் உள்ளிட்ட படங்கள் டாப் 10 இடங்களை பிடிக்கவில்லை.

பிரபாஸின் சலார்: கல்கி 2898 ஏடி படம் மட்டுமல்ல பிரபாஸின் சலார் படத்தையும் ரசிகர்கள் அதிகளவில் கூகுளில் தேட 9வது இடத்தை அந்த படம் பிடித்திருக்கிறது. அடுத்த ஆண்டு டாப் 10 தேடல்களில் கண்டிப்பாக புஷ்பா 2 நம்பர் ஒன் அல்லது டாப் 5 இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவேஷம்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து மலையாள படமான ஆவேஷம் கூகுள் தேடலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. இலுமினாட்டி பாடலும் கூகுள் தேடலில் டாப் 10 இடத்துக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பகத் ஃபாசில் ஆவேஷம், வேட்டையன் மற்றும் புஷ்பா 2 என மாஸ் காட்டியுள்ளார்.



Click it and Unblock the Notifications











