Year Ender 2024: பெரிய படங்கள் ஓடல.. நல்ல படத்தை மக்கள் ஆதரிக்கவில்லை.. 1000 கோடி நஷ்டத்தில் கோலிவுட்
சென்னை: தமிழ் சினிமா ஆண்டுக்கு ஆண்டு பல துறைகளில் வளர்ந்து கொண்டே போகின்றது. அதிலும் குறிப்பாக, என்னதான் ரசிகர்கள் மத்தியில், சினிமா ஆர்வம் கூடிக்கொண்டே போனாலும், தமிழ் ரசிகர்களின் சினிமா ஆர்வத்திற்கு ஏதுவாக தமிழ் சினிமா படைப்பாளிகளால் படங்களை உருவாக்க முடியவில்லை. இப்படியான நிலையில் இந்த ஆண்டில் அதாவது 2024இல் வெளியான படங்களினால், தமிழ் சினிமாவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இறுதி வரை வார இறுதி நாட்கள், விழாக்காலங்கள், சிறப்பு நாட்கள் என ஆண்டு முழுவதும் 241 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அதாவது வாரத்திற்கு சாராசரியாக 4 முதல் 5 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான நிலையில், இந்த ஆண்டு வெளியான படங்கள் அதனால் ஏற்பட்ட லாப நஷ்ட கணக்குகள் குறித்துதிரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி பார்த்தால் இந்த ஆண்டில் மொத்த 241 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில், பெரிய நடிகர்கள் படங்கள் தொடங்கி, அறிமுக நடிகர்களின் படங்கள் வரை பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த 241 படங்களில் வெறும் 18 படங்கள் மட்டுமே அதாவது வெறும் 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளது. மற்றப் படங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம், தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 1,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நஷ்டம்: இந்த 241 படங்களைத் தயாரிக்க சுமார், ரூபாய் 3,000 கோடிகள் வரை செலவாகி இருக்கும், ஆனால் வசூல் ஆனது ரூபாய் 2,000 கோடிகள்தான். இதனால் தமிழ் சினிமாவுக்கு ரூபாய் 1,000 கோடிகள் நஷ்டமாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் தமிழ்சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புள்ளி விபரங்கள் இந்த அளவுக்கு வர காரணமே, பெரிய நடிகர்களின் படங்கள் சரியாக ஓடவில்லை. மேலும், பல தரமான சின்னப் படங்களை, அதாவது சிறிய பட்ஜெட்டிலானா, அறிமுக நடிகர்கள் நடித்த படங்கள், தரமான கதைக்களத்தை வித்தியாசமாக சொன்ன படங்கள் என பலதரப்பட்ட படங்களை ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரவு தராததும் முக்கியகாரணமாக பார்க்கப்படுகின்றது. உதாரணமாக, ஜமா, மெய்யழகன் உள்ளிட்ட படங்களைக் கூறலாம்.
வசூல் வேட்டை: ஆனால் ரசிகர்கள் தரப்பில் கேட்டால், படத்தினைப் பார்க்க தியேட்டருக்குச் சென்றால், பாப்கார்ன் செலவு மட்டும் டிக்கெட் கட்டணத்தை விடவும் அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி நல்ல படங்கள் வரும்போது தியேட்டருக்கு வர முடியும். பாப்கார்ன், பார்க்கிங் என திரையரங்க உரிமையாளர்களின் வசூல் வேட்டை தொடரும்வரை நாங்கள் படத்தினை தியேட்டரில் வந்து பார்ப்பது சிரமம்தான் எனக் கூறுகின்றனர். வரும் ஆண்டிலாவது தமிழ் சினிமாவுக்கு நஷ்டம் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் என திரைத்துறையினர் நம்பிக்கையோடு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











