மீண்டும் உடைந்தது யுவன் - செல்வராகவன் கூட்டணி!!

செல்வராகவன் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. மிக மோசமான படம் என்று விமர்சிக்கப்பட்ட துள்ளுவதோ இளமையில் கூட இசை மிகப் பிரமாதமாக அமைந்திருந்தது.
ஆனால் இந்தக் கூட்டணிக்குள் மோதல் வெடித்ததால், ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பாதி இசையமைத்திருந்த நிலையில் விலகினார் யுவன் சங்கர் ராஜா.
ஆனால் இந்தப் பிரிவு நீடிக்கவில்லை. செல்வராகவன் தனது அடுத்த படமான இரண்டாம் உலகத்தை ஆரம்பித்த போது, யுவன் சங்கர் ராஜாதான் இசை என அறிவித்தார். அவரும் அந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றத் தொடங்கியபோதே, கமல்ஹாஸனின் விஸ்வரூபம் வேலைகள் தொடங்கின.
இந்தப் படத்துக்கும் யுவன்தான் இசை என செல்வராகவன் ஆரம்பத்தில் கூறினார். ஆனால் அடுத்த சில தினங்களில் சங்கர் இஷான் லாய் இசையமைக்க ஒப்பந்தம் ஆகினர். இதனால் வருத்தமடைந்த யுவன், "கமல் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என்ற கோபம் ஏதுமில்லை. ஆனால் இந்தப் படம் பற்றி செல்வராகவன்தான் என் ஸ்டுடியோவுக்கு வந்து பேசினார். இப்போது வேறு அறிவிப்புகள் வந்துள்ளன. அது ஒன்றும் இந்த உலகில் நான் இசையமைக்கும் கடைசிப் படமல்ல... அதேபோல நான் ஒருவனே இந்த உலகில் இசையமைப்பாளனும் அல்ல. மற்ற படங்களில் என் இசை பேசும்..." என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இணையதளம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் செல்வராகவன், "ஏன் ஒவ்வொரு முறையும் நான் யுவனுடன் சேர்ந்தே பணியாற்ற வேண்டும் என எதிர்ப்பார்க்கிறீர்கள். இந்தப் படம் குறித்து அவருடன் பேசியது உண்மைதான். ஆனால் ஒரு இயக்குநராக யாருடைய இசை என் படத்துக்கு வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை எனக்கு உண்டு. விஸ்வரூபம் படத்துக்கு சங்கர் இஷான் லாய் இசை என தீர்மானித்தது, தொழில்முறை முடிவு. யுவன் வேறு இயக்குநர்களுடன் பணியாற்றுவதில்லையா... அப்படித்தான் நானும். சினிமாவில் நட்புக்கோ, உணர்ச்சி வசப்படுதலுக்கோ இடமில்லை...", என்று கூறியுள்ளார்.
இந்த மாதிரி ஈகோ மோதல்களால் இருவருக்கும் நஷ்மில்லாமல் இருக்கலாம்.... ஆனால் நிஜமான இழப்பு இசை ரசிகர்களுக்குத்தான்!


Click it and Unblock the Notifications











