நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு போனது சரியான முடிவுதான்.. பாடகர் யுகேந்திரன் ஓபன்!
சென்னை: கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது. கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், தனக்கு நடிப்பு கமிட்மெண்ட்கள் அதிகமாக இருப்பதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய ஆங்கராக விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இவரது தலைமையில் இந்த நிகழ்ச்சி எப்படி அமையும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

பிக்பாஸ் ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஏழு சீசன்களாக ரசிகர்களை தன்னுடைய பேச்சு மற்றும் செயல்பாடுகளால் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன், எட்டாவது சீசனில் இருந்து விலகியுள்ளார். தனக்கு அதிகமான படங்களின் கமிட்மெண்ட்கள் இருப்பதால் தான் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதியை சேனல் புதிய ஆங்கராக களமிறக்கி உள்ளது. இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் இணையவுள்ள போட்டியாளர்கள் குறித்த கேள்வி தற்போது ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
கமலின் சரியான முடிவு: இந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகர் செந்தில், நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் சிறப்பாகவே களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து தற்போது பேசியுள்ள பாடகர் மற்றும் நடிகர் யுகேந்திரன், இந்த நிகழ்ச்சியில் ஆங்கரிங் செய்வதிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியது சரியான முடிவு தான் என்று தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில எபிசோடுகளே இருந்த யுகேந்திரன், நிகழ்ச்சி குறித்த பல விஷயங்களை தற்போதைய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மாறிய கமலின் இமேஜ்: அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் இமேஜ் கடந்த சீசனில் மாறியுள்ளதாகவும் அதை பேலன்ஸ் செய்வதற்காக அவர் தற்போதைய சீசனில் எதை செய்தாலும் மிகப்பெரிய சர்ச்சைகளை மீண்டும் சந்திப்பார் என்றும் யுகேந்திரன் கூறியுள்ளார். கடந்த சீசனில் அவரை பலவற்றையும் கூறி பலரும் பேசிய நிலையில், இந்த சீசனில் அவர் இணைந்திருந்தால் அது மேலும் அதிகரித்திருக்கும் என்றும் யுகேந்திரன் கூறியுள்ளார். மேலும் இந்த சீசனில் ஆங்கராக இணைந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக செயல்படுவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்குள் இருக்கும் திறமை வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாரும் சாதிக்கவில்லை: இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதன் மூலம் கிடைக்கும் புகழில் தன்னுடைய கேரியரை சிறப்பாக்கிக் கொள்ளலாம் என்ற ஆசையில் தான் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பங்கேற்பதாகவும் ஆனால் அது உண்மை இல்லை என்றும் யுகேந்திரன் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் ஹரிஷ் கல்யாண், கவின் உள்ளிட்ட ஒரு சிலருக்கே நிகழ்ச்சி கை கொடுத்துள்ளதாகவும் அவர்களே இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை சரியாக பயன்படுத்தி உள்ளதாகவும் யுகேந்திரன் மேலும் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரும் பெரிய சாதனை எதையும் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன உளைச்சலை கொடுக்கும்: நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகப்பெரிய மன உளைச்சலை கொடுக்கும் என்றும் யுதேந்திரன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் தான் வந்த நோக்கத்தை மறந்துவிட்டு போட்டியாளர்கள் செயல்படும்போது, அவர்களின் பெயர் கெட்டுப்போவது போன்ற விஷயங்களும் நடப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதெல்லாம் ஸ்கிரிப்ட் தானே என்று பலரும் பேசுவதாகவும் ஆனால் மறுநாள் நடப்பது யாருக்குமே தெரியாது என்றும் கூறியுள்ள யுகேந்திரன், சரியாக சாப்பாடு கிடைக்காது, உப்பில்லாத சாப்பாடுதான் கிடைக்கும் என்பது போன்ற பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பலரும் இருக்கும் நிலையில் அடுத்தடுத்து சண்டைகள் மூள்வதை தவிர்க்க முடியாது என்பதையும் யுகேந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











