'ஜெய்பீம்' படத்திற்கு ஆதரவாக பேசியதால்… பலர் மிரட்டினார்கள்.. நடிகர் அருண்குமார் ராஜன் !
சென்னை : ஜெய்பீம்' படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக பல மிரட்டல்கள் வந்ததாக நடிகர் அருண்குமார் ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடக நடிகரான அருண்குமார் ராஜன் இளவரசி என்ற நாடகத்தின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆனார்.
அழகி,வாணி ராணி, சந்திரேலேகா, கல்யாண பரிசு, பிரியசகி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

ஜெய்பீம்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக வன்னியர் சமூகத்தினர் படத்தில் தங்கள் சமுதாயம் குறித்த தவறான தகவல் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினர்.

காட்சிகள் மாற்றப்பட்டன
இதனையடுத்து படத்தின் சில காட்சிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், சூர்யா தங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடாக 5 கோடி தரவேண்டும் என்றும் பா.ம.க சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு 1 லட்சம் கொடுக்கப்படும் என பா.ம.க. நிர்வாகி ஒருவர் கூறினார்.

என்னை பாதிக்கவில்லை
நாடக நடிகர் அருண்குமார் சமீபத்தில், ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நானும் ஒரு வன்னியர்தான். ஒரு வன்னியரா என்ன இந்தப் படம் எந்த அளவுலையும் பாதிக்கல. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வ சூர்யா சார் பதிவு பண்ணதுக்கு என்னோட மிகப் பெரிய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

மிரட்டினார்கள்
இந்நிலையில், நடிகர் அருண்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,நான் ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பலர் என்னை மிரட்டியதாக கூறினார். சோம்பு தூக்குறியா... நீ என்ன பிச்சை எடுக்குறியா... அவருக்கு சப்போர்ட் பண்ண உன்னை அவர் படத்துல நடிக்க வைக்க மாட்டாருனு சொன்னாங்க அது என் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது என்றார்.

திணிக்கக்கூடாது
மேலும், பேசிய அவர், வன்னியர் சாம்ராஜ்யம் என்பது பாரம்பரியமிக்க சாம்ராஜ்யம் அதை யாராலும் அழித்துவிடமுடியாது, நான் வன்னியர் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். அதேநேரத்தில் இளைஞர்களின் மனதில் ஜாதியை திணிப்பது எனக்கு பிடிக்கவில்லை என்றார். மதம், ஜாதி அனைத்துமே மக்களை நல்வழிப்படுத்துவதற்குதானே தவிர அதை அழிவுக்கு பயன்படுத்துவது சரியானதாக இருக்காது என்றார்.


Click it and Unblock the Notifications











