Baakiyalakshmi: கோபிதான் உலகத்திலேயே பெரிய இடியட்.. நடிகர் சதீஷ் சொன்ன லைஃப் சீக்ரெட்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேரக்டரில் நெகட்டிவ் ஷேடில் நடித்து வருகிறார் நடிகர் சதீஷ். அவரது இந்த கேரக்டர் அதிகமான அளவில் ரசிகர்களின் திட்டுகளை வாங்கி வருகிறது. இதுவே இந்த கேரக்டரின் சிறப்பாகவும் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
சீரியலில் அடுத்தடுத்து பாக்யாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சதி திட்டங்களை தீட்டும் கோபி, தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் வகையில் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்வதாக சிறப்பாக காட்டப்படுகிறார். ஆனால் அவருக்கு சீரியலில் ஹார்ட் அட்டாக் வந்ததாக காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் மாஸான சீரியலாக தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து பயணித்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ஈஸ்வரி, ராதிகா என முன்னணி கேரக்டர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்த சீரியல் விரைவில் எண்டு கார்ட் போடவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வருகிறது. இதையொட்டி பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி மறைவை காட்சிப்படுத்தினர். இந்த கேரக்டரில் நடித்த ரோசாரியோவும் இதை தன்னுடைய பேட்டிகளில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் சீரியலை முடிக்கும் எண்ணம் இயக்குநருக்கு இல்லை என்பதாகவே தெரிகிறது.
பழிவாங்கும் கோபி: சீரியலை அடுத்தடுத்த வளர்க்கும்வகையில் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. தன்னுடைய அப்பாவின் இறுதி சடங்குகளை தான் செய்ய முடியாமல் போனதற்கு காரணம் பாக்கியா தான் என்று அவரை பழிவாங்க துடிக்கிறார் கோபி. அவர் தன்னுடைய உயிராக கருதி செயல்பட்டு வரும் ரெஸ்டாரண்டை மூடும் வகையில் பிரியாணி ஆர்டரில் கெட்டுப் போன கறியை கலக்கிறார். இதனால் பாக்கியா மிகப்பெரிய அளவில் பிரச்சனைகளை சந்தித்து ஒரு கட்டத்தில் இதற்கு காரணம் கோபி தான் என்பதை கண்டறிந்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கிறார்.
கோபிக்கு ஹார்ட் அட்டாக்: இதனிடையே கோபிக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. காரில் பயணித்து செல்லும்போது அவருக்கு பிரச்சினை ஏற்பட, அவர் அடுத்தடுத்து ராதிகா மற்றும் தன்னுடைய மகன்களுக்கு கால் செய்து ஒரு கட்டத்தில் யாரும் எடுக்காத நிலையில் பாக்கியாவிற்கு கால் செய்கிறார். பாக்கியாவும் விஷயத்தை தெரிந்து கொண்டு காரில் மயங்கி கிடக்கும் கோபியை மருத்துவமனையில் சேர்க்கிறார். தினந்தோறும் வாக்கிங், எக்சர்சைஸ் என்று மிகச் சிறப்பான வாழ்க்கையை கோபி வாழ்வதாக இந்த சீரியலில் காட்டப்படுகிறது ஆயினும் அவருக்கு ஹார்ட் அட்டாக்கா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் சதீஷ் விளக்கம்: இந்நிலையில் இதற்கு தற்போது கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார். வாக்கிங், உடற்பயிற்சிகள் என்று அடுத்தடுத்து தன்னுடைய உடலை கோபி ஃபிட்டாக வைத்துக் கொண்டாலும் அவர் மிகப்பெரிய டென்ஷன் பார்ட்டி என்று சதீஷ் குறிப்பிட்டுள்ளார். அடிக்கடி டென்ஷனாகி அனைவரையும் இடியட் என்று திட்டும் அளவிற்கு கோபி நடந்து கொள்வதை சுட்டிக்காட்டியுள்ள சதீஷ், உண்மையில் கோபி தான் மிகப்பெரிய இடியட் என்று கூறியுள்ளார். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது எந்த அளவிற்கு அவசியமோ அதேபோல டென்ஷன் இல்லாத வாழ்க்கையும் அவசியம் என்றும் அதன் யோகா, மெடிடேஷன், உடற்பயிற்சி என்று உடலை மெயின்டெயின் பண்ணவும் அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications