Mumbaikar movie: விஜய் சேதுபதியின் பாலிவுட் என்ட்ரி படம்.. கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பும் மும்பைகர் படம்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராக பான் இந்தியா நாயகனாக இருந்து வருகிறார்.
முன்னணி நடிகர்களின் வில்லனாக நடிக்க வேண்டுமா கூப்பிடு விஜய் சேதுபதியை என்னும் அளவிற்கு வில்லன் கேரக்டர்களில் அதிரடி காட்டி வருகிறார்.

ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தான் ஒரு ஹீரோ என்பதையே மறந்துவிட்டாரா எனறு ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு வில்லன் கேரக்டர்களை ஏற்று வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி துணை கேரக்டர்களில் நடித்து பின்பு ஹீரோவானவர். தென்மேற்கு பருவக்காற்று படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். இடையிடையே தனது நடிப்புக்கு தீனி போடும் கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்களை கொண்டாட செய்துள்ளார். இதனிடையே வில்லனாக இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

முன்னணி நடிகர்களின் வில்லன்: நடிகர்கள் விஜய், ரஜினி, கமல் முதல்கொண்டு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வரையில் வில்லனாக நடித்துவிட்டார் விஜய் சேதுபதி. சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. பாலிவுட்டிலும் மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மும்பைகர் படம்: இதனிடையே சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பாலிவுட்டில் விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்த மும்பைகர் படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு நாளைய தினம் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. மும்பை மற்றும் அதன் பல பகுதிகளை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் நாளைய தினம் பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மும்பைகர் படம்: கலர்ஸ் தமிழின் மூவி ஆஃப் த மந்த் திரைப்படமாக மும்பைகர் படத்தை கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் விக்ராந்த் மாசே, ஹிருது ஹாரூன், ரன்வீர் ஷோரே, தன்யா மானிக்தலா, சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 24 மணிநேர காலகட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் கேரக்டர்களின் பயணத்தை இந்தப் படம் விவரிக்கிறது.
விஜய் சேதுபதி உற்சாகம்: இதனிடையே, இந்திய நடிகர்களுக்கு தற்போது உற்சாகமான நேரமாக அமைந்துள்ளதாகவும் பலமொழிப் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும் விஜய் சேதுபதி உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்தப் படம் தன்னுடைய முதல் இந்தி திரைப்படம் என்பதை குறிப்பிட்டுள்ள விஜய் சேதுபதி, இந்தப் படத்தின் தமிழில் ரசிகர்கள் விரும்பி பாராட்டுவார்கள் என்று தான் நம்புவதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











