சரிகமப டைட்டில் வின்னரே தேவயாணி பொண்ணு தானா?.. இப்பவே பலே புரமோஷன் நடக்குதே!
சென்னை: தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதற்கு என்று தனி போட்டியே நடக்கிறது. இதனால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் பாட்டு போட்டி, நடன போட்டி என பல போட்டிகளை நடத்தி வருகின்றன. அதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக சரிகமப நிகழ்ச்சி உள்ளது. கடந்த சில மாதங்களாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 ஒளிபரப்பாகி வந்தது. அண்மையில் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, மே 24-ம் தேதி முதல் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்து முடிந்துள்ள நிலையில் மெகா ஆடிஷன் மூலமாக போட்டியில் பங்கேற்க உள்ள இறுதி கட்ட போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை தேவயாணியின் மூத்த மகள் இனியா கலந்து கொண்டு, பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடினார். இதில், நடுவர்களாக இருந்த அனைவரும் கண்ணை கட்டிக்கொண்டு இனியா பாடலை கேட்டு அவரை தேர்வு செய்தனர். அதன் பிறகு தான், அது தேவயாணியின் மகள் என தெரிந்தது. மகள் பாடியதை கேட்டு தேவயாணி கண் கலங்கினார். என் மகள் இனியா நன்றாக பாடுவாள் என தேவயாணி மகள் குறித்து பல பேட்டியில் கூறியிருந்தார். அதை தற்போது இனியா உண்மையாக்கி உள்ளார்.

சரத்குமார் பாராட்டு: இதுகுறித்து, நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், மக்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் திறமையான நடிகை தேவயானி அவர்களின் மகள் இனியா அவர்கள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல, Zeeதமிழ் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 போட்டியாளராக, மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். திறம்பட இசையை கற்று நேர்த்தியாக பாடி அசத்தியிருப்பது மிக மிக அருமை.
வாழ்த்துக்கள்: தமிழ் சினிமாவின் மாபெரும் கதாநாயகியின் மகள் என்ற பரிந்துரை கொண்டு, நேரிடையாக திரைப்பட பாடல்களில் பாடி இசையுலகில் தடம் பதித்திருக்க முடியும். ஆனால், தனது சொந்த முயற்சியால் உயர்ந்து சினிமாத்துறையில் கதாநாயகியாக சாதிக்க ஆர்வம் கொண்டு, சரிகமப நிகழ்ச்சி மேடையை சரியாக பயன்படுத்தி, மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது. தனது இனிய குரல்வளத்தால் இசையில் நம்மை மகிழ்வித்த இனியா, அவரது அதீத திறமையால் சினிமாத்துறையின் பல பாரிமாணங்களிலும், பல்வேறு மொழிகளில் பாடும் வாய்ப்பும் பெற்று வாழ்வில் மென்மேலும் உயர்ந்து, அவரது வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என மனதார பாராட்டி உள்ளார்.
டைட்டில் வின்னரா: சரத்குமார் மட்டுமில்லாமல் பலரும் தேவயாணி மகள் இனியா பாடியதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். எத்தனையோ திறமையானவர்கள் வாய்ப்புக்காக காத்து இருக்கும் போது, பிரபலத்தின் மகளுக்கு வாய்ப்பா என்றும், அப்போ இந்த சீசனின் டைட்டில் வின்னரே தேவயாணி பொண்ணு தானா? என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர், தேவயாணி ஒரு பிரபலமான நடிகை, அவர் நினைத்து இருந்தால், தனது மகளை சினிமாவில் பாடவைத்து இருக்கலாம், ஆனால், தன் மகள் அடிப்படையில் இருந்து வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் அவரை பாடவைத்துள்ளார் என பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











