டிடி விட்டுக் கொடுத்ததாலதான் பிரியங்கா இத்தனை வருஷம் சேனல்ல இருக்காங்க.. ஆங்கர் ரஞ்சித் வெளிப்படை!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மணிமேகலை -பிரியங்கா விவகாரம் தான் தற்போது மிகப்பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளாக தான் பங்கேற்றிருந்த ஷோவிலிருந்து வெளியேறும் மணிமேகலையின் முடிவு அனைத்து தரப்பினரையும் பல்வேறு கேள்விகளை எழுப்ப செய்துள்ளது.
இந்த விஷயத்தில் மணிமேகலை தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், விளக்கம் கொடுக்க வேண்டிய பிரியங்கா, எதுகுறித்தும் கவலை கொள்ளாமல் வெளிநாடு சென்றுவிட்டார். போவதற்கு முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி எபிசோடை நிறைவு செய்துவிட்டே அவர் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்தான் டைட்டில் வின்னர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குக் வித் கோமாளி ஷோ: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தப்படியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி ஷோ. இந்த ஷோ கடந்த 2019ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஷோவில் குக்குகள், கோமாளிகள் மட்டுமில்லாமல் நடுவர்கள், ஆங்கர் என அனைவரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். மக்களின் துயரங்களை மறக்க செய்து அவர்களை சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியை சீசன்களாக மட்டுமில்லாமல் ரெகுலராக ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
விலகிய மணிமேகலை: இந்நிலையில் கடந்த சில தினங்களாக டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த ஆங்கர் மணிமேகலை, நிகழ்ச்சியிலிருந்து விலகும் அதிரடி முடிவை அறிவித்துள்ளார். கடந்த 4 சீசன்களாக நிகழ்ச்சியின் கோமாளியாக இருந்த அவர், இந்த சீசனில்தான் ஆங்கராக மாறினார். இந்நிலையில் நிகழ்ச்சியில் குக்காக இருந்த பிரியங்கா, தன்னை ஆங்கராக செயல்பட விடவில்லை என்றும் தன்னுடைய வேலைகளில் தொடர்ந்து குறுக்கிட்டு கடுப்பேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கர் ரஞ்சித் கருத்து: இந்நிலையில் இந்த விஷயத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மீடியாவில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஆங்கர் ரஞ்சித்தும் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய மனைவியுடன் இணைந்து பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் டாமினேஷன் இருந்ததை நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் உணர்ந்ததையும் சுட்டிக் காட்டியுள்ள அவர், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடுவர் வெங்கடேஷ் பட்டும் இதை எதிர்கொண்டதாகவும் அவர் இருந்திருந்தால், இந்த விஷயத்தை வேறுமாதிரி அணுகியிருப்பார் என்றும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா ஆதிக்கம்: பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையிலான ஈகோவும் இதில் செயல்பட்டுள்ளதாக ரஞ்சித்தின் மனைவி குறிப்பிட்டுள்ளார். நீ ஆங்கராக இருந்தாலும் நீ சொன்னால் நான் கேட்க முடியாது என்ற பிரியங்காவின் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டியுள்ளார். தான் 15 ஆண்டுகளாக சேனலில் இருப்பதால் யாருடைய பேச்சையும் கேட்க அவர் தயாராக இல்லாததையும் பேசியுள்ளார். இதனிடையே, கடந்த வாரத்தில் திவ்யா துரைசாமியின் எலிமினேஷனிலேயே இந்த பிரச்சினை துவங்கி விட்டதாக ரஞ்சித் கூறியுள்ளார். இந்த நேரத்தில்தான் மணிமேகலையை தன்னுடைய வேலையை செய்யவிடாமல் பிரியங்கா இடையூறு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விட்டுக்கொடுத்த ஆங்கர் டிடி: 15 ஆண்டுகளாக சேனலில் இருப்பதாக கூறிக் கொள்ளும் பிரியங்கா, மற்ற ஆங்கர்களை தலையெடுக்க விடாமல் செய்து வருவதாகவும் இதேபோல முன்னதாக பிரியங்கா சேனலுக்கு வந்தபோது சீனியர் ஆங்கராக இருந்த டிடி நினைத்திருந்தால் பிரியங்கா இவ்வளவு வளர்ந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். டிடி சேனலில் இருந்து விலகியதால் மற்றும் பிரியங்காவிற்கு விட்டுக் கொடுத்ததால்தான் பிரியங்கா, அந்த சேனலில் இத்தனை ஆண்டுகாலம் காலத்தை ஓட்ட முடிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிரியங்கா இர்பானுடன் சேர்ந்து சகோதரியாக பாசம் காட்டியதும் செயற்கைத்தனமாகவும் ரசிகர்களுக்கு எரிச்சலையும் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











