கல்யாணம் செய்யாம அம்மாவாக நினைக்கும் அனுஷ்கா.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தை டிவியில் பாருங்க!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது ஜீ தமிழ். சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சண்டே ஸ்பெஷலாக அனுஷ்கா நடித்த திரைப்படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படம் நாளை ஒளிபரப்பாக உள்ளது.
அனுஷ்காவிற்கு பாகுபலி படத்திற்குப் பிறகு பெரிய படங்கள் எதுவும் வரவில்லை. இந்த சூழலில் மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி. வித்தியாசமான கதையாக இருந்தாலும் துணிச்சலுடன் அனுஷ்கா இந்த படத்தில் நடித்ததற்கே அவரை பாராட்டலாம்.

தன்னுடைய அம்மாவின் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார் அனுஷ்கா. லண்டனில் சமையல் கலைஞராக இருக்கும் இவர், அம்மாவின் இறப்பிற்கு பின் இந்தியா வருகிறார். யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் அனுஷ்கா, திருமணமே செய்து கொள்ளாமல், உயிரணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதற்காக சரியான ஒரு ஆளை தேடி வரும் நேரத்தில் தான், நவீன் அனுஷ்கா கண்ணில் தென்படுகிறார். அவருடன் அனுஷ்கா நெருங்கி பழக, அதை காதல் என்று புரிந்து கொள்கிறார் நவீன். அதன் பிறகு இவர்களுக்குள் என்ன நடந்தது என்பது தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் கதை.
ஒரு விவாகாரமான கதையை இயக்குநர் மகேஷ் பாபு பச்சிக்கொல்லா, லாவகமாக எடுத்து சென்று இருப்பார். கதையில் சின்ன காட்சி மாறினாலும், அது மொத்தமும் சொதப்பலாக மாறிவிடும். அதை பக்குவத்துடன் இயக்குனர் கையாண்டிருப்பதற்கு படம் வெளியான போது பாராட்டுக்கள் குவிந்தன. அனுஷ்கா மற்றும் நவீன் இந்த படத்திற்கு சரியான தேர்வாக அமைந்திருக்கிறார்கள். கல்யாணம் ஆகாமலே அம்மாவாக நினைக்கும் வித்தியாசமான கதையில் அனுஷ்கா நடித்திருந்தார். செப்டம்பர் மாதம் தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (பிப்ரவரி 18-ம் தேதி) மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











