அரவிந்த் சாமியின் நினைவாற்றல்.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய அழகன்!
அழகாக இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. ஆனால் நேற்றைய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி பார்த்த பின்னர் அந்த கருத்து பொய்யாகிப் போனது.
விஜய் டிவியில் பிரகாஷ்ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் அரவிந்த் சாமி பங்கேற்றார்.
தளபதியில் கலெக்டராகவும், ரோஜாவில் அழகான கதாநாயகனாக வந்த அரவிந்த் சுவாமி, பம்பாய் படத்தில் பத்திரிக்கையாளனாக வந்தது 90 களில் பெரும்பாலான இளம் பெண்களை கவர்ந்தது. அவரை வெறும் நடிகராக மட்டுமே பார்த்து வந்தவர்கள் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த உடன் அரவிந்த் சுவாமியின் மற்றொரு பக்கத்தை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

அப்பா செல்லம்
பொதுவாக பெண் குழந்தைகள்தான் அப்பா செல்லமாக இருப்பார்கள். ஆனால் அரவிந்த் சுவாமி சரியான அப்பா செல்லமாக இருந்திருப்பார் போல. ஒவ்வொரு முறையும் அப்பாவைப் பற்றிய நினைவுகளை ஒரு தகவலாகப் பகிர்ந்து கொண்டார்.
கேள்விகளும் அவருக்கு ஏற்றார்போல அமைந்திருந்தது. வேதம் பற்றியதாகட்டும், எம்.எஸ்.சுப்புலட்சுமியை பற்றியதாகட்டும். ஒவ்வொரு பதிலுக்கும் அப்பாவின் நினைவுகள் வந்து சென்றன.

டாக்டர் ஆக ஆசைப்பட்டேன்
நடிகர்கள் அல்லது நடிகைகளிடம் ஒரு கேள்வி கேட்பார்கள். நடிக்க வராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் டாக்டர் ஆகியிருப்பேன் என்பதுதான், அரவிந்த் சுவாமிக்கும் டாக்டர் ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. கடைசியில் அப்பாவின் ஆசைப்படி பிசினஸ்மேன் ஆகிவிட்டேன் என்றார்.

பால் வண்டியில் பயணம்
நிகழ்ச்சி நடத்திய பிரகாஷ்ராஜ், ஒவ்வொரு முறையும், அரவிந்த் சுவாமியின் கலரையும், அழகையும் புகழ்ந்து கொண்டே இருந்தார். நிறைய பால் குடிப்பீர்களா என்று கேட்டார் பிரகாஷ்ராஜ். அதற்கு பதில் சொன்ன அரவிந்த் சுவாமி, வீட்டில் நிறைய மாடு இருக்கும், பால் கறந்திருக்கிறேன். பள்ளிக்கு செல்ல நேரமானால் பால் வண்டியில்தான் பயணம் செய்வேன் என்றார். ஒருவேளை அது கூட என் நிறத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறி சிரித்தார் பிரகாஷ்ராஜ்.

எந்த வேலையாக இருந்தாலும்…
டாக்டர் மட்டுமல்ல, நடிகன், பிசினஸ் மேன் இப்படி எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஆழ்ந்து போய் கற்றுக் கொண்டு செய்வேன் என்றார். அதில் பெஸ்ட் என்று பெயரெடுப்பேன் என்றார்.

ஆச்சரியப்பட்ட பிரகாஷ்ராஜ்
அரவிந்த் சுவாமியைப் பார்த்த பிரகாஷ்ராஜ், உங்களைப் பார்த்த ஒவ்வொரு விநாடியும் ஆச்சரியமாக இருக்கிறது என்றார் பிரகாஷ்ராஜ். உங்களுடன் நடித்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகாலம் பழகியிருக்கிறேன். ஆனால் அழகோடு, இத்தனை புத்திசாலியாக இருப்பீர்கள் என்று தெரியாது என்று கூறினார். அதற்கு, அதற்கு எனக்கே என்னைத் தெரியாது என்றார் அரவிந்த் சுவாமி.

வீட்ல கணக்கு டியூசன் எடுத்தேன்
கணக்கு, அறிவியல், சமஸ்கிருதம், எம்.எஸ் சுப்புலட்சுமி, கண்களின் நிறம் என பல கேள்விகளுக்கு பதிலோடு விளக்கத்தையும் சொன்ன அரவிந்த் சுவாமி, படம் நடிக்காமல் இருந்தபோது கணக்கு டியூசன் எடுத்தேன் என்றார். ஏனென்றால் கணக்கு மிகவும் விருப்பமான பாடம் என்றும் கூறினார்.

விளையாட்டில் ஜெயித்தார்
போட்டி கேள்விகளுக்கு இடையே அரவிந்த் சுவாமியின் நினைவாற்றலை சோதிக்கும் விளையாட்டு ஒன்றினை ஆரம்பித்தார் பிரகாஷ்ராஜ். 20 பொருட்களை வரிசைப்படுத்தி கூறிவிட்டு அவற்றின் எண்களை கூறினால் அது என்ன பொருள் என்று சொன்னார் அரவிந்த் சுவாமி. ஒவ்வொரு எண்ணிற்கும் சரியான பொருளை கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியின் தொடர்ச்சி இன்றைக்கும் இருக்கிறது. இதுவரை 1,60,000 ரூபாய் வென்றுள்ள அரவிந்த் சுவாமி இன்றைக்கும் விளையாடுகிறார். விஜய் டிவியில் பாருங்களேன்.


Click it and Unblock the Notifications











