பேச்சுவார்த்தை நடக்கிறது... பிக்பாஸுக்கு பிரச்சினையில்லை
ஃபெப்சி பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஃபெப்சி பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே பிரம்மாண்ட வீடு போன்ற அமைப்பில் நடந்து வருகிறது. 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் கொண்டு நடத்தப்படும் இந்த படப்பிடிப்பில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஃபெப்சி அமைப்பு கடந்தவாரம் வெள்ளியன்று பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே போராட்டம் நடத்தியது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி சம்மேனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வெளி மாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தார்.
மேலும், இப்பிரச்சனையை தீர்க்க சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜூன் 25 (இன்று) வரை அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்தும் நடவடிக்கை இல்லையெனில் 29 முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும், அன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
இதனால், பிக்பாஸ் படப்பிடிப்பிற்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக எண்டோமோல் நிறுவனம் ஃபெப்சி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
எனவே, பிக்பாஸ் படப்பிடிப்பில் பிரச்சினை ஏதும் ஏற்படாது, தொடர்ந்து கமலே இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இது தொடர்பாக எண்டோமோல் நிறுவனமும், ஃபெப்சி அமைப்பும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











