"தீதும் நன்றும் பிறர்தர வாரா".. சரவணன் எவிக்சன் பற்றி அன்னைக்கே சொன்ன கமல்.. நமக்குத்தான் புரியல!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கூறிய, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ சரவணனுக்குத் தான் சரியாக பொருந்தியுள்ளது.
சென்னை: தீதும் நன்றும் பிறர்தர வாரா என கடந்த வாரம் கமல் கூறியது, சரவணனுக்குத் தான் சரியாகப் பொருந்தியுள்ளது.
பெண்களைப் பேருந்தில் உரசியதாகக் கூறியதைக் கண்டித்து நேற்றிரவு அதிரடியாக சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஒருவரை இப்படி அவமானப்படுத்துவது போல் வெளியேற்றியதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சக போட்டியாளர்களுக்குக் கூட தெரியாமல் அவர் இரவிலேயே வெளியில் அனுப்பப்பட்டார். ஆனால், முன்கூட்டியே இதனை மக்களுக்கு மறைமுகமாகக் கூறி விட்டார் கமல். நமக்குத்தான் அது புரியவில்லை.

கமல் பேச்சு:
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான புரொமோ ஒன்றில், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா' என ஆரம்பித்திருந்தார் கமல். நிகழ்ச்சியிலும் அது பற்றி பேசினார். முன் செய்த செயல்களின் பயனே நமது தற்போதைய நிலைமைக்கு காரணம் என அவர் அப்போது கூறினார். மேலும், இது நமக்குத் தான் புரியவில்லை என்றார்.

சரவணன் வெளியேற்றம்:
அப்போது நமக்கும் சத்தியமாக அவர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரியவில்லை. ஆனால் நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டதன் மூலம், கமல் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. சரவணனின் வெளியேற்றத்தைத் தான் கமல் அப்படி பூடகமாக கூறினாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவரின் வார்த்தைகள் சரவணனின் வெளியேற்றத்துடன் சரியாகவே பொருந்தி போய் இருப்பது தான் ஆச்சர்யம்.

மன்னிப்பு:
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தன் கல்லூரி காலத்தில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் செல்வேன் என சரவணன் கடந்த சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார். இளைஞர்கள் அதுபோல் செயல்படக் கூடாது என்பதற்காகவே அப்படிச் சொல்லியதாக மன்னிப்பு கோரியபோது தெரிவித்தார். ஆனால், அதனை அவர் முழுமையாக சொல்லி முடிப்பதற்குள் கமல் வேறு விசயத்திற்கு தாவி விட்டார்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா:
அப்போது யார் நம்மைப் பார்க்கப் போகிறார்கள், கண்டிக்கப் போகிறார்கள் என நினைத்து அப்படியான செயல்களில் சரவணன் ஈடுபட்டிருப்பார். ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து சரவணனுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. நிச்சயம் இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். தீதும் நன்றும் பிறர்தர வாரா.. உண்மைதான்.


Click it and Unblock the Notifications











