மருதநாயகம்.. நாளை நமதே.. தேவர்மகன் 2.. ப்பா, ஒரே நாள்ல இத்தனை அப்டேட்டா.. அசத்திட்டீங்க கமல் சார்!
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார் கமல்.
சென்னை: தேவர்மகன் 2, நாளை நமதே, மருதநாயகம் என தனது படங்கள் பற்றி அடுத்தடுத்து அப்டேட்டுகளாகக் கொடுத்து மக்களை அசர வைத்து விட்டார் நடிகர் கமல்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் போட்டியாளர்களுடன் நடிகர் கமல் உரையாடுவது வழக்கம். அதன் பிறகுதான் போட்டியாளர்களில் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
அந்த வகையில், நேற்றைய நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு போட்டியாளரும் கடந்த வார டாஸ்க்கின்படி தங்களுக்கு தரப்பட்ட கதாபாத்திரமாக மாறி கமலிடம் கேள்வி கேட்டனர்.

நடிகர் சங்கம்:
விஜயகாந்த் கேட்பது போல் நடிகர் சரவணன், "நடிகர் சங்கத்தில் தாங்கள் ஏதும் பொறுப்பு வகிக்க ஆசை இல்லையா", என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல், நடிகர் சங்கத்தை பொறுத்தவரை தான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழிநடத்துவதாகக் கூறினார்.

ரீமேக் ஆசை:
சரோஜா தேவி வேடம் ஏற்ற மதுமிதா, "எம்ஜிஆர் படங்களை ரீமேக் செய்து நடிக்க விரும்பினால், எந்த படத்தை தேர்வு செய்வீர்கள்", எனக் கேட்டார், அதற்கு, "நான் மிஸ் செய்த படம் நாளை நமதே. அதை என்னால் ரீமேக் செய்ய முடியாது. அதனால் டைட்டிலை மட்டும் வாங்கி வைத்திருக்கிறேன். சிவாஜி படங்களை பொறுத்தவரை, தேவர்மகனை ரீமேக் செய்து, அதில் சிவாஜி நடித்த வேடத்தில் நடிக்க ஆசை", என பதிலளித்தார்.

பாராட்டு:
திரிஷாவாக இருந்து கேள்வி எழுப்பிய லாஸ்லியா, மன்மதன் அம்பு படத்தை பற்றி வினவினார். அந்த படத்தில் இடம் பெற்ற 'நீ நீல வானம்' பாடலுக்காகத்தான் மேற்கொண்ட பயிற்சிகளை பற்றியும், உழைப்பை பற்றியும் கமல் விரிவாக பேசினார். அப்போது குறுக்கிட்ட சேரன், ‘அது ஒரு அற்புதமான முயற்சி' என இயக்குநராக கமலை பாராட்டினார்.

ராவணன் காதல்:
பத்மினி வேடத்தில் இருந்த அபிராமி, காதல் பற்றி கமலிடம் கேட்டார். அப்போது 'உலகின் தலைச்சிறந்த காதல் ராவணனின் காதல் தான்' என்றார். மேலும், பத்து தலைகள் இருந்தாலும், ராவணனின் காதல் ஒருதலை காதல் தான் எனக்கூறிய கமல், நடக்கவே நடக்காது என தெரிந்திருந்தும் ராவணன் அப்படி காதலித்தார் என்றால் அவருக்கு எத்தனை அன்பும் வெறியும் இருந்திருக்க வேண்டும் என பதலளித்தார்.

சிம்பு கேள்வி :
சிம்பு வேடம் ஏற்ற சாண்டி, "யார் பர்ஸ்ட் போறாங்கங்குறது முக்கியமில்ல, லாஸ்ட்ல யார் பர்ஸ்ட் வராங்கங்க என்பது தான் முக்கியம் ", என்ற சிம்புவின் டயலாக்கை வைத்து கேள்வி கேட்டார். அதற்கு தனது வழக்கமான ஸ்டைலில் வேடிக்கையாக பதிலளித்தார் கமல். பின்னர் மருதநாயகம் படம் பற்றி அவர் கேள்வி எழுப்பினார். அதற்குக் கமல், ‘அதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதாக' தெரிவித்தார்.

ஸ்ருதியின் தோழி:
தமன்னாவாக மாறி கேள்விக் கேட்ட சாக்ஷி, ‘எப்போது உங்கள் படத்தில் எனக்கு வாய்ப்பளிப்பீர்கள்?' என சூசகமாகக் கேட்டார். அதற்கு தன் பாணியிலேயே, ‘அதை உங்க பெஸ்ட் பிரண்ட் ஸ்ருதிகிட்ட கேளுங்க' என பதிலளித்தார் கமல். கமலின் ஸ்ருதியும், தமன்னாவும் நல்ல தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கண் கலங்கிய கமல்:
விஜய்யாக முகென் கேட்ட கேள்விக்கு கமலே கொஞ்சம் கண் கலங்கித் தான் போனார். அதாவது பிக் பாஸ் வீட்டில் எந்த போட்டியாளராக மாறி உள்ளே வர உங்களுக்கு விருப்பம்?' என அவர் கேட்டார். அதற்கு அவர், ‘தர்ஷன்' பேரைச் சொன்னார். அதற்குக் காரணம் தான் தெனாலி படத்தில் நடித்ததை நிஜத்தில் அனுபவித்திருக்கிறார் தர்ஷன் எனப் பதிலளித்தார்.

குஷ்புவின் மறுபக்கம்:
குஷ்புவைப் போல் கேள்வி எழுப்பிய ஷெரீன், ‘என்னுடன் நடித்த படங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?' எனக் கேட்டார். அதற்கு கமல், ‘மைக்கேல் மதன காமராஜர்' என்றார். ஏனென்றால் அப்படத்தில் நான்கு கதாநாயகிகள் இருந்தபோதும், குஷ்பு அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியதாக பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











