“விஜய் சேதுபதி தான் எல்லாத்துக்கும் காரணம்”.. மொட்டக்கடுதாசிக்காக சிதம்பர ரகசியத்தை சொன்ன சேரன்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள நடிகர் விஜய் சேதுபதி தான் காரணம் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களில் இம்முறை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தவர் இயக்குநர் சேரன் தான்.
காரணம், சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் அல்லது புதிய வாய்ப்புகளைத் தேடி வருபவர்கள் தான், மக்களிடம் பிரபலம் ஆக வேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது வழக்கம். கமலே கூட இதனை பலமுறை மேடைகளில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த சீசன் டைட்டில் வின்னரான ரித்விகா கூட, தனக்கு படவாய்ப்புகள் அமைய வேண்டும் என்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கமல் முன்னிலையிலேயே வெளிப்படையாகச் சொன்னார்.
ஆனால், சேரனின் நிலைமை அப்படியில்லை. ஏற்கனவே தரமான படங்கள் கொடுத்து, தேசிய விருதுகள் பெற்று மக்களிடம் பிரபலமானவர் அவர்.

பரிதாபம்:
இவர் போய், தேவையில்லாமல் இம்முறை பிக் பாஸ் வீட்டிற்குள் மாட்டிக் கொண்டாரே என மக்கள் மத்தியில் பரிதாபம் ஏற்பட்டது. பிக் பாஸில் கலந்து கொண்டவர்களின் பெயர் சமயங்களில் தவறான முறையில் கூட மாறி விடுவதுண்டு. இதனால், அவரது சக திரையுலக நண்பர்களும் கூட, ‘சேரனுக்கு இது தேவையில்லாத வேலை, அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கக் கூடாது' என விமர்சித்து வருகின்றனர்.

மீரா புகார்:
அதற்குத் தகுந்தாற்போல், கடந்த வாரம் சேரன் மீது மீரா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தனை நாள் சேர்த்து வைத்த நல்ல பெயரை இந்த நிகழ்ச்சிக்கு வந்து கெடுத்துக் கொண்டோமோ என சேரனே நிச்சயம் இந்த சம்பவத்தால் கொஞ்சம் யோசித்திருப்பார். மக்கள் மனதிலும் இந்த கேள்வி தொடர்ந்து எழும்பிக் கொண்டே இருந்தது. பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியிலும் இந்த சந்தேகம் இருந்து வந்தது. சேரனிடம் இது பற்றி வெளிப்படையாக பேச முடியாமல், மரியாதை காரணமாக தயங்கி வந்தனர் போட்டியாளர்கள்.

மொட்டக் கடுதாசி டாஸ்க்:
இந்நிலையில், நேற்று வழங்கப்பட்ட மொட்டக் கடுதாசி டாஸ்க் அவர்களுக்கு வசதியாக அமைந்து விட்டது. சேரன் ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்? என மக்களின் பிரதிநிதியாக அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சேரன், ‘மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததாக' கூறினார்.

விஜய் சேதுபதி தான் காரணம்:
அதோடு, நடிகர் விஜய் சேதுபதி தான் தன்னை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியது ஆச்சர்யமாக இருந்தது. ‘இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் உங்கள் முகத்தை மீண்டும் நினைவு படுத்துங்கள் என விஜய் சேதுபதி கொடுத்த அறிவுரையின் காரணமாகவே தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததாக' சேரன் கூறினார்.

உருப்படியான டாஸ்க்:
இந்த மொட்டக்கடுதாசி டாஸ்க்கின் மூலம் கவின், சாக்ஷி, லாஸ்லியா மற்றும் அபிராமி, முகென் ஆகியோருக்கு இடையே என்ன உறவு உள்ளது என்ற நீண்ட நாள் குழப்பம் மக்கள் மத்தியில் இருந்து நீங்கியுள்ளது. அதேபோல் சேரன் ஏன் பிக் பாஸுக்கு வந்தார் என்ற கேள்விக்கு பதிலும், அவர் மூலமாகவே தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











