சரவணன் வெளியேற்றம்: கமல் சொல்லியும் கேட்காத பிக் பாஸ்... அப்போ உங்களுக்கு கண்டென்ட் தான் முக்கியமா?
தொடர்ந்து மக்களின் உணர்வுகளோடு விளையாண்டு வருகிறார் பிக் பாஸ்.
Recommended Video
சென்னை: கமல் பேச்சை கேட்காமல் தொடர்ந்து பிக் பாஸ் இப்படியே நடந்து வருவது மக்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டென்ட் மட்டும் தான் பிரதானமாக இருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களில் டிஆர்பியை ஏற்றுவதற்காக, பிக் பாஸ் என்னவெல்லாம் செய்தார் என்பது ரசிகர்கள் அறிந்தது தான்.
மூன்றாவது சீசனிலும் அது தொடர்ந்து வருகிறது. வழக்கம்போல, இந்த சீசனிலும் ஆரம்பத்தில் இருந்தே காதல் பிரச்சினையை வைத்தே கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.

சரவணன்:
ஆனால், இடையில் கொஞ்சம் மாறுதலுக்காக சேரன் -மீரா பிரச்சினை, சரவணன் - சேரன் பிரச்சினையைக் கையில் எடுத்தனர். தற்போது, சரவணனை அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி புதிய கண்டெண்ட் கொடுத்துள்ளனர். ஊரெல்லாம் சரவணன் வெளியேற்றத்தைப் பற்றிய பேச்சாகத்தான் உள்ளது.

டிராமா குயின்கள்:
அதிலும் சக போட்டியாளர்கள், சரவணன் வெளியேறியது அறிந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்கள். டிராமா குயின்களான மதுவும், அபிராமியும் வராத கண்ணீரை கஷ்டப்பட்டு வரவைத்து அழுது சீன் போட்டார்கள். ஆனால் இது பார்ப்பதற்கு உருக்கமாகத்தான் இருந்தது. நிச்சயம் அன்று டிஆர்பி எகிறி இருக்கும்.

கமல் அறிவுரை:
ஏற்கனவே, கவின் காதல் விவகாரத்தின் போது, கமல் ஒரு அறிவுரை கூறினார். அதாவது மற்றவர்களின் உணர்ச்சியோடு விளையாடாதீர்கள் என்பது தான் அது. ஆனால், அது போட்டியாளர்களுக்கு மட்டும் தான் என பிக் பாஸ் நினைத்து விட்டார் போலும். அதனால் தான் போட்டியாளர்களின் உணர்ச்சிகளோடு மட்டுமல்லாமல், பார்வையாளர்களின் உணர்ச்சிகளோடும் சேர்த்து விளையாடுகிறார்.

பிக் பாஸ்:
அதோடு, சரவணனை அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது பிக் பாஸ் தான். ஆனால், போட்டியாளர்களிடம் தவிர்க்க முடியாத காரணங்களால் சரவணன் வெளியேறி விட்டதாக வார்த்தையை மாற்றிக் கூறினார். இதனால் அய்யோ அவருக்கு என்னப் பிரச்சினையோ என போட்டியாளர்கள் வேதனையும், குழப்பமும் அடைந்தனர்.

விளக்கம்:
சிறிது நேரம் அவர்களை அழுது புலம்ப விட்டு, பின்னர் சரவணனுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ ஒரு பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்தார். இதனை முன்பே கூறியிருந்தால் போட்டியாளர்கள் இந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் பிக் பாஸுக்கு கண்டெண்ட் கிடைத்திருக்காது அவ்வளவு தான்.

சேரன் ரசிகர்கள்:
நேற்றும் கூட புரொமோவில் சேரன் டாஸ்க்கில் கீழே விழுந்து விட்டது போல் காட்டினார்கள். அய்யோ அவருக்கு என்னமோ ஆகிவிட்டதோ என அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கவலை தெரிவித்து வந்தனர். ஆனால், எபிசோட்டில் அவர் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளத்தான் அப்படி படுத்திருந்தது தெரிய வந்தது.

டிஆர்பிக்காக விளையாட்டு:
இப்படியாக தனக்கு கண்டெண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், மற்றும் மக்களின் உணர்வுகளோடு பிக் பாஸ் அநியாயத்திற்கு விளையாடுகிறார். கவினைக் கண்டித்தது போல், கமல் பிக் பாஸையும் கண்டிக்க வேண்டும். ஆனால் அது நடக்க சாத்தியமில்லை. ஆனால் ஒன்று நிச்சயம் புலி வருது கதையாக தேவையில்லாத விசயங்களை எல்லாம் பிக் பாஸ் இப்படி பில்டப் செய்தால், மக்களுக்கு அலுத்துப் போய் சேனலை மாற்றி விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.


Click it and Unblock the Notifications











