"என்னை பலிகடா ஆக்கணும்னு நினைக்குறாங்க..அது முடியாது" வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியிட்ட வீடியோ
சென்னை: பிரபல விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் வழக்கத்தை விட சமூக வலைதளங்களில் பிரபலமான போட்டியாளர்கள் அதிகம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்டான திவாகர் தன்னை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக விமர்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அடிப்படையில் மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும், சமூக வலைதளங்களில் துணிச்சலுடன் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமானார்.குறிப்பாக, சூர்யாவின் 'கஜினி' திரைப்படத்தில் வரும் தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீல்ஸ் செய்து கடுமையான ட்ரோல்களையும், கேலிகளையும் எதிர்கொண்டாலும், அவற்றைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டார். இந்த ரீல்ஸ் மூலம் கிடைத்த அடையாளமே, அவருக்கு 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்ற பட்டத்தையும், பிக்பாஸ் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

மேலும், தன்னுடைய நடிப்புத் திறமையை தானே புகழ்ந்து, நடிகர் சிவகியாரை விட தான் சற்றும் குறைந்தவர் இல்லை என்றும், தான் தான் 'நடிப்பு அரக்கன்' என்றும் திவாகர் பேசி வந்தது கூடுதல் சர்ச்சைகளைக் கிளப்பியது. இப்படிப் பல விமர்சனங்களுக்கு மத்தியில், 20 போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் தனது பங்களிப்பைக் கொடுத்து வந்த திவாகர், நேற்று (நவம்பர் 17) நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரது எலிமினேஷன் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மற்றொரு பிரிவினர் மத்தியில் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
வீட்டை விட்டு வெளியே வந்த வேகத்தில் திவாகர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தன்னைப் பற்றிச் சமூக வலைதளங்களில் சிலர் தவறான விமர்சனங்களை முன்வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, தாம் தேவையே இல்லாமல் சாதி குறித்த தவறான கருத்துகளைப் பேசியதாகப் பொய்ப் பிரசாரத்தைப் பரப்பி வருவதாக அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
சமூக வலைதளங்களில் நடக்கும் இந்தப் பொய்ப் பிரசாரத்தை எதிர்த்து அவர் ஆவேசமாகப் பேசியதாவது:
"தேவையை இல்லாமல் நான் சாதியை பற்றி பேசியதாக பொய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். ஒருத்தர் வளர்ந்துவிட்டார் என்பதற்காக நின்னா குத்தம் நடந்தா குத்தம் என்று சொல்கிறார்கள். இது பொய்யான குற்றச்சாட்டு. பொய்யான நபர்கள் நல்லா தெரிந்து கொள்ளுங்கள் மனுஷனுக்கு மனுஷன் அமுக்கதான் ட்ரை பண்ணுவாங்க. இதற்கு வாட்டர் மெலன் ஸ்டாரை பலிகடா ஆக்கணும்னு நினைக்குறாங்க அது முடியாது. மக்கள் செல்வாக்கு இருக்கு. ஒரு நல்ல மருத்துவரை, சமூகத்தில் அந்தஸ்தாக இருப்பவரை தனி நபர் திறமையை அழிப்பதற்கு நிறைய பேர் வருவார்கள். விமர்சனங்களை கடக்காமல் நாம் முன்னேற முடியாது"
திவாகரின் இந்தப் பரபரப்பான வீடியோ, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே சமூக வலைதளத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











