Bigg Boss: விஜய் சேதுபதிக்கே மதிப்பு இல்லை.. பிக் பாஸ் போட்டியாளர்களால் காண்டாகும் ரசிகர்கள்.. முடியல!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி, போட்டியாளர்களுக்கான ஆட்டம் எண்ணி வைத்ததைப் போல 10 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் இந்த சீசன் குறித்த நல்ல அபிப்பிராயம் என்பது பெருவாரியான ரசிகர்கள் மனதில் ஏற்பட வில்லை என்பதுதான் எதார்த்தமாக உள்ளது. ரசிகர்களுக்கு ஏற்பட்ட முதல் அதிருப்தி என்பதே போட்டியாளர்கள் தான். வழக்கமாக சினிமா பிரபலங்கள் தொடங்கி, சின்னத்திரை பிரபலங்கள், அண்டை மாநிலத்தில் இருந்து வந்த பிரபலங்கள், வட மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் சினிமா பிரபலங்களை தான், போட்டியாளர்களாக களமிறக்குவார்கள்.
ஆனால் இம்முறை, பெரும்பாலும், இன்னும் சொல்லப்போனால் அனைத்து போட்டியாளர்களும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது சந்தோஷம் தான் என்றாலும், அந்த சந்தோஷத்தை கொண்டாடும் அளவுக்கு அவர்களின் ஆட்டமும், நடவடிக்கைகளும் இல்லை என்பது விமர்சனமாக உள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களையாவது களமிறக்கி இருக்கலாம். ஆனால் இம்முறை இறக்கப்பட்ட போட்டியாளர்கள் பெரும்பாலும் சமூக வலைதளத்தில் இன்ஃபூளியன்சர்களாக இருப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள், சிலர் சின்னத்திரை பிரபலங்களாக இருக்கிறார்கள்.

இந்த போட்டியாளர்களை களமிறக்கியதில் ரசிகர்களுக்கு விமர்சனமும் அதிருப்தியும் இருந்தாலும், அவர்கள் என்ன விமர்சனங்களை முன் வைத்தார்களோ, அதற்கு ஏற்றதைப் போல அவர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகிறது. அதாவது, போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் போது மிகவும் மோசமாக, இன்னும் சொல்லப்போனால் கொச்சையாக விமர்சித்துக் கொள்வது வீட்டில் குழந்தைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்றே கூறலாம்.
எச்சரித்த விஜய் சேதுபதி: உதாரணத்திற்கு, கடந்த வார இறுதியில் விஜய் சேதுபதி, போட்டியாளர் கம்ருதீனின் மோசனமான நடவடிக்கைகளுக்கு அவரைக் கண்டித்தார். அதாவது, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கமருதீன் மிகவும் மோசமாக ஒருமையில் திட்டியது மட்டும் இல்லாமல், மிகவும் கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தினார். இதை விஜய் சேதுபதி மிகவும் கடுமையாக எச்சரித்த பின்னர், மன்னிப்பு கேட்ட கம்ருதீன், அதன் பின்னர் இது போல் நடந்து கொள்ள மாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.
கம்ருதீனின் அநாகரீக செயல்: ஆனால், அவர் விஜய் சேதுபதி சொன்னதை மதிக்காமல், மீண்டும் வாட்டர் மெலன் ஸ்டாரை அவரது உருவத்தை வைத்து, மோசமாக பேசினார். அதேபோல், டாஸ்க்கின் போது வாட்டர் மெலன் ஸ்டார் பேசி முடித்ததும் காரித் துப்புவது போல செய்துவிட்டு, தெரியாமல் செய்ததாக மழுப்பினார். கம்ருதீன் இப்படி என்றால், போட்டியாளர் எஃப்.ஜே அடிப்படை அறிவு கூட இல்லாத நபராக நடந்து கொள்கிறார். அதாவது கம்ருதீன் துப்பியதும், அதைக் கண்டித்தார் பார்வதி, அதற்கு எஃப்.ஜே திவாகருக்காக திவாகர் பேச வேண்டியதுதானே, பார்வதி ஏன் பேசுகிறார் என்று சண்டை போடுகிறார். கம்ருதீன் செய்த விஷயம் கண்டிக்கத்தக்கது.

மோசமான உடல் மொழி: அதை மொத்த பிக் பாஸ் வீட்டாருமே கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்வதி மட்டும் கண்டித்தது பாராட்டுக்குரியதுதான். சக மனிதன் அவமதிக்கபடும் போது அந்த நபர் மட்டுமே தனக்காக பேசிக் கொள்வது மட்டும் தான் மனித இயல்பாக இருந்திருந்தால், இந்த சமூகத்தில் இவ்வளவு நாகரீகம் என்பது இருந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல், எஃப்.ஜேவுக்கும் கானா வினோத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எஃப்.ஜேவின் உடல் மொழி என்பது மிகவும் மோசமானதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவரது சைகை, " சாம்பிராணி புகை போடு" என்று சொல்வதைப் போல இருந்தது.

சகிப்புத்தன்மை: அடுத்ததாக வி.ஜே. பார்வதி. இவர் சில நேரங்களில் சகிப்புத்தன்மை என்ற எண்ணத்திற்கு உள்ளே வர மறுக்கிறார். ஒரு வீடு, அதுவும் சில விதிமுறைகளுக்கு உட்பட்ட வீடு, அதில் தன்னுடன் வசிப்பவர்களுடன் சில நேரங்களில் சகிப்புத்தன்மையுடன் இருப்பதுதான் சரியாக இருக்க முடியும். ஆனால் பார்வதி அந்த கான்செப்ட்குள்ளே வர மறுக்கிறார். அதேபோல், போட்டியாளர் சபரி மீது, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு சபரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதாவது சபரி, ஆள் பார்த்து சாப்பாடு வைக்கிறார் என்று திவாகர் குற்றம் சாட்டினார். அதே குற்றச்சாட்டை நேற்றைய எபிசோடில் கானா வினோத்தும் சபரியிடம் குறிப்பிட்டார். அப்போது, சபரி அமைதியாக இருந்து கொண்டார். இவரது மனநிலை என்பது திவாகரை ஒரு மாதிரியாகவும், வினோத்தை ஒரு மாதிரியாகவும் மதிப்பீடு செய்திருப்பது தான் காரணமாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

அதிருப்தி: வழக்கமாக பிக் பாஸ் என்றாலே, அதன் போட்டியாளர்கள் சமூகத்தின் பிரதிபலிப்புகள் என்றுதான் ரசிகர்களால் அளவிடப்படுகிறது. சீசனுக்கு சீசன் யாரோ ஒரு சிலர் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் போட்டியாளராக இருப்பார். ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்கள் பலரும் எரிச்சலூட்டும் போட்டியாளர்களாக இருப்பது இந்த சமூகத்தின் தவறான பிரதிபலிப்புகளா இவர்கள், அல்லது இன்றைய சமூகம் இப்படித்தான் இருக்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications











