கிராமத்து பொண்ணு டூ பிக் பாஸ் வின்னர்.. பல வலிகளுக்கு பின் கிடைத்த முதல் ட்ராஃபி.. திவ்யாவின் ஸ்டோரி
சென்னை: பிக் பாஸ் சீசன் 9ன் டைட்டிலை திவ்யா கணேஷ் தட்டி தூக்கி உள்ளார். பிக் பாஸ் வீட்டில் யாருமே எனக்கு நண்பர்கள் இல்லை என்று கண்ணீர் விட்டு விக்கி அழுத திவ்யா தான், இன்று பல லட்சம் மக்களின் மனதை வென்று டைட்டிலை தட்டி தூக்கி உள்ளார். இவை அனைத்தும் திவ்யாவிற்கு எளிதாக கிடைத்துவிடவில்லை, பல அவமானங்கள், வெறுப்புகள், பல உதாசீனங்களை தாண்டி இன்று அவர் வெற்றி பெற்றுள்ளார். திவ்யா கணேஷ் கடந்து வந்த பாதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை திவ்யா கணேஷ், செப்டம்பர் 12ந் தேதி 1994ஆம் ஆண்டு பிறந்தார். 31வயதை எட்டி இருக்கும் திவ்யா கணேஷிற்கு இரண்டு அண்ணன், இரண்டு அக்கா என பெரிய குடும்பம். நடிப்புக்கும், சினிமாவிற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லாத குடும்பத்தில் இருந்து நடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு பல கம்பேனிகளில் காத்து இருந்தவர்களில் இவரும் ஒருவர். சினிமா எல்லாம் நம்ப குடும்பத்திற்கு செட் ஆகாது, ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு என ஆரம்பத்தில் பெற்றோர் திவ்யாவிற்கு முட்டுக்கட்டை போட்டாலும், அவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு மகளின் ஆசைக்கு வழிவிட்டனர்.

சீரியல் என்ட்ரி: 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்' என்ற கதையாக அவ்வளவு சீக்கிரம் திவ்யாவிற்கு வாய்ப்பு வரவில்லை. பல கட்டம் முயற்சிகளுக்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக 'பிரியமானவளே சீரியலில்' உமா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த சீரியலில் நடித்த போது, சீரியலில் ஏற்பட்ட பிரச்சனையால், "ரெட் கார்டு" கொடுக்கப்பட்டு சீரியலில் இருந்து வெளியேறினார். இதனால் மனம் நொந்து போன திவ்யா, இனிமேல் எதுவுமே வேண்டாம் என நினைத்த போது தான் அவருக்கு, மீண்டும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் 'ஜெனி' என்ற கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

டைட்டில் வின்னர் திவ்யா: ஓரளவு நினைத்ததை அடைந்துவிட்டோம் இனி அடுத்தடுத்து சீரியலில் நடிப்போம் என மனசு பறந்தே நேரத்தில் தான், மீண்டும் திவ்யாவின் வாழ்க்கையில் ஒரு புயல் வீச ஆரம்பித்தது. நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கேசுரேஷ் உடன் நிச்சயதார்த்தம் நடந்து, அனைத்து மீடியாக்கள் முன்னிலையில் இவர் தான் கணவர் என அறிவித்த பிறகு திவ்யாவிற்கும் ஆர்.கே.சுரேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிச்சயத்தோடு திருமணம் நின்று போனது. நடிகை என்பதால் திருமணம் நின்று போனது, திவ்யா சரியில்லை என ஏச்சும் பேச்சுக்கும் ஆளான திவ்யா மனதளவில் பாதிக்கப்பட்டு மிகவும் துவண்டு போனார். பின் மன அழுத்தத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த திவ்யா இப்போது, பிக் பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கி உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நட்புகளை சம்பாதிக்கவில்லை, யாருடனும் நான் நட்போடு பழகவில்லை, எனக்கு யாரும் இல்லை என துவண்டு அழுத திவ்யா இன்று பல லட்சம் மக்களின் மனதை வென்றுள்ளார். மற்றவர்கள் வாங்கிய விருதை வேடிக்கைப்பார்த்து ஏங்கி தவித்த திவ்யா, தனது நேர்மையான விளையாட்டால், பிக் பாஸ் கோப்பையை வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தன் நம்பிக்கையும், தைரியமும் ஒரு பொண்ணுக்கு இருந்தால் அந்த தெய்வமே இறங்கி வந்து துணை நிற்கும் என்பதற்கு திவ்யா கணேஷ் ஒரு உதாரணம்.


Click it and Unblock the Notifications











