எங்க போனாலும் ஜெயிச்சிட்டுதான் வருவான்.. விலக்கி வெச்சிருந்தேன்.. முத்துக்குமரன் தாய் எமோஷனல்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்றுடன் முடிவடைய போகிறது. இந்த சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உறுதியான தகவல் இன்று மாலை தெரிந்துவிடும். முத்துக்குமரன் வென்றுவிட்டார் என்று தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். மேலும் அவரது எதிர்காலம் மென்மேலும் வளம் பெறும் என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழில் இதுவரை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். ஆனால் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து இந்த சீசன் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. முதலில் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெரிய பிரபலமடையாதவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதனையடுத்து வைல்டு கார்டு மூலம் 6 போட்டியாளர்கள் சென்றார்கள்.

சுவாரஸ்யம் இல்லை:முதலில் சென்ற 18 போட்டியாளர்கள் பெரிதாக எந்த கன்டெண்ட்டும் கொடுக்கவில்லை. போதாகுறைக்கு விஜய் சேதுபதியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது பேசுகிறார் பேசுகிறார் பேசிக்கொண்டே இருக்கிறார் போன்ற பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் நிகழ்ச்சியில் எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லை என்றும் ஓபனாகவே ரசிகர்கள் கூறினார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
முத்துக்குமரன்: இந்த சீசனில் பலரை கவர்ந்த போட்டியாளர் என்றால் அவர் முத்துக்குமரன்தான். இவர் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். மேலும் சில தனியார் ஊடகங்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். முற்போக்கு சிந்தனையும், தமிழ் ஆர்வமும் உடைய இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செய்த செயல்கள் சில விமர்சனங்களை சந்தித்தாலும் பல செயல்கள் மக்களிடையே வரவேற்பையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வின்னர் முத்துக்குமரன்: கண்டிப்பாக இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னராக வருவார் என்று பலர் நினைத்தார்கள். அதன்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து முதல் ரன்னர் அப்பாக சௌந்தர்யாவும், இரண்டாவது ரன்னர் அப்பாக விஷாலும் வந்திருக்கிறார்களாம். இன்று மாலை உறுதியான தகவல் தெரிந்துவிடும். டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு பரிசு தொகையாக 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் அவர் எடுத்த பண பெட்டியில் இருந்த 50 ஆயிரம் ரூபாய், 106 நாட்கள் இருந்ததற்கு சம்பளமாக 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் செல்லும்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு அவரது தாய் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எனது பிரசவத்தில் முதலில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் மருத்துவர் என்னிடம் இன்னொரு குழந்தை வயிற்றுக்குள் இருக்கிறது என்று சொல்லி முத்துக்குமரனை வெளியில் எடுத்தார். எனவே வளரும்போதிருந்தே முத்துக்குமரனிடம் நான், நீ பிறக்கும்போதே பலரையும் திரும்பி பார்க்க வைத்து பிறந்தவன்.
விலக்கி வெச்சிருந்தேன்: அதனால் வளரும்போதும் பலரையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்று கூறுவேன். அவனும் எங்கே சென்றாலும் வென்றுவிட்டுத்தான் வருவான். அவன் என்ன கஷ்டப்பட்டாலும் என்னிடம் சொல்லிக்கொண்டதே கிடையாது. சந்தோஷத்தை மட்டும்தான் கூறுவான். எனது மடியில் படுத்ததே இல்லை என்று அவன் பிக்பாஸில் சொன்னான். நான் பட்ட கஷ்டங்களால் அவனிடமிருந்து நான் விலகியே இருந்தேன். அவனை நான் விலக்கியே வைத்திருந்தேன். இனி அப்படி இருக்கக்கூடாது"என்றார்.


Click it and Unblock the Notifications











