சத்தியம் டிவியின் “ரெடி ஆக்சன் குக்” சமையல் நிகழ்ச்சி
சத்தியம் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி தினசரி மதியம் ஒளிபரப்பாக உள்ளது. இல்லத்தரசிகள் மட்டுமல்ல, பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சமைக்கின்றனர்.
தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளுக்கு தனி வரவேற்பு உண்டு. சண்டே சமையல் தொடங்கி என் சமையல் அறையில், கிராமத்து சமையல், அறுசுவை விருந்து, அஞ்சறைப் பெட்டி என சமையல் நிகழ்ச்சிகளுக்கு நீண்ட பட்டியலே உண்டு.
சாதாரண சமையல் மட்டுமல்லாது மையலைத் தூண்டும் சமையல் நிகழ்ச்சியும் இரவு நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த வரிசையில் சத்தியம் டிவியில் 'ரெடி ஆக்சன் குக்' என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

வாரந்தோறும் விதம் விதம்
மூன்று விதமான சமையல்கள் வார நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணியில் இருந்து 2 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

இல்லத்தரசிகளின் அனுபவ சமையல்
முதல் பகுதியாக அனுபவ சமையல் ஒளிபரப்பாகிறது. இதில் இல்லத்தரசிகளின் கைவண்ணம் இடம் பெறும். சமையல் செய்ய விருப்பம் உள்ளவர்கள், சத்தியம் தொலைக்காட்சியின் 8754448765 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பிரபலமான மாஸ்டர் சமையல்
இரண்டாவது பகுதியான ‘மாஸ்டர் சமையலில்' பிரபல நடனக்கலை இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் தனது சமையல் கலையை வெளிப்படுத்துகிறார். நடனம் மட்டுமே ஆடத்தெரியும் என்று அறிந்திருந்த மக்கள் சிவசங்கரின் சமையல் கலையை அறிந்து கொள்ளலாம்.

தினம் ஒரு புதிய சமையல்
நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் ‘புதுப்புது சமையல்' செய்து நேயர்களுக்கு சுவை கூட்டுகிறார் மீனாட்சி. நிகழ்ச்சியை தொகுத்து இயக்கியுள்ளார் வைதீ. சத்தியம் தொலைக்காட்சியின் ரெடி ஆக்சன் குக் பிற சமையல் நிகழ்ச்சிகளில் இருந்து வித்யாசமாக இருக்குமா? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











