எல்லாம் முடிஞ்சு போச்சு.. இனி குக் வித் கோமாளி ஷோ இல்லை.. விஜய் டிவியின் அடுத்த பிளான்!
சென்னை: அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கும் போதே எப்படி பிரச்சனைக்கு மத்தியில் தொடங்கியதோ, அதைப்போல முடியும் போதும் பிரச்சனையோடு தான் முடிந்துள்ளது. தற்போது ஐந்தாவது சீசன் முடிவடைந்துள்ளதால், அதற்கு பதிலாக புது சமையல் நிகழ்ச்சியை தொடங்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்கோ, இதைப்போல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்கள் இருக்கிறார். குக்குகள் விதவிதமாக சமைக்க அவர்களுக்கு உதவி செய்ய இருக்கும் கோமாளிகள் அவர்களுக்கு குடைச்சல் கொடுப்பது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கான்செப்ட். முதல் சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து வந்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வந்தன.

குக் வித் கோமாளி சீசன் 5: பிக் பாஸ் சீசன் முடிந்த கையோடு குக்வித் கோமாளி சீசன் தொடங்கும் அந்த வகையில், ஐந்தாவது சீசன் ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த சீசன் ஆரம்பிக்கும் போதே, நான்கு சீசன்களாக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். இதையடுத்து, வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்தார். ரக்ஷன் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
மணிமேகலை விலகினார்: குக் வித் கோமாளி முடியும் தருவாயில் இருந்த போது, பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், பிரியங்கா, தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி என் வேலையில் மூக்கை நுழைக்கிறார் என்றும், தன்னை வேலை செய்யவிடாமல் தடுக்கிறார் என்று, அறிக்கை வெளியிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மணிமேகலை.
டைட்டில் வின்னர்: இப்படி ஒரு பக்கம் பஞ்சாயத்து சென்று கொண்டு இருக்க,பிரியங்கா தேஷ்பாண்டே, விடிவி கணேஷ், ஷாலின் சோயா, சுஜிதா, இர்பான், பூஜா குக் வித் கோமாளி பைனலிட்டாக சென்றனர். இதில் சிறப்பாக சமைத்த பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார். இதற்கு அடுத்தபடியாக சுஜிதா இரண்டாவது இடத்தை பெற்றார். டைட்டிலை வென்ற பிரியங்காவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
விஜய் டிவி எண்ட் கார்டு: இப்படி சர்ச்சையோடு ஆரம்பித்து சர்ச்சையோடு முடிவடைந்துள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு விஜய் டிவி எண்ட் கார்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அதாவது, வேறு ஒரு சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொடங்க இருப்பதாகவும், இந்நிகழ்ச்சியின் நடுவர்களான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமுவே கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றும், மேலும், ரக்ஷன், ஜாக்குலின் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் குக் விக் கோமாளி சீசன் தொடங்கும் ஆனால், குக்கிங் வித் விஜய் ஸ்டார் என்கிற பெயரில் இந்த ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதில் கோமாளிகள் இருப்பார்களா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











