பூரணியின் திருமணம்… பரபரப்பாக நகரும் தேவதை!
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிவரும் தேவதை நூறு எபிசோடை கடந்திருக்கிறது. பூரணி என்ற இளம்பெண்ணின் புதுமை சிந்தனையே கதைக்கரு.
28 வயது இளம் பெண் பூரணி வீட்டிலேயே இட்லி கடை நடத்துகிறாள். தனக்கு திருமணம் ஆகாத சூழலிலும், தன்னை நம்பி வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்ப்பவள்.
இந்த காதல் திருமணங்களைக் கூட அவள் சாமர்த்தியமாக செய்து வைத்து தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறாள். இதனால் பல பெற்றோரின் எதிர்ப்பை சம்பாதிக்கிறாள். ஆனால் அதற்காக அவள் கவலைப்பட வேண்டுமே... அது தான் இல்லை.

அம்மாவின் கவலை
இப்படி ஊருக்கு திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தால் எப்படி? தன் மகளுக்கும் திருமணம் நடந்தாக வேண்டாமா? இது பூரணியின் அம்மா கவலை.

ரகசிய திருமணம்
பூரணியுடன் பிறந்த உடன்பிறப்புக்கள் மூவரும் தாய்க்குத் தெரியாமலே ரகசிய திருமணம் செய்து அதைவிடவும் ரகசியமாக குடும்பம் நடத்துகிறார்கள். ‘மகள் பூரணிக்கு திருமணம் நடந்த பிறகே உங்கள் திருமணம் பற்றி யோசிக்க முடியும்' என்ற அம்மா சொல்லப் போக, மகன்கள் இப்படி ரகசிய முடி வெடுத்து விட்டார்கள்.

இரண்டாவது திருமணம்
இவர்களில் மூன்றாவது மகன் தனது மனைவியுடன் தேனிலவுக்கு வெளியூர் போனஇடத்தில் ஒருவரை சந்திக்கிறான். மனைவியை இழந்த அவர் தனது 4 வயதுக் குழந்தையை வளர்க்க போராடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இன்னொரு திருமணம் செய்து கொள்வது தானே என்று தன் சகோதரியை மனதில் வைத்துக் கொண்டு கேட்கிறான்.

பூரணி சம்மதிப்பாளா?
அவரோ ‘எனக்கு மனைவி கிடைப்பதைவிட என் மகளுக்கு ஒரு நல்ல தாய் கிடைத்தால் போதுமானது' என்கிறார். அதன்பிறகே தனது சதோதரி பற்றி கூறுகிறான். அவரும் சம்திக்க, சகோதரி திருமண விஷயமாய் அம்மாவை பார்க்க வருகிறான்.
தன் மகள் திருமணம் பற்றிய செய்தியுடன் வந்ததால் அம்மா அவனை அழைத்து பேசுகிறாள். ஒரு நல்ல நாளில் மாப்பிள்ளையை பெண் பார்க்க வரச்சொல்கிறாள், அம்மா.

காதலுக்கு உதவி
பூரணியின் தாய் மாமா வசதி படைத்தவர். இவரது அக்கா மகள் காதல் வயப்படுகிறாள். தங்கள் குடும்பத்தில் நிச்சயம் காதலுக்கு அனுமதி கிடைக்காது என்று தெரிந்து கொண்டவள், பூரணியின் உதவியை நாடுகிறாள்.
பூரணியின் இரண்டாவது தம்பி இந்த மாமாவின் பெண்ணை மணந்து கொண்டிருப்பவன். அதனால் இந்த காதல் திருமணத்தை ரகசியமாய் நடத்த அவனிடம் கலந்து திட்டம் வகுக்கிறாள்.

திருமணம் நடக்குமா?
திட்டப்படி எல்லாம் தயார். திருமணத்தை இவர்கள் முடிவு செய்த அதே தினத்தில் தான் பூரணியை அந்த மாப்பிள்ளை பார்க்க வரவிருக்கிறார். பூரணி இந்த திருமணத்தை எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்னின்று நடத்தி வைப்பாளா? அல்லது அவளை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைக்காக வீட்டில் இருப்பாளா?பரபரப்பான திருப்புமுனைக் காட்சிகள் அடுத்த எபிசோடுகளில்!

குழந்தை பாசம்
இதனிடையே பூரணியின் இரண்டாவது தம்பி மனைவிக்கு பிடித்துள்ள குழந்தை பாச நோய் சரியாகுமா?. அவள் கண் வைத்துள்ள குழந்தை பூரணிக்கு பார்த்துள்ள மாப்பிள்ளையின் குழந்தை என்பதால் இதனால் பூரணியின் திருமணத்தில் தடங்கல் ஏற்படுமா? இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.
இந்த தொடரினை அபிநயா கிரியேஷன்ஸ்' ஜே.கே. தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை: பா.ராகவன். வசனம்: வசீகரன். இயக்கம்: நீராவி பாண்டியன்.


Click it and Unblock the Notifications











