லோகேஷ் கனகராஜ் எடுப்பது படமா? மார்க்கெட்டிற்கு ஏற்றபடி காபரே டான்ஸ் ஆடுகிறார்.. ராஜகுமாரன் விளாசல்
சென்னை: நீ வருவாய் என , விண்ணுக்கு மண்ணுக்கும் என சில ஹிட் படங்களை கொடுத்த ராஜகுமாரன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார். அந்த வகையில், Jaya டிவிக்கு பேட்டி அளித்து இருக்கும் இவர், லோகேஷ் கனகராஜ் பற்றியும், அமீர் பற்றியும் பேசி உள்ளது. ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், லோகேஷ் கனகராஜன் படத்தை நான் பார்த்ததே இல்லை. அவரது படத்தில் ரத்தம், சதை. வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. ஏதாவது ஒரு நல்லதுக்காக அப்படி நடக்கிறது என்றால் பரவாயில்லை. ஆனால், எல்லா விஷயத்திற்குமே வன்முறையை கொண்டு வருகிறார். அவர் ஒரு நல்ல இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால். அவர் இன்றைய மார்க்கெட்டிற்கு ஏற்றபடி காபரே டான்ஸ் ஆடி இருக்கிறார். அவரை கிளாசிக் டான்ஸ் ஆட சொன்னாலும் இன்னும் அழகாக ஆடுவார். நான், அவர் படத்தை பார்க்கவில்லை என்றாலும் அவர் மிகவும் திறமைசாலி தான்.

ராஜகுமாரன் பேட்டி: பா ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தை மட்டும் தான் பார்த்தேன். மற்ற எந்த படத்தையும் நான் பார்க்கவில்லை. மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தை பார்த்தேன் அந்த படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒரு படைப்பாளியின் திறமை என்ன என்பது படம் பார்க்கும்போதே நன்றாக தெரியும். மாமன்னன் படத்தில் குறை சொல்லவே முடியாது. அந்த படத்தை வடிவேலுவிற்காகத்தான் பார்த்தேன்.
படத்தில், ஒவ்வொரு காட்சியையும் மாரி செல்வராஜ் அழகாக எடுத்து இருப்பார். தேவயானி சொல்லி, பரியேறும் பெருமாள் படத்தை பார்த்தேன். அந்த படமும் நன்றாக இருந்தது. அவர்களுக்கு ஜாதியை வைத்துத்தான் படம் எடுக்க தெரிகிறது என்பதால் அப்படிப்பட்ட படங்களை எடுக்கிறார்கள். இதில், நாம் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
அமீர் அப்படித்தான் : தொடர்ந்து பேசிய ராஜகுமாரன், சசிகுமாரும் அமீரும் நல்ல நண்பர்கள் தான். சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம். ஆனால், அமீரின் பருத்தி வீரர் படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியுமா? அந்தத் படத்தில் கார்த்திக், சரவணன் என அனைவருமே நல்ல கதாபாத்திரம் இல்லை. ஒரு மேன்மையான கதாபாத்திரத்தை கொடுக்காமல், இருப்பதை அப்படியே கொடுக்கிறேன் என்று சொல்வது சாக்கடை. அது சாக்கடையாகவே இருந்தாலும், அதை சுத்தம் செய்து நல்ல படைப்பாக கொடுப்பதுதான் ஒரு இயக்குனரின் கடமை. நான் அவரை விமர்சித்து பேசியதற்காக அமீர், என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என பேசி இருக்கிறார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை, ஒரு நபர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது படைப்பே சொல்லிவிடும். இதே கருத்தை சசிகுமார் ஒருபோதும் சொல்ல மாட்டார். இதுதான் சசிகுமாருக்கும் அமீருக்கும் இருக்கும் வித்தியாசம் என ராஜகுமாரன் பேசி, மீண்டும் இணையத்தில் பெரும் சர்ச்சை கிளப்பு உள்ளார்.


Click it and Unblock the Notifications











