Arpudhan death: அதிர்ச்சி.. அற்புதம் பட இயக்குநர் அற்புதன் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: Director Arpudhan death - நடனக் கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி நடன இயக்குநராக மாறிய ராகவா லாரன்ஸை ஹீரோவாக அற்புதம் படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் நவம்பர் 7ம் தேதி காலமானார். அவருக்கு 52 வயது.
காஞ்சனா வரிசை படங்களை இயக்கி நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் இந்த தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.

இந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன், சந்திரமுகி 2 படங்கள் வெளியாகி இருந்த நிலையில், ஹாட்ரிக் அடிக்க உள்ளார். இந்நிலையில், அவரை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய அற்புதன் உயிரிழந்தது திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் அற்புதன் மரணம்: ராகவா லாரன்ஸ் ஆவதற்கு முன்பாக லாரன்ஸாக சினிமாவில் ஹீரோவாக அற்புதம் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தை இயக்கிய இயக்குநர் அற்புதன் சமீபத்தில் சாலை விபத்தொன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் உடலை விட்டு அகன்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எப்படியாவது அற்புதனை காப்பாற்றி விடலாம் என மருத்துவர்கள் போராடியும் எந்தவொரு அற்புதமும் நடக்கவில்லை.
அற்புதன் இயக்கிய படங்கள்: ராகவா லாரன்ஸ் நடித்த அற்புதம் திரைப்படம் மட்டுமன்றி 2006-ல் ஷாம், நித்யா தாஸ் நடிப்பில் வெளியான மனதோடு மழைக்காலம் மற்றும் செப்பவே சிறு காளி உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சோகத்தில் திரையுலகம்: ராகவா லாரன்ஸை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் நடிகர் ஷாமுக்கும் கவிதை போன்ற ஒரு காதல் காவியத்தை உருவாக்கி கொடுத்திருந்தார். இந்நிலையில், அவரது திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவை அறிந்த சினிமா பிரபலங்கள் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











