ஒத்த ரூபாய் பாட்டுக்கு அனுமதி கேட்கல.. எல்லாமே காப்பி.. ஆதிக் ரவிச்சந்திரனை விளாசிய கஸ்தூரி ராஜா!
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், ஒத்த ரூபாய் தாரேன் என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. அந்த பாடல் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், நாட்டுப்புற படத்திற்காக இந்த பாடலை எழுதிய கஸ்தூரி ராஜா, இந்த பாடலை பயன்படுத்த என்னிடம் அனுமதி கேட்கவில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்காக அவர் காப்புரிமை கேட்டு இருக்கிறார். அதில், என்னுடைய படத்தில் இடம் பெற்ற ஒத்த ரூபாய் தாரேன் என்ற பாடலை பயன்படுத்தி இருந்தார்கள். அதற்கு நான் வழக்கு போட்டாலும் அது அவர்களுக்கு அசிங்கம் தானே, அது, பெரிய பிரச்சனையாகும் என்பதால், வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். ஒரு படத்தில் இயக்குனரின் கிரியேட்டிவிட்டி படம் முழுக்க இருக்க வேண்டும். ஒத்த ரூபாய் தாரேன் பாடலுக்காக ஆடுகிறார்கள் என்றால், அது எப்படி இந்த படத்தின் இயக்குநருக்காக ஆடிய ஆட்டமாகும். அந்த பாடல்கள் எல்லாம் வெளியாகி 20 வருடத்திற்கு மேலாகிய பின்னும், இந்த பாடலை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அப்படி ஒரு பாடலை கொடுக்க வேண்டும்.

அவர் பேசவே இல்லை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற பாடல் இடம் பெற்று இருந்தது. அந்த படத்தை பார்த்துவிட்டு நான் கண்டுக்கொள்ளவில்லை. அப்போது தான் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுடைய திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் நான் கலந்து கொண்ட போது மேடையிலேயே உங்களுடைய பாட்டு சூப்பர் என்று சொன்னார். இரண்டாவது படத்திலும் அதையே செய்யும் போதுதான் தான் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. குறைந்தபட்சம் என்னிடம் அவர்கள் அனுமதியாவது பெற்றிருக்கலாம், எனக்கு ஒரு மரியாதை கொடுத்து இருக்கலாம். இப்போது வரும் இளம் இயக்குனர்கள் எல்லாம், இவரெல்லாம் இயக்குனரா... அவரிடம் போய் நாம் பேச வேண்டுமா என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்று தான் தோன்றுகின்றது. நான் குட் பேட் அக்லி படத்தை பார்க்கவில்லை. ஆனால், படம் நல்ல வசூலை கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபாய் தாரேன் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்த பிறகு ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேச பலமுறை முயற்சி செய்தேன். ஆனால், அவர் பேசுவதற்கு தயாராகவே இல்லை.
மரியாதையே இல்ல : பல கோடி ரூபாயை செலவு செய்து முக்கி மோதி குட் நைட் அக்லி என்ற படத்தை கொடுத்து இருக்கிறார் ஆனால், 20 வருடத்திற்கு முன் அந்த படம் ஒரு வருடம் தியேட்டரில் ஓடியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு வருடம் ஓடக்கூடிய படத்தை எடுக்க முடியுமா... ஒரு படத்திற்கு பல கோடியை செலவு செய்யும் இவர்கள் ஒரு பாடலைக்கூட சரியாக எடுக்க முடியாத போது, எங்கிருந்து இவர்களால் ஒரு நல்ல கதையை கொடுக்க முடியும். இதனால், இப்போது வரும் இளம் இயக்குநர்கள் மீதே சந்தேகம் வருகிறது. தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போகிறார். இந்த படத்திலும் பழைய பாட்டைத் தான் தேடி செல்வராக இல்லை, புது பாட்டை பயன்படுத்துவாரா என்று தெரியவில்லை.
இப்போது எடுப்பது போல, அந்த காலத்தில் படம் எடுக்க முடியாது, ஒரு படம் வெளியே வருவதற்குள் உயிர் போய்விடும் அப்படி கஷ்டப்பட்டு எடுத்த படத்தின் பாடலை, பயன்படுத்தி கைத்தட்டலை அவர் வாங்கிக் கொள்வது எப்படி சரியானதாக இருக்கும். உங்களிடம் அனுமதி கேட்காமல் பாடலை பயன்படுத்திவிட்டேன் என்று குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பாவது கேட்டு இருக்கலாம் என்று கஸ்தூரி ராஜா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











