கோலங்கள் 2 சீரியல் குறித்து அப்டேட் கொடுத்த திருச்செல்வம்.. எந்த சேனல்ல வரப்போகுது தெரியுமா?
சென்னை : சன் டிவியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த தொடர்களில் முக்கியமானது கோலங்கள் தொடர்.
இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான இந்தத் தொடரில் லீட் கேரக்டரில் நடித்து கலக்கியிருந்தார் தேவயானி.
தற்போது எதிர்நீச்சல் என்ற விறுவிறுப்பான தொடரை இயக்கிவரும் திருச்செல்வம், கோலங்கள் 2 குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார்.

கோலங்கள் தொடர்
சன் டிவியில் இதுவரை ஒளிப்பரப்பான விறுவிறு தொடர்களில் முக்கியமானது கோலங்கள். தேவயானி லீட் கேரக்டரில் நடித்திருந்த இந்தத் தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கியிருந்தார். முக்கியமான கேரக்டரில் தேவயானியின் தோழராகவும் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார்.

1553 எபிசோட்கள்
கடந்த 2003ம் ஆண்டில் துவங்கப்பட்ட கோலங்கள் தொடர் 2009ம் ஆண்டுவரை நீடித்தது. மொத்தமாக 1553 எபிசோட்களுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்று, தற்போது ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. முதலில் தேவயானி நடித்திருந்த கேரக்டரில் நடிகை சவுந்தர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் மற்ற கமிட்மெண்ட்கள் காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனது.

எதிர்நீச்சல் தொடர்
தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி வருகிறார் திருச்செல்வம். இந்தத் தொடரும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 300 எபிசோட்களை தாண்டி நடைபோட்டு வருகிறது. இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து தற்போது திருச்செல்வம் அப்டேட் தெரிவித்துள்ளார்.

திருச்செல்வம் அப்டேட்
சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், சீரியலின் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் நினைக்கும்போதுதான் அதன் முடிவு குறித்து யோசிக்க முடியும் என்றும் அதுவரை கதையின் நாயகிகள் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே தான் இருப்பார்கள் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கோலங்கள் 2 குறித்து திருச்செல்வம்
மேலும் கோலங்கள் 2 குறித்த கேள்விக்கு பதிலளித்த திருச்செல்வம், அதற்கான கதையை தான் ஏற்கனவே ரெடி செய்துள்ளதாகவும், காலமும் நேரமும் கூடி வரும்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சீரியல் கண்டிப்பாக சன் டிவியில்தான் ஒளிபரப்பாகும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோலங்கள் 2 ரசிகர்களை கவருமா?
ஒரு பெண்ணாக பிரச்சினைகளை எதிர்த்து போராடும் கேரக்டரில் கோலங்கள் தொடரில் தேவயானி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மற்றவர்கள் துணை இருந்தாலும் தன்னுடைய இயல்பான போராட்ட குணத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு, வெற்றி பெறும் பெண்ணின் வெற்றிப் பயணமாக கோலங்கள் வெளியானது. கோலங்கள் 2வும் அந்த வகையில் ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











