மெட்டி ஒலி சீரியல் இயக்குநர் இப்போ என்ன செய்கிறார்?.. இரண்டாவது பாகம் வருமா வராதா?.. லேட்டஸ்ட் தகவல்
சென்னை: சீரியல் வரலாற்றில் மெட்டி ஒலி சீரியலை யாருமே மறக்க முடியாது. திருமுருகன் இயக்கியிருந்த மெகா சீரியல் பலருக்கு திரைத்துறையிலும் வாழ்க்கை கொடுத்தது. இத்தனை வருடங்கள் கழித்து சேத்தன் இப்போது பல படங்களில் நடிக்க பிஸியாகியிருக்கிறார். போஸ் வெங்கட்டும் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் கலக்கிவருகிறார். இவர்களுக்கெல்லாம் பெரிய வெளிச்சத்தை கொடுத்தது அந்த சீரியல்தான். இந்நிலையில் மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
'அம்மி அம்மி மிதித்து.. அருந்ததி முகம் பார்த்து' என தொடங்கும் பாடல் 20 வருடங்களூக்கு முன்னர் மாலை நேரத்தில் கேட்காத வீடுகளே இருக்க முடியாது. மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடல்தான் அது. அந்த சீரியல் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. கிட்டத்தட்ட 800 எபிசோடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான அந்த சீரியல் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தமிழ்நாடில் ஒரு சீரியல் இவ்வளவு பெரிய வெற்றியை பெற வாய்ப்பு உண்டு என்பதை நிரூபித்ததுதான் மெட்டி ஒலி.
என்ன ஸ்பெஷல்: எத்தனையோ நாடகங்கள் வந்திருக்கின்றன, வந்துகொண்டிருக்கின்றன, வரவிருக்கின்றன. ஆனால் அந்த சீரியல்களோடு எல்லாம் பெரும்பாலானோர் தங்களை கனெக்ட் செய்துகொள்ளவில்லை. ஆனால் மெட்டி ஒலியுடன் தங்களை எளிதாக கனெக்ட் செய்துகொண்டார்கள் அவர்கள். ஏனெனில் அதில் இடம்பெற்ற கதைக்களமும், மேக்கிங்கும், ஆர்ட்டிஸ்ட்டுகளின் பங்களிப்பும் அப்படி. ஒவ்வொரு எபிசோடையும் எமோஷனலாகவும், பரபரப்பாகவும் கொண்டு போன்ற பெருமை அந்த சீரியலுக்கு உண்டு.

திரைப்படம் மாதிரியே: திரைப்படத்தில் எப்படி நடுவில் சோகக் காட்சிகளுக்கு குறைந்த அளவு வரிகளை கொண்ட பாடல்கள் இடம்பெறுமோ அதேபோல் இதிலும் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். அதுமட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தில் தாயில்லாமல் ஒரு தந்தை ஐந்து பெண்களை வளர்ப்பதையும், அவர் கஷ்டப்பட்டு திருமணம் செய்துகொடுத்து; மகள்களின் திருமண வாழ்க்கையில் பிரச்னை வரும்போதெல்லாம் நொந்துபோன சிதம்பரத்தை பார்க்கையில் இங்கிருக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னையும் சிதம்பரமாக நினைத்துக்கொண்டார்கள். அதேபோல் சரோ, லீலா படும் பாடு, போஸ் படும் கஷ்டம் என சீரியலின் ஒவ்வொரு கேரக்டரும் அவ்வளவு எதார்த்தமாக எழுதப்பட்டிருக்கும்.
மிரட்டிவிட்ட ராஜம்: அதேபோல் சீரியலின் வில்லியாக சித்தரிக்கப்பட்டிருந்த ராஜம். சாந்தி வில்லியம்ஸ் அந்த கேரக்டரை ஏற்றிருந்தார். இவர் தந்தை இல்லாமல் மூன்று பிள்ளைகளை வளர்த்து; அதில் மூத்த பிள்ளையை தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் கேரக்டர். அதனை அவ்வளவு நேர்த்தியாக தனது நடிப்பில் கொண்டுவந்திருந்தார். மேலும் ராஜத்தை பார்க்கும்போதே தமிழ்நாட்டில் பல மருமகள்கள் தங்கள் மாமியார்களையே பார்ப்பது போல் இருக்கும் என்று அப்போது ஓபனாக சொல்லியதுண்டு. குறிப்பாக சிதம்பரத்தை (டெல்லி குமார்) ராஜம் அவமானப்படுத்தும் இடங்களில் பலர் ராஜத்தை திட்டி தீர்த்தார்கள். ஆனால் அந்தக் கேரக்டரின் வெற்றியே அதுதான். பல வருடங்களுக்கு சாந்தி வில்லியம்ஸுக்கு அந்த சீரியல்தான் வெளிச்சத்தை கொடுத்தது.
கோபி கேரக்டர் ஸ்பெஷல்: அத்தனை கேரக்டர்களும் ஸ்பெஷலாக இருந்தாலும் சீரியலின் இயக்குநரான கோபி, செல்வம் என்ற இரண்டு கேரக்டர்கள் இன்றுவரை அனைவரது ஃபேவரைட். இப்படியும் நல்லவர்கள் இருப்பார்களா என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்திய கேரக்டர்களும் அவைதான். கோபி கேரக்டரில் சீரியலின் இயக்குநர் திருமுருகனே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் செல்வம் கேரக்டரில் விஷ்வா என்பவர் நடித்திருந்தார். அவர் மேலும் சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.

காணாமல் போன செல்வம்: மெட்டி ஒலிக்கு பிறகு சில சீரியல்களில் நடித்த விஷ்வா; பெரிதாக வளர்வார் என்றே பலரும் கருதினார்கள். ஏனெனில் அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த கிரேஸ் அப்படி. எங்கு சென்றாலும் மெட்டி ஒலி செல்வம் என்று வாஞ்சையோடு அழைக்க தொடங்கினார்கள். அவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று நினைத்த பல இல்லத்தரசிகள் உண்டு. முக்கியமாக சீரியலில் ஒருமுறை அவர் கத்திக்குத்து வாங்கியதோடு தொடரும் என்று போட; துடித்துப்போன மக்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே நேராக சென்று செல்வத்தை காப்பாற்றுங்கள்; அவரை நாங்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லிய வரலாறெல்லாம் உண்டு. இதனை விஷ்வாவே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கிரேஸையும் அன்பையும் பெற்ற விஷ்வாவோ சின்னத்திரைக்கு பிறகு பெரிய திரைக்கு வருவார் என்று எதிர்பார்த்தால்; அவர் திரைத்துறைக்கே குட் பை சொல்லிவிட்டு பெங்களூருவுக்கு கிளம்பிவிட்டார். அங்கு அவர் தனியாக தொழில் நடத்திவருகிறாராம். அதேசமயம் மீண்டும் நடிக்க தயாராகத்தான் இருப்பதாகவு; ஆனால் மெட்டி ஒலி குவாலிட்டிக்கு சீரியல் வர வேண்டுமே என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதுமட்டுமின்றி இப்போது வெளியாகும் சீரியல்களையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அவர்.

படம் இயக்கிய திருமுருகன்: அதேபோல் கோபி கேரக்டரை ஏற்றிருந்த திருமுருகனும் பெரிய ரவுண்டு வருவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் அவர் அந்த சிரீயலில் கலக்கியிருந்தார். தனது எதார்த்தமான நடிப்பு, முக பாவனைகள் மூலம் பலரையும் கவர்ந்திருந்தார். ஆனால் நடிகராக தொடர்வதோடு இயக்குநராக தொடர்வதுதான் நல்லது என்று நினைத்த அவர் மெட்டி ஒலி முடிந்த கையோடு எம்டன் மகன் படத்தை இயக்கினார். ஒரு சீரியல் இயக்குநர் திரைப்படம் இயக்கும்போது அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது என்றால் அது திருமுருகனுக்குத்தான். அந்த அளவுக்கு மெட்டி ஒலி அவரை ஃபேமஸ் ஆக்கியிருந்தது.
ஹிட் டூ ஃப்ளாப்: எம்டன் மகனும் மெகா ஹிட்டானது. வடிவேலுவின் காமெடி, நாசரின் நடிப்பு என அனைத்து ஏரியாக்களும் சூப்பராக இருந்தது. அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் எம்டன் மகன் கூட்டணியை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வந்த அவர் நாதஸ்வரம் உள்ளிட்ட சீரியல்களை இயக்கினார். அந்த சீரியல்களும் பெரிய வெற்றியைத்தான் பெற்றன. சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே அவர் திரைத்துறையிலிருந்து காணாமல் போய்விட்டார்.
புதிய தகவல்: அவர் மீண்டும் இயக்கத்துக்கு வருவாரா என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிவருகின்றன. இந்நிலையில் அவர் குறித்து தனியார் ஊடகம் ஒன்று புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதலில் மெட்டி ஒலி சீரியலின் இரண்டாவது பாகத்தை உருவாக்கலாம் என்ற பிளான் இருந்ததாம். ஆனால் அதனை திருமுருகன் இயக்காமல் வேறு ஒருவரை இயக்க வைத்து தான் நடிகராக மட்டும் அந்த சீரியலில் இருக்க முடிவு செய்திருந்தாராம். ஆனால் அந்தத் திட்டம் கைகூடவில்லையாம். தொடர்ந்து சினிமாக்கள் இயக்கும் வாய்ப்புகளை தேடும் முயற்சியில் இருக்கும் அவர்; தனது நண்பர்களிடம் சில கதை விவாதங்களையும் நடத்துகிறாராம். கண்டிப்பாக திருமுருகன் மீண்டும் சின்னத்திரைக்கோ அல்லது பெரிய திரைக்கோ வருவார் என்கிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.


Click it and Unblock the Notifications











