எம்டிவிக்கு போட்டியாக டிடியிலும் ராக் ஷோ!

சேட்டிலைட் சேனல்களின் வருகைக்கு முன்னர் தூர்தர்சன் மட்டும்தான் இந்திய மக்களுக்கான தொலைக்காட்சி. அதில் புதன்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பாகும் சித்ரஹார், சித்ரமாலா போன்றவைகளை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திரண்டிருப்பார்கள். 80, 90 களில் டிடியின் ஆதிக்கம்தான் கோலோச்சியிருந்தது.
ஆனால் சன் தொடங்கி நூற்றுக்கணக்கான சேட்டிலைட் சேனல்களினால் தூர்தர்சனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத்தொடங்கியது. இன்றைக்கும் தூர்தர்சனை மட்டுமே பார்க்கும் பார்வையாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் சேட்டிலைட் சேனல்களின் தரத்திற்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு அவர்களால் நிகழ்ச்சியை தரமுடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இருப்பினும் புதிதாக தற்போது புதிய இசை நிகழ்ச்சி ஒன்று டிடியில் ஒளிபரப்பாக உள்ளது.
கோக் ஸ்டூடியோ இந்த இசை நிகழ்ச்சியை தயாரித்து அளிக்க உள்ளது. கோக் ஸ்டூடியோ ஏற்கனவே எம்டிவியில் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வருகிறது. அது இனிமேல் டிடியிலும் வரப் போகிறது.
இசைநிகழ்ச்சியில் உஷா உதூப், மாஸ்டர் சலீம், சவான்கான், ஹரி ஷுக்மணி, போன்ற பிரபலங்கள் பங்கேற்றுப் பாட உள்ளனர். டிடியில் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கோக் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் டிடி பொதிகை டிவியில் சேட்டிலைட் சேனலுக்குப் போட்டியாக எப்போது புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப போகிறார்களோ என்பது அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











