எதிர்நீச்சல் தொடர்கிறது கொடுமை: முடிச்சி விடுங்கப்பா.. பிபி எகுறுது..கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைவருக்கும் பிடித்த சீரியலாக இருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலின் பாகம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியல் 200 எபிசோடுகளுக்கு மேல் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தர்ஷன் திருமண விஷயத்தில் ஆரம்பித்த சண்டை, ஈஸ்வரியின் உயிருக்கே உலை வைத்து இருக்கிறது.
தர்ஷனுக்கும் பார்கவிக்கும் ஈஸ்வரி திருமணம் செய்து வைத்த நினைத்திருந்தார். ஆனால், இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பார்கவி, இங்கு இருந்தால் தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் என கனடாவிற்கே சென்றுவிட்டார். தர்ஷனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்த ஈஸ்வரி, குணசேகரனிடம் பேசுகிறேன் என சென்று தனியாக மாட்டிக் கொண்டார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், குணசேகரன் ஈஸ்வரியின் கழுத்தை நெரிக்க, தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு, சுயநினைவை இழந்து மருத்துவமனையில் இருக்கிறார்.

சீரியலை பார்க்கவே பயமா இருக்கு: இப்படி பரபரப்பாக கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், தினமும் சண்டை, தினமும் அழுகையென சீரியல் சென்று கொண்டு இருப்பதால். இதை பார்த்து கடுப்பான இணையவாசிகள், சீரியலை பார்த்தால் பிபி தான் வருகிறது என தங்கள் கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர், இந்த நாடகத்தில் வன்முறை மட்டுமே தொடர்கிறது, கதை நகரவில்லை...சீரியலை பார்க்க பார்க்க BP தான் ஏறுகிறது என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், வர வர இந்த சீரியலை பார்க்கவே பயமா இருக்கு, இது எதிர்நீச்சல் இல்ல எதிர்மறை எண்ணங்களை விதைக்கிற கடைசல் என பதிவிட்டுள்ளார்.

அது என்ன வாடி போடி: டைரக்டர் சார் தயவுசெய்து நீங்களே சீரியலை நிறுத்திடுங்க, ஏற்கனவே எல்லாரும் பல கஷ்டங்கள தாண்டி நிம்மதியா இருக்க வேண்டிய இடம் வீடு. அந்த வீட்டிற்கு வந்து நிம்மதியா டிவி பார்க்கலாம் என்று அமர்ந்தால், தினமும் சண்டை, தயவு செய்து வீட்டை நரகமாகிடாதீங்க பிளீஸ். முன்பு குணசேகரனாக நடித்த மாரி முத்து, பெண்களை வாடி போடினு சொல்ல மாட்டார். போமா... ஏம்மா வாம்மானு தான் கூப்பிடுவார். ஆனால், இவர், தம்பி பொண்டாட்டி என்று கூட பார்க்காமல் வாடி போடினு பேசுகிறார். பார்ப்பதற்கே கடுப்பா இருக்கு. தாங்க முடியல தயவு செய்து நிறுத்திவிடுங்கள் என, ப்ரோமோவிற்கு கீழே இணையவாசிகள் கருத்துக்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











