twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி... அரவிந்த்சாமியிடம் ரூ.25 லட்சம் செக் வாங்கிய காளியம்மாள்

    By Mayura Akilan
    |

    சென்னை: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - 3 நிகழ்ச்சியில் அரவிந்த் சாமி கேட்ட 13 கேள்விகளுக்கு சரியான பதில் கூறி ரூ. 25 லட்சம் வெற்றி பெற்றுள்ளார் நாகை மாவட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள்.

    காளியம்மாள், பிரகாஷ் தம்பதியர் விளையாடுவதாக கூறினாலும் அனைத்து கேள்விகளுக்கும் காளியம்மாள் அனாயசமாக பதில் சொன்னார்.

    Fisherwoman wins Rs 25 laksh in Neengalum Vellallam Oru kodi

    பெண்களின் நெற்றி வகிட்டை அலங்கரிக்கும் ஆபரணம் சுட்டி என்று எளிமையாக தொடங்கிய கேள்வி போக போக விறுவிறுப்படைந்தது.

    எந்த விளையாட்டை ஆடுவதற்கு பந்து பயன்படுவதில்லை என்ற கேள்விக்கு கபடி என்று கூறி 2ஆயிரம் ரூபாய் ஜெயித்தார் காளியம்மாள்.

    பூவன், நெய் பூவன் வாழைப்பழம் என்று சட்டென்று கூறி 3 ஆயிரம் வென்றார். 5 ஆயிரம் ரூபாய்க்கான கேள்வியான, 30 ரூபாய் எத்தனை எட்டணாக்கள் உள்ளன என்ற கேள்விக்கு சற்றே யோசித்த காளியம்மாள் 60 என்று சரியாக சொன்னார்.

    விறுவிறுப்பாக கேள்விகள் செல்ல, நிறைய ஜெயிக்க வேண்டும் என்று கூறிய காளியம்மாள், ஜெயிக்கும் பணத்தில் இருந்து வாடகை வீட்டில் இருக்கும் தங்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒரு பகுதி பணத்தை எடுத்துக்கொண்டு, கடலூர் மாவட்டத்தில் வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்போவதாக கூறினார்.

    காளியம்மாளின் குடும்பம் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பாதிக்கப்பட்டது. சுனாதி தினத்தில் தொலைந்து போன உறவுகளை தேடி அலைந்ததையும், உயிரிழந்தவர்களுக்கு கடைசி நேரத்தில் நடக்க வேண்டிய இறுதிச்சடங்கு கூட நடைபெறாமல் போன அவலத்தையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

    கட்டுமரம் ஓட்டிச் சென்று அப்பா சம்பாதித்து தருவார், நான் செலவு செய்வேன் என்று கூறிய காளியம்மாள், அப்பாவின் சிரமத்தை நேரில் பார்த்ததில் இருந்து சுயமாக சம்பாதித்து படித்ததாக கூறினார். கடலில் மீனவர்கள் படும் துயரத்தை இடை இடையே தம்பதியர் பகிர்ந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையானவைதான். மீனவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடலும் கடல் சார்ந்த கேள்வியாகவே இருந்தது.

    25 லட்சம் ரூபாய்க்காக கேட்கப்பட்ட கேள்வி சற்றே யோசிக்கக் கூடியதுதான். இது விருது பற்றிய கேள்வி.

    அரச இலையின் உள்ளே சூரியன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட பிளாட்டின பதக்கம் இவற்றில் எந்த விருதாக கொடுக்கப்படுகிறது?

    a.பத்ம ஸ்ரீ
    b.பத்ம விபூசன்
    c.பாரத ரத்னா
    d.பரம் வீர் சக்ரா

    ரூ. 25 லட்சம் ரூபாய்க்கான கேள்வி இது. இந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் பாரத ரத்னா என்று பதிலளித்தார் காளியம்மாள். எப்படி இந்த பதிலை கூறினார் என்பதற்கு காளியம்மாள் கூறிய பதில்தான் அசரவைத்தது. எம்.ஜி.ஆர் பாரதரத்னா விருது பெற்ற ஆண்டு பற்றி தெரிந்து கொள்வதற்காக படித்த போது அந்த விருதின் உருவத்தை பார்த்தாக தெரிவித்தார். சரியான பதில் என்று கூறி 25 லட்சம் ரூபாய்க்கு செக் எழுதினார் அரவிந்த் சாமி.

    இந்த சீசனில் அதிகம் வெற்றி பெற்ற பெண்மணி இவர். இந்த வெற்றிக்கு காரணம் அப்பாதான் என்று கூறிய காளியம்மாளை அவரது அப்பா உடன் தொலைபேசியில் பேச வைத்தார் அரவிந்த் சாமி. 25 லட்சம் ஜெயித்திருப்பதாக காளியம்மாள் மகிழ்ச்சியுடன் கூறவே விளையாடியது போதும்மா என்று கூறினார் காளியம்மாளின் அப்பா.

    என்றாலும் 50 லட்சத்திற்கான 14வது கேள்வியை காளியம்மாளிடம் கேட்டார் அரவிந்த் சாமி அது கொஞ்சம் யோசிக்க கூடிய கேள்விதான்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொது காரியதரிசியாக முதன் முதலில் பொறுப்பேற்ற ஆப்ரிக்கர் யார்?

    a.பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி
    b. த்றிக்வே லி
    c. கோஃபி அன்னன்
    d. யு. தண்ட்

    ஏற்கனவே நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளும் எண்ணத்தில் இருந்த காளியம்மாள், வெற்றி பெற்ற 25 லட்சம் ரூபாயுடன் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் முதல் சீசனை சூர்யாவும், இரண்டாவது சீசனை பிரகாஷ் ராஜூம் நடத்தினர். இரண்டாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு சட்டென்று பதிலளித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் அரவிந்த் சாமி.

    பொது அறிவு மட்டுமல்லாது பலவித திறமைகளும் கொண்டவர் அரவிந்த் சாமி என்பதை ரசிகர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது அதே சேனலில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் 3வது சீசனை நடத்துகிறார். கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

    English summary
    Nagai fisherwoman Kaliammal won Rs 25 laksh in Neengalum Vellallam Oru kodi from Arvind Swamy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X