கிறிஸ்துவன் கருப்பு வேஷம் போடக்கூடாதா? மத வன்மத்தைக் கக்கிய நெட்டிசன்ஸ்.. நடிகர் ஸ்ரீ பதிலடி!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலில் நடிகர் ஸ்ரீ, வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், அவர் கருப்புசாமி கெட்டப்பில் தோன்றி அருள்வாக்கு கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர் கருப்புசாமி வேடத்தில் நடித்திருப்பது குறித்து சிலர் விமர்சனம் செய்தனர்.

நடிகர் ஸ்ரீ பதிலடி: இதற்கு நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார். அதில், நான் ஒரு நடிகன். எனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை நடிக்கிறேன். நான் இயேசுவை மிகவும் நம்புகிறேன் என்பதும் உண்மைதான். ஆனால், ஒரு நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது என் தொழில். இயேசுவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தாலும், இயேசுவாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்படுவார். யூதா கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒருவர் தேவைப்படுவார். அதுபோலவே இது ஒரு கதாபாத்திரம் மட்டுமே. நான் மதத்தின் பெயரில் மக்களிடம் காணிக்கை வாங்கி ஏமாற்றுபவன் அல்ல. நேர்மையாக உழைத்து சம்பாதிக்கிறேன். வேலையில் நல்ல வேலை, கெட்ட வேலை என்று எதுவும் இல்லை. நாம் செய்யும் வேலையை எப்படி செய்கிறோம் என்பதுதான் முக்கியம். நான் செய்வது சரியா, தவறா என்பதை தீர்மானிக்க வேண்டியது இயேசு தான்.

வன்மத்தை கக்காதீங்க: கருப்பு படம் பார்த்து கருப்ப சாமியை காப்பி அடித்துவிட்டீர்கள் என சிலர் சொல்கிறார்கள். படத்தைபார்த்து காப்பி அடித்தால் என்ன தப்பு இருக்கிறது. சீரியல் என்றாலே மிகவும் கீழ்த்தரமாக பார்க்கிறார்கள். சீரியலிலும் நல்ல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். ஒரு சீரியலை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் இருக்கிறது. சீரியல், சினிமா, மேடை நாடகம், தெருக்கூத்து என்ற வேறு பாடு எல்லாம் இல்லை எல்லாருமே இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு இது பொழுதுபோக்கு ஆனால், எங்களுக்கு இது தான் சோறு போடுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து வன்மத்தை கக்காதீங்க என ஸ்ரீ அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications