பிக்பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன்.. சம்பளம் இத்தனை லட்சமா?.. காட்டுல செம மழை
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நாளையோடு முடிவடையப்போகிறது. முத்துக்குமரன், ரயான், பவித்ரா, சௌந்தர்யா, விஜே விஷால் ஆகிய ஐந்து பேர் இறுதி நாளில் இருக்கின்றனர். இவர்களில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் வாங்கிய சம்பளம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அவர் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே இந்த சீசன் எப்படி செல்லப்போகிறது என்ற ஆவல் மக்களிடையே இருந்தது. அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்கள் சுவாரஸ்யமாக செல்லவில்லை. அதற்கு காரணம் இந்த சீசனில் பிரபலமே இல்லாத போட்டியாளர்களை நிகழ்ச்சி குழு களமிறக்கியதுதான் என்று பலரும் பேசினார்கள்.

மொத்தம் 24 போட்டியாளர்கள்: முதலில் மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்துகொண்டார்கள். அவர்களில் சிலர் நிகழ்ச்சிக்கு கன்டெண்ட் கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள் பெரிய கன்டெண்ட் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் பிக்பாஸ் 8 ரொம்பவே போர் அடித்துக்கொண்டிருப்பதாக குரல்கள் தொடர்ந்து கேட்டன. சூழல் இப்படி இருக்க வைல்டு கார்டு மூலம் 6 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். அவர்கள் வந்ததும் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது.
பண பெட்டி: இந்த சீசனில் சில ரூல்ஸ்கள் மாற்றப்பட்டிருந்தன. அதிலும் பண பெட்டி விஷயம் பெரிதாக ஈர்த்தது. பண பெட்டியானது வீட்டிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டியை லிமிட்டட் டைமுக்குள் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிட்டால் அவர்கள் போட்டியில் தொடரலாம். அப்படி வரவில்லையென்றால் போட்டியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இந்த டாஸ்க்கில் முதலில் முத்துக்குமரன், விஜே விஷால், ரயான், பவித்ரா உள்ளிட்டோர் பண பெட்டியை எடுத்துவிட்டனர். சௌந்தர்யாவோ நேரம் முடிவதற்குள் பண பெட்டியை எடுக்க முடியாவிட்டாலும் வீட்டுக்குள் வந்துவிட்டார்.
முத்துக்குமரன் வின்னர்: ஆனால் ஜாக்குலினால் பண பெட்டியையும் எடுக்க முடியவில்லை; வீட்டுக்குள் வரவும் முடியவில்லை. இதனால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து முத்துக்குமரன், ரயான், விஷால், பவித்ரா, சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதி கட்டத்துக்கு முன்னேறினார்கள். இந்நிலையில் முத்துக்குமரன் இந்த சீசனின் வின்னராகவும், சௌந்தர்யா ரன்னராகவும் வந்திருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
எவ்வளவு சம்பளம்: அவருக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை, அவர் எடுத்த பண பெட்டியில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 41 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்நிலையில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும்போது ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பளம் என்கிற அடிப்படையில் வந்திருக்கிறார். இப்போது 105 நாட்கள் இருந்ததால் மொத்தம் அவருக்கு சம்பளமாக 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செல்லும். ஆக மொத்தம் பரிசு தொகையும், சம்பளத்தையும் சேர்த்தால் முத்துக்குமரனிடம் 51 லட்சத்து 50,000 ரூபாயோடு இருக்கும்.


Click it and Unblock the Notifications











