அதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன்…. இயக்குநர் லிங்குசாமி
நான் சினிமாவில் நடிப்பது என் மனைவிக்குப் பிடிக்காது. தவிர அதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று இயக்குநர் லிங்குசாமி கூறினார்.
குடும்பப்படமான 'ஆனந்தம்' தொடங்கி காதலில் சூப்பர் ஹிட் அடித்த 'ரன்', ஆக்ரோசமான 'சண்டைக்கோழி' என தொடர்ந்து படங்களை இயக்கிவரும் லிங்குசாமி, இப்போது படத்தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவருடைய தயாரிப்பில் பல வெற்றிப்படங்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய சினிமா ஆசை பற்றியும், இயக்குநராக தொடங்கி இன்றைய படத்தயாரிப்பாளர் அவதாரம் வரையும் சன் டிவியின் சூரியவணக்கம் விருந்தினர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
லிங்குசாமியின் படம் மட்டுமல்ல அவருடைய பேட்டி கூட அழகான கமர்சியல் படம் பார்த்த திருப்தியை கொடுத்தது.

நாள் கணக்கில் காத்திருந்தேன்
கல்லூரி முடித்த உடன் குடவாசலில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்து பாக்கியராஜ் சாரிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்று நாள்கணக்கில் வாசலில் காத்திருந்ததாக கூறினார் லிங்குசாமி. தான் பட்ட சிரமங்கள் எல்லாமே பிற்காலத்தில் பேட்டி கொடுக்கும் போது உபயோகமாக இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன் என்று கூறிய அவர், குடும்ப பாங்கான கதைகளை எடுத்தால் வெற்றி பெறலாம் என்று முடிவெடுத்துதான் ஆனந்தம் படத்தை இயக்கியதாக கூறினார். தன் வாழ்க்கையில் தான் கண்ட சம்பவங்களைத்தான் திரைப்படங்களில் உபயோகப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

சின்னப் புள்ளையா இருந்தப்பவே ரஜினி ரசிகன்
சிறு வயதில் இருந்தே ரஜினி ரசிகனாக இருக்கும் நான் ரஜினி படங்கள் ரிலீசானால் முதல்நான் முதல் காட்சி பார்ப்பேன் என்று கூறினார்.

காதல் அனுபவம் நிறைய
காதல் அனுபவங்கள் என் வாழ்க்கையில் அதிகம் உண்டு என்று கூறிய லிங்குசாமி, நான் சொல்லாமல் மறைத்த காதல்கள்தான் அதிகம். அப்படிப் பார்த்தால் 50 ஆட்டோகிராப் வரை எடுக்கலாம் என்றார்.

நீங்களும் நடிக்கலாமே சாமி
இவ்ளோ அழகா இருக்கிற நீங்க சினிமாவில் நடிக்கலாமே? என்ற தொகுப்பாளினியின் கேள்விக்கு பதிலளித்த லிங்குசாமி, என்னை நடிக்க வைக்க பலமுறை முயற்சி நடந்தது. கதை கூறியிருக்கின்றனர். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. கவுதம் மேனன் பக்கம் அதை திருப்பிவிட்டுவிடுவேன் என்றார்.

மனைவிக்குப் பிடிக்காதே
நான் படம் இயக்குவதற்காகத்தான் திரைப்படத்துறைக்கு வந்தேன். அந்த வேலையை சரியாக செய்துகொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. இப்போதைக்கு இயக்கமும், படத்தயாரிப்பும் மட்டுமே போதும். அதைத்தவிர நான் நடிப்பதில் என் மனைவிக்கு இஷ்டமில்லை என்றும் கூறினார்.
என்னுடைய அடுத்த படம் யாரும் எதிர்பார்க்காத வித்யாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்றும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு பேட்டியை முடித்தார் லிங்குசாமி.


Click it and Unblock the Notifications











