எனக்கெல்லாம் அரசியல் சரிப்பட்டு வராது – ராதிகா
சினிமா, சீரியல், குடும்பம் என எனக்கு கமிட்மென்ட் நிறைய இருக்கு. எனவே அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது அதற்கு நேரமும் கிடையாது என்று நடிகை ராதிகா கூறியுள்ளார்.
சன் டிவியில் வாணி ராணி தொடர் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ராதிகா தனது முந்தைய தொடர்களை விட இந்த தொடர் வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார்.
மற்ற தொடருக்கும் வாணி ராணி தொடருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றும் கூறியுள்ளார். சன் டிவியில் நீண்ட காலமாக தொடர்ந்து 9.30 மணி ஸ்லாட்டை தக்க வைத்திருக்கும் ராதிகா தனது அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வித்தியாசம்தான் காரணம்
வாணி ராணி தொடர் குடும்பக் கதை. இதில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் கதையை கொண்டு போவார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் பயணிக்கிறேன். ரசிகர்களுக்கு வித்தியாசமாக கொடுப்பதால்தான் 12 ஆண்டுகளுக்கும் மேலாக 9.30 மணிக்கு சன் டிவியில் நிலைத்திருக்க முடிகிறது.

முரண்பட்ட கதாபாத்திரம்
இந்தக் கதை கலகலப்பா, அமைதியா இருக்கிற இரண்டு ரோல்களுக்கான முரண்பாடு பற்றியது. பெண்களுக்கு உண்டான பயத்தையும், அந்த பயத்தைப் போக்கி தன்னம்பிக்கை தருவதுமான இரண்டு பாதைகளை இணைக்கும் பாத்திரங்கள் இந்த வாணியும் ராணியும்.

வயது குறைவானவர்களுடன் ஜோடி
இந்த தொடரில் வாணிக்கு ஜோடியாக வேணு அரவிந்த், ராணிக்கு ஜோடியாக பிரத்விராஜ் நடிக்கின்றனர். என்னை விட வயது குறைவானவர்களுடன் ஜோடி சேருவதாக ஒரு விமர்சனம் உள்ளது. நடிப்புக்கு ஆட்கள் முக்கியமில்லை.

இப்படியெல்லாம் நடிப்பதால்தான்
முதலில் சிவகுமாருடன்தான் சீரியலில் ஜோடியாக நடித்தேன். இப்போது சிவக்குமார் நடிப்பதில்லை. சீரியலில் கதையும், களமும்தான் முக்கியம். இப்படியெல்லாம் நடிப்பதால்தான் இன்னும் நான் பீல்டில் இருக்கிறேன்.

சீரியல்தான் சிரமம்
சினிமாவில் நடிப்பது கொஞ்சம் கஷ்டம்னா, டிவியில் நடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். சினிமாவில் நம்ம கேரக்டர் என்னவோ நடிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். டிவியில் டீம் வொர்க். டிவிக்குப் பின்னாடி இருக்கிறவங்களோட உழைப்பு இருக்கிறதே.. அது சினிமாவை விட அதிகம்.

வருடக்கணக்கா போகும்
டிவி தொடர் வருடக்கணக்கா போகும். அலுவலகத்தில் வேலை செய்வது போல 10 மணிக்கு வந்து 6மணி வரை டிவியில் நடிக்கணும்.

அழுகை இருக்காது
இன்று ஒரு படத்தில் நடித்த ஹீரோயின், அடுத்த படத்துக்கு ஆளே இல்லை. அப்படி ஒரு சூழல் நிலவுது. நான் இவ்ளோ காலமாக இருக்கிறேன். அதுக்குக் காரணம் நாங்க ஏதோ செய்றோம்னுதானே அர்த்தம்? எங்கள் தொடரில் அழுகை இருக்காது. பெண்களுக்கு தன்னம்பிக்கை தர்ற விஷயங்கள்தான் அதிகம் இருக்கும். இது ஒரு முக்கியமான வித்தியாசம்னு நான் நினைக்கிறேன்.

அரசியல் செட் ஆகாது
சின்னத்திரையில் நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் நினைக்கின்றனர். அது நல்லதுதான். நடித்தது போதும் என்று எப்போதுமே நான் நினைத்ததில்லை. அந்த எண்ணம் வந்தால் வளரமுடியாது.

அர்ப்பணிக்க வேண்டும்
எந்தத் துறையாக இருந்தாலும் 100சதம் அதற்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பது என் குணம். நடிப்புத் துறையில் நான் அப்படித்தான் என்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டேன்.
எனக்கு இப்போது சினிமா, டிவி, குடும்பம், கணவர், குழந்தைகள் என நிறைய கமிட்மெண்ட் நிறைய இருக்கு. அதனால அரசியல்ல என்னால அர்ப்பணிப்புடன் இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றார் ராதிகா.


Click it and Unblock the Notifications











