செப்டம்பர் 6 முதல் தொடங்கும் பிக் பாஸ் 10?.. ‘காமன் மேன்' என்ட்ரி.. களைகட்டப்போகும் பிக் பாஸ் வீடு!
சென்னை: சின்னத்திரையில் மற்ற எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிற்கும் இல்லாத அளவிற்கான ஆன்லைன் விவாதங்களும், பிரம்மாண்ட ரசிகர் பட்டாளமும் கொண்டது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோ, இதுவரை 9 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. அந்த வகையில், தற்போது பத்தாவது குறித்த மிகவும் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுவாக அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதம் முடிவடையும். ஆனால், இந்த முறை சற்று முன்கூட்டியே, அதாவது வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாகத் தொடங்க வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த சீசனைத் தொடர்ந்து, இந்த 10-ஆவது சீசனையும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தனது எதார்த்தமான பேச்சால் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உடன்படிக்கைகளுடன் விஜய் டிவி மற்றும் ஜியோ ஸ்டார் நிர்வாகம் இப்போதே முன்கூட்டியே பணிகளை விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டது.

சாமானியர்களுக்கு ஜாக்பாட்: முந்தைய சீசன்களில் பிரபலங்கள், இன்ஸ்டா ஸ்டார்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த 10-ஆவது சீசனில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட ட்விஸ்ட்டை பிக் பாஸ் டீம் இறக்கியுள்ளது. அதுதான் 'காமன் மேன்' என்ட்ரி. இதற்கான முதல் அதிகாரப்பூர்வ ப்ரோமோ கடந்த ஜூன் 1-ஆம் தேதியே வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. அதில், சாமானிய மக்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 நிமிட வீடியோ: பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் தகுதியான நபர்கள், நான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும்? என்பது குறித்த தங்களது ஒரு சுவாரசியமான 2 நிமிட அறிமுக வீடியோவை தயார் செய்து, அந்த வீடியோவை vijay.jiostar.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவிட வேண்டும். பதிவேற்றப்படும் வீடியோக்களில் இருந்து தகுதியான மற்றும் சுவாரசியமான நபர்களைப் பிக் பாஸ் குழு தேர்வு செய்து, அவர்களுக்குப் பிக் பாஸ் வீட்டின் கதவுகளைத் திறக்கவுள்ளது. இதற்காக 'பிக் பாஸ் காமன் மேன்' என்ற பிரத்யேக ப்ரீ-ஷோ தேர்வுகள் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் பிரபலங்களின் சண்டையை விட, சாமானிய மக்களின் எதார்த்தமான மற்றும் அதிரடியான ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications