twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெட்ட வெளிச்சமாகும் டி.வி. புலனாய்வு நிகழ்ச்சிகளின் தரம்!

    By Mayura Akilan
    |

    Crime Stories
    தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளினால் பள்ளி மாணவர்களும், இளம் தலைமுறையினரும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குற்றம் நடந்தது என்ன? என்று ஒரு தொலைக்காட்சியில் ஆரம்பித்த நிகழ்ச்சி நிஜம், நம்பினால் நம்புங்கள், கோப்பியம், ரௌத்திரம் பழகு, புலன் விசாரணை என பல பெயர்களில் இன்றைக்கு பல தொலைக்காட்சிகளில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக ஆரம்பித்த பின்னர்தான் சின்ன சின்ன குக்கிராமங்களில் குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரிகள் கூட வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தனர். இரண்டு வீட்டுக்கு கூட தெரியாத கள்ளக் காதல் கொலைகள் உலகம் முழுவதும் பிரபலமாகத் தொடங்கின.

    கண்ணீர் சிந்த வைக்கும் சீரியல்களை ஒளிபரப்பினால் மட்டுமே எல்லா தொலைக்காட்சிகளிலும் வெற்றி பெற்றுவிட முடியாது. ஆன்மீக நிகழ்ச்சிகளை லைவ் ஆக ஒளிபரப்ப வேண்டும் அல்லது குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளையோ, பொதுமக்களின் கண்ணீர் சிந்தவைக்கும் கதைகளை லைவ் ஆக ஒளிபரப்பினால் மட்டுமே டிஆர்பி ரேட்டிங்கை எகிறவைக்க முடியும் என்று இன்றைய தொலைக்காட்சிகள் முடிவு செய்து விட்டன. விளைவு பிறரின் வீட்டிற்குள் நுழைந்து புலனாய்வு செய்கிறேன் என்று கேமராவும் கையுமாக புறப்பட்டு விட்டனர்.

    ஒரு சேனல்களுக்கே ஒழுங்காய் நிகழ்ச்சி தயாரிக்க முடியாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் - சகட்டுமேனிக்கு இரண்டு, மூன்று, நான்கு என்று சேனல்கள் ஆரம்பித்து கொண்டே போகிறார்கள்- யாரும் தங்கள் தொலைக்காட்சிகளை பார்க்கிறார்களா, பார்க்கவில்லையா என்பதெல்லாம் அவர்கள் கவலையில்லை. அடிமாட்டு ரேட்டில் இருந்து அண்ணாந்து பார்க்கிற ரேட் வரைக்கும் விளம்பரங்களைப் பேசி வாங்குவதற்காகவே இதுபோன்ற சேனல்களை வரிசையாக தொடங்குகின்றனர்.

    தமிழக பார்வையாளர்களை என்ன செய்தால் ஈர்க்க முடியும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் புலனாய்வு செய்ததன் விளைவே க்ரைம் நிகழ்ச்சிகள். இதில் பெரும்பாலும் பாலியல் தொடர்பான கதைகள், அதனால் விளையும் மரணங்கள் போன்றவைகளை விலாவாரியாக, காண தூண்டும் காட்சியமைப்புடன் ஒளிபரப்புகின்றன.

    இந்த நிகழ்ச்சிகள் அதிக செலவில்லாத சூழ்நிலையில் மிக சுலபமாக தயாரிக்கக் கூடிய நிகழ்ச்சியாகவும், அதே நேரம் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய நிகழ்ச்சியாகவும் இருக்கின்றன. நடிகர்களுக்கு பணம் தரத் தேவையில்லை. கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் ஓடி வந்து பேட்டி கொடுக்க மக்கள் தயாராக இருப்பதே இதற்கு காரணம்.

    இந்த நிகழ்ச்சிகளில் வியாபார நோக்கு என்பதை தவிர - வேறு எந்த சமூக அக்கறையும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பல நேரம் தொலைக்காட்சி சேனல்களுக்கு தணிக்கை அவசியமோ என்கிற கேள்வி எழும்புகிற அளவுக்கு சில நிகழ்ச்சிகளில் எல்லைகள் மீறப்படுகின்றன. உதாரணமாக பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பிய நித்தியானந்தாவின் படுக்கை அறை காட்சி பள்ளி செல்லும் பிள்ளைகளைக்கூட பாதித்தது என்பதுதான் உண்மை.

    பள்ளிகளில் மாணவர்களிடையே படுகொலைகள், கள்ளகாதல் போன்றவை கூட மிக சர்வசாதாரணமாக பேசப்படுகின்றன. எப்படியெல்லாம் வசப்படுத்தினான், எத்தனை இடத்தில் கத்தியால் குத்தினான் போன்றவை விவரிக்கப்படுகின்றன. இது அப்பட்டமான சிறுவர்கள் மனதில் பதிவதோடு அவர்களின் மனதிலும் வக்கிர உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

    அதை விட கொடுமை என்னவென்றால் பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் பேட்டி எடுப்பதுதான் பெரிய இம்சை. அவமானத்தை தேடி தந்த உறவுகளை நினைத்து நொந்து வெந்து கொண்டிருப்பவர்களை- தங்கள் சுயலாபத்துக்காக படமாக்க முனைவது ஊடக தர்மமா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    English summary
    TV channels are telecasting crime stories in detail. Producers know that people are interested and can sell the story. That is the television business.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X