வாடகை கொடுக்க முடியல.. பட வாய்ப்பும் இல்லை... காக்கா முட்டை பாட்டி வேதனை!
சென்னை: காக்கா முட்டை திரைப்படத்தில் ஐஸ்வர்யாவின் மாமியாராக நடித்திருந்தவர் தான் சாந்தி மணி. அந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. தற்போது இவர் பட வாய்ப்பு இல்லாமல் வறுமையில் இருப்பதாக உருக்கமாகவும், நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என்று பேட்டியில் கூறியுள்ளார்.
பழம் பெரும் நடிகையான சாந்தி மணி, விஜயகாந்த், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், யோகி பாபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர், Behind Talkies என்கிற youtube சேனல் உங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் நான்காவது படித்துக் கொண்டு இருந்தபோது எங்களுடைய பள்ளிக்கு குடியரசு தலைவர் ராதா கிருஷ்ணன் வந்திருந்தார். அவர், தமிழ்நாட்டை பற்றி யாராவது பாட்டுப்பாடுங்க என்று கேட்டார். யாரும் பாடாததால், நான் பாடினேன். அந்த பாடலை கேட்டு விட்டு அவர் என்னை மிகவும் பாராட்டினார். குடியரசுத் தலைவர் முன் பாடியதால், பள்ளியில் என்னை அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதன் பின் பள்ளியில் நடந்த கலைநிகழ்ச்சியில் 'ஓ ரசிக்கும் சீமானே' என்ற பாடலுக்கு நடனம் ஆடினேன். அதிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது.

வாய்ப்பே இல்லை : என்னுடைய தாயார் விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் திரைப்படத்தில், மணி அடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்த படத்தை தொடர்ந்து அம்மா பல திரைப்படங்களில் நடித்தார். இதன் மூலமாக நானும் சினிமாவில் நடிக்க வந்தேன். அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ஏராளமான நடிகர்களுடன் நான் நடித்து இருக்கிறேன். நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தபோதெல்லாம் நடிகர் சங்கத்திற்கு காலையில் சென்று விட வேண்டும் மாலை வரையும் அங்கு தான் நாங்கள் இருப்போம். எப்படியாவது எங்களுக்கு ஏதாவது ஒரு பட வாய்ப்பு வந்துவிடும். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை ஒரு படத்தில் நடித்தால் அதில் மேனேஜருக்கே பாதி பணம் போய்விடுகிறது.
வாடகை வீட்டில்: இப்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் இல்லாததால், சீரியல்களில் நடித்து வருகிறேன். அதிலும் பெரிய வருமானம் இல்லை. என்னுடைய கணவர் 2004 ஆண்டில் இறந்து விட்டார். தற்போது நான் என்னுடைய மகனுடன் வசித்து கொண்டு இருக்கிறேன். அவனும் எனக்கு முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறான். வீட்டின் வாடகை நான்கு ஆயிரம் ரூபாய், மின் கட்டணம் எல்லாத்தையும் சேர்ந்து மாதம் ஏழு ஆயிரம் ரூபாய் வந்து விடுகிறது. இதை கொடுப்பதற்கே மிகவும் சிரமமாக இருக்கிறது. பலரும் தனுஷிடம் உதவி கேட்டால் செய்வார்கள் என்கிறார்கள். எனக்கு உதவி கேட்பதற்கு சங்கடமாக இருக்கு. எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தால் நன்றாக இருக்கும். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடித்துவிடுவேன். அதேபோல எனக்கு ஏதாவது ஒரு குடிசை மாற்று வாரியத்தில் குடி இருப்பதற்கு ஒரு வீடு கொடுத்து யாராவது உதவி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று அந்த பேட்டியில் சாந்தி மணி கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











