புதிய டிவி சேனலுக்கு இடம் மாறும் குஷ்பு!
நடிகை குஷ்பு புது சீரியலுக்கு கதை எழுத ஆரம்பித்துள்ளார். இம்முறை கலைஞர் டிவிக்கு இல்லையாம். புதிய சேனலுக்கு சீரியல் தயாரித்து நடிக்கப் போகிறார் குஷ்பு. இதை அவரே தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
திமுகவில் அரசியலில் பிஸியாக இருந்த நடிகை குஷ்பு, அங்கிருந்து விலகிய பின்னர் மீண்டும் சினிமா, தொலைக்காட்சி என பிஸியாகியுள்ளார்.
சன் டிவியில் முன்பு ஒளிபரப்பான குங்குமம் தொடர் மூலம் டிவி நடிகையாக அவதாரம் எடுத்தார் குஷ்பு. அந்த சீரியலுக்குப் பின்னர் அவர் ஜெயா டிவிக்குத் தாவினார். அங்கு கல்கி தொடரை தயாரித்து நடித்தும் வந்தார். அத்தோடு ஜெயா டிவியில் ஜாக்பாட் என்ற கேம் ஷோவையும் தொகுத்தளித்து வந்தார்.

திமுகவில் குஷ்பு
இந்த நிலையில் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக வந்த குஷ்பு திடீரென திமுகவில் இணைந்தார். கலைஞர் டிவியில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற சீரியலை தயாரித்து நடித்தார்.

விலகிய குஷ்பு
திடீரென திமுகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விலகினார். ஆனாலும் கலைஞர் டிவியில் குஷ்புவின் சீரியல் ஒளிபரப்பானது. மானாட மயிலாட ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் அவர் நடுவராகத் தொடர்ந்தார்.

முடிந்து போன சீரியல்
இந்த நிலையில் மானாட மயிலாட சீசன் 9 ரியாலிட்டி நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் முடிந்து போனது. பார்த்த ஞாபகம் இல்லையோ தொடரும் 475 எபிசோடுகளுடன் கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் முடிந்து விட்டது.

கலங்க வைத்த கடைசி எபிசோட்
திமுகவையும், கலைஞர் டிவியையும் விட்டு நிரந்தரமாக வெளியேறப்போவதை போலவே கடைசி எபிசோடுஅமைந்திருந்தது.

போகாதே போகாதே
குடும்பத்தை விட்டு நிரந்தரமாக பிரியப்போகிறாள் கதாநாயகி ஓவியா. ஆனால் அவளது கணவன் அதை தடுக்கிறான். ஆனால் இந்த பிரிவு அவசியமானது என்று கூறி வெளியேறுகிறாள். நான் உங்களை விட்டுப் போனாலும் என் நினைப்பு முழுவதும் உங்களைச் சுற்றியே இருக்கும் என்கிறாள் கதாநாயகி.

மதிப்பு இல்லாத இடத்தில்
கும்புடுற சாமி கூட மதிப்பு இருக்கிற இடத்திலதான் இருக்கும். நீ எம்மாத்திரம்? பொண்ணா பொறந்தா மனசு வெறுத்து போகணும்கிறது யாரு போட்ட சாபமோ? என்கிற வசனமும், வீரியம் உள்ள விதை வீதியில போட்டாலும் முளைக்கும்.இந்த தீபத்தோட பிரகாசம் எல்லாருக்கும் கிடைக்கணும் போன்ற வசனங்களும் கடைசி எபிசோடின் ஹைலைட்.

தூக்கிப் போட முடியுமா?
மனசார நேசித்த விசயத்தை தூக்கிப் போடமுடியுமா? வேண்டாம் ஓவியா உன் முடிவை மாத்திக்கோ என்று கூறியதற்கு உடைந்து போன உறவை ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்டு நிரந்தரமாக வெளியேறுகிறாள் கதாநாயகி ஓவியா(குஷ்பு).

எனக்கென்று ஒரு இடம்
இதை தடுக்கும் நண்பனிடமும், இதே பதிலைக்கூறும் ஓவியா, எனக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அங்கே போய் நான் இருப்பேன் என்வழியை நான் தேடிக்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிச்செல்கிறாள்.

மீண்டும் கதை எழுதும் குஷ்பு
பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர் முடிந்து போனதால் குஷ்பு மீண்டும் பேனாவை கையில் எடுத்துள்ளார். இம்முறை கலைஞர் டிவிக்கு இல்லை. புது டிவி சேனல் என்று கூறியுள்ளார்.

கல்கிதான் பெஸ்ட்
ஜெயாடிவியில் அவர் தயாரித்த ‘கல்கி' தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை அவரே தனது சமூக வலைத்தளபக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். அதேபோல புது சீரியல் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











