புதிய தலைமுறை டிவியில் மகளிரும், மக்களாட்சியும்
"மகளிரும் மக்களாட்சியும்" எனும் புதிய நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பெண்களை குறிவைத்துத்தான் பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. காரணம் எந்த வெற்றிக்கு பின்னாலும் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
பெண்களுக்கான நிகழ்ச்சிகள் என்ற அளவில் சமையல் நிகழ்ச்சிகள், தொடர்களைத்தான் பெரும்பாலான தொலைக்காட்சிகள், ஒளிபரப்பி வருகின்றன..

பெண்களுக்கு செய்தி
செய்திச்சேனல்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லிவிடலாம். அடுப்பூதும் பெண்களுக்கு செய்தி எதற்கு என்று நினைத்தோ என்னவோ செய்திச்சேனல்கள் பெண் நேயர்களுக்கான நிகழ்ச்சிகளை தரத் தயங்குகின்றன.

விவாத களங்களில் பெண்கள்
தமிழ் சேனல்களாகட்டும், ஆங்கில சேனல்களாகட்டும், பெண்களுக்கான பிரச்னைகள் என்று வரும்போது மட்டும் அதற்குரிய விவாதங்களை நடத்தி முடித்துவிடுகின்றன.

மகளிரும் மக்கள் ஆட்சியும்
ஆனால், தமிழ் செய்திச் சேனலான புதிய தலைமுறை வழக்கமான சேனல்களில் இருந்து மாறுபட்டு பெண் நேயர்களை இலக்காக கொண்டு மகளிரும், மக்களாட்சியும் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

தேர்தல் களத்தில் மகளிர்
இது வழக்கமான 33 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு ஒருநாளில் முடிந்துவிடும் நிகழ்ச்சி அல்ல...தேர்தல் களம் பரபரத்துக் கிடக்கும் இந்த சமயத்தில் பெண்கள் அரசியல் பேசும் களமாக மகளிரும் மக்களாட்சியும் நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது.

அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி
எந்த கட்சி சார்பும் இல்லாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.. பெண்கள் அரசியலுக்கு வந்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்? பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு எந்த அளவுக்கு தேவையாக இருக்கிறது?

அரசியலில் பெண்கள்
ஏன் பெண்களின் பங்கு அரசியலில் அதிகரிக்க வேண்டும் என்று ஆக்கபூர்வமான கேள்விகளை எழுப்பும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே பெரிய அளவுக்கு பெண்களை கவர்ந்து வருகிறது..

பல தரப்பு பெண்கள்
மாணவிகள், குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள், விளையாட்டு வீராங்கனைகள் என வெவ்வேறு தரப்பு பெண்களையும் அரசியல் பேச வைக்கும் இந்த புதிய முயற்சி பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

பெண்களால் பெண்களுக்காக…
இந்த நிகழ்ச்சி, பெண்களால் பெண்களுக்காக, பெண்களாலேயே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பது மற்றுமொரு சிறப்பம்சம். திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தினந்தோறும் ஒவ்வொரு வடிவத்தில் பெண்களை அரசியல் பேச வைக்கிறது..


Click it and Unblock the Notifications











