For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்திசாலி எங்கும் இருக்கலாம்: கலைஞர் டிவியின் கதை நேரம்!

By Mayura Akilan
|

Revathy Shankaran
கலைஞர் டிவியில் காலை நேரத்தில் ஒளிபரப்பாகும் மங்கையார் சாய்ஸ் நிகழ்ச்சியை ரேவதி சங்கரன் தொகுத்து வழங்குகிறார்.

அதில் சமையல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் குழந்தைகளுக்காக கூறப்படும் கதையும், பழமொழியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்று காலையில் திருமதி கற்பக வல்லி கூறிய கதை மிகவும் அறிவுப்பூர்வமாகவும், குழந்தைகளுக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அந்த கதையை நீங்களும் தெரிஞ்சுக்கங்க.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவர் ஒருநாள் மந்திரி சபையை கூட்டி விவாதம் செய்து கொண்டிருந்தப்ப எதிரி நாட்டைச் சேர்ந்த தூதுவன் ஒருவன் ராஜாவை பார்க்க வந்தான். வந்த தூதுவன் எதுவுமே பேசாம ராஜாவோட சிம்மாசனத்தை சுற்றி ஒரு வட்டம் போட்டான். தூதுவனின் இந்த செய்கைக்கு ராஜா உட்பட யாராலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனே ராஜா இந்த வட்டத்திற்கு சரியான விளக்கம் அளிப்பவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் அப்படின்னு அறிவிச்சார். ஆனாலும் யாருமே வந்து சொல்லலை. இதனால் அரண்மனை காவலர்கள் குதிரையில் ஏறி புத்திசாலியை கண்டுபிடிக்க கிளம்பினாங்க.

ஊர் எல்லைக்கு வந்துட்டாங்க. அங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு சின்ன குடில் இருந்தது. அமைதியான அந்த குடிலில் ஒரு தொட்டில் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. முற்றத்தில் நெல் மணிகள் காய வைக்கப்பட்டிருந்தன. அதை பறவைகள் கொத்தி தின்று விடாதவாறு பெரிய விசிறி ஒன்று ஆடிக்கொண்டிருந்தது.

இதைப் பார்த்த வீரர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆச்சரித்துடன் வீட்டிற்குள் நுழைந்தனர். மற்றொரு அறையில் ஒரு நெசவாளி நெசவு செய்து கொண்டிருந்தார்.

அவரிடம் குழந்தையின் தொட்டில் தானாக ஆடுவது குறித்தும், முற்றத்தில் தானாக விசிறி வீசுவது பற்றியும் கேட்டனர் வீரர்கள். அவர்களுக்கு பதிலளித்த தொழிலாளியோ, “ இது ஒன்றும் பெரிய விசயமில்லை. என்னுடைய நெசவு செய்யும் தறியில் இரண்டு கயிறுகளை கட்டியிருக்கிறேன். ஒன்றை குழந்தையின் தொட்டிலிலும், மற்றொன்றை விசிறியிலும் இணைத்துள்ளேன். நான் நெய்யும் போது அந்த கயிறு இழுக்கப்படுவதால் இரண்டுமே தானாக ஆடுகின்றன என்றார்" அந்த நெசவாளி.

இதைக் கண்ட வீரர்கள். ஆஹா நமது மன்னரின் குழப்பத்தை தீர்க்கும் புத்திசாலி இவன்தான் என்று உடனே நடந்த விசயத்தை நெசவாளியிடம் கூறி, மன்னரைப் பார்க்க வருமாறு அழைத்தார்கள். நெசவாளியும் உடனே ஒப்புக்கொண்டு வீரர்களுடன் கிளம்பினார். போகும் போது குழந்தைகள் விளையாடும் இரண்டு பொம்மைகளை எடுத்துக்கொண்டான். கூடவே அவன் வீட்டில் வளர்க்கு கோழி ஒன்றையும் எடுத்துக்கொண்டு சென்றான்.

அரண்மனை தர்பாருக்கு சென்ற நெசவாளி சிம்மாசனத்தை சுற்றி போடப்பட்டிருந்த வட்டத்தை கவனித்தான். அதில் பொம்மைகளை தூக்கிப் போட்டான். இதைப்பார்த்த தூதுவன் உடனே தன் கையில் இருந்த நெல்மணிகளை தூக்கிப் போட்டான்.

நெசவாளியும் தன் கையில் இருந்த கோழியை விட்டு நெல் மணிகள் முழுவதையும் சாப்பிட வைத்தான். தூதுவன் உடனே பயந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

அரண்மனையில் இருந்தவர்கள் யாருக்கும் எதுவுமே புரியவில்லை. நெசவாளியின் செயலுக்கு விளக்கம் கேட்டார் மன்னர்.

“ அது ஒன்றுமில்லை மன்னா, உங்கள் நாட்டைச் சுற்றிலும் நால்புறமும் படைகளைக் கொண்டு தாக்கப்போகிறோம் என்று வட்டம் போட்டான் தூதுவன். நானோ குழந்தைகள் விளையாடும் பொம்மைகளைப் போல எங்கள் வீரர்கள் உங்கள் படை வீரர்களை சூறையாடி விடுவார்கள் என்றேன். அதற்கு அவனோ, நெல்மணிகளைப் போல கணக்கில் அடங்காத வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்றான். நானோ ஒரு கோழியை விட்டு அதை சாப்பிட வைத்ததன் மூலம் எங்கள் நாட்டில் உள்ள ஒரு வீரனே போதும் உங்கள் நாட்டு வீரர்களை வெற்றி கொள்ள, அந்த அளவிற்கு வீரமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள் என்றேன். உடனே தூதுவன் ஓடிவிட்டான்" என்றான் நெசவாளி.

இதை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். பெரிய பதவியில் இருப்பவர்கள்தான் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பதில்லை. நெசவு செய்யும் தொழிலாளி கூட புத்திசாலியாக இருக்க முடியும் என்பதை மன்னரும் அரண்மனையில் இருப்பவர்களும் உணர்ந்து கொண்டனர். அந்த நெசவாளிக்கு பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார் மன்னர். இந்த கதையை பதவியில் இருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி முடித்தார் கற்பகவல்லி.

English summary
Kalaignar TV telecasts Mangayar choice in its morning show. The programme has been produced by AVM.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more