இந்த கோப்பை மீது சத்தியம்.. உருக்கமாக பேசிய முத்துக்குமரன்.. இணையத்தில் குவியும் வாழ்த்து!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், அதிகவாக்குகளை பெற்ற முத்துக்குமரன் வெற்றிக் கோப்பையை பெற்றார். இதையடுத்து, முத்துக்குமரன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என் உழைப்புக்கு இவ்வளவு அன்பு கிடைக்குமா என்று நினைத்து மலைத்துப்போய் நிற்கிறேன் என்று பேசி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை இந்த முறை விஜய்சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில், டாப் 5 லிஸ்ட்டில் ஜாக்குலின் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பணப்பெட்டி டாஸ்கில் 2 நிமிடம் தாமதமாக வந்ததால், அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, டாப் ஐந்து போட்டியாளர்களாக முத்துக்குமரன், சௌந்தர்யா,விஷால், பவித்ரா, ரயான் ஆகியோர் இருந்தனர். இதில் முத்துக்குமரன் முதல் இடத்தை பிடித்து டைட்டிலை வென்றார்.

இதில், முத்துக்குமரனுக்கு பரிசுத் தொகையாக ரூ.40.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுத்தவிர பிக்பாஸ் வீட்டில் இருந்ததுக்கான சம்பளமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகையை வைத்து கடன் இல்லாமல் வீடு கட்டுவேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் பணத்தை சமூகத்திற்காகவும் செலவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நெகிழ்ந்த முத்துக்குமரன்: வெற்றிக்கோப்பையுடன் வெளியில் வந்த முத்துக்குமரன், கையில் கோப்பையை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நன்றி மறப்பது நன்றன்று இதை இந்த காணோளிக்காக, இந்த கணத்திற்காக நான் சொல்லவில்லை. என் காலத்திற்கும் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கோப்பையை எல்லோரும் சேர்ந்து எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். இது மிகவும் கனமாக இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த சில நண்பர்கள் அனைவரும் வெளியில் மக்களிடம் உனக்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கு என்று கூறினார்கள். அப்போது, எல்லாம் நான் நம்பவில்லை. ஆனால் வெளியில் வந்து உங்கள் அன்பை பார்க்கும்போது, எனக்கே வியப்பாக இருக்கிறது. எனக்கா இத்தனை அன்பும் என்று வியந்து போனேன். என் உழைப்புக்கு இவ்வளவு அன்பு கிடைக்குமா என்று நினைத்து மலைத்துப்போய் நிற்கிறேன்.
கோப்பையின் மீது சத்தியம்: என்னை இவ்வளவு நேசித்த என் மக்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லலாம் என்று யோசித்து யோசித்து பார்த்தேன். சரி அதற்கு நன்றி என்றே சொல்லிவிடலாம் என்று தோன்றியது. இந்த கப்பை முதன் முதலில் காண்பித்து இந்த கப்பிடம் என்ன பேசுவீர்கள் என்று கேட்டார். மக்களின் அன்பும் அங்கீகாரமுமான, கோப்பை மிக நிச்சயமாக என் உண்மையினாலும், நான் நானாக இருப்பதாலும் காப்பாற்றிக் கொள்வேன். இது இந்த கோப்பையின் மீது சத்தியம், என் உழைப்பின் மீது சத்தியம் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் முத்துக்குமரனுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
டைட்டிலை தட்டி சென்று இருக்கும் முத்துக்குமரன், விஜய் டிவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தொகுப்பாளராக யூடியூப் சேனலில் பணியாற்றி வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











