மலடின்னு சொல்லி ஹர்ட் பண்ணியிருக்காங்க.. கல்யாணம் ஆன ஒரே மாசத்துல.. மைனா நந்தினி உருக்கம்!
சென்னை: திருமணம் ஆகிவிட்டாலே அடுத்த மாதமே கர்ப்பமாகி விட வேண்டும் என இன்றைக்கும் மாமியார்கள் நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் தானும் அந்த மோசமான வசவுகளை சந்தித்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார் மைனா நந்தினி.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பிரபலமான மைனா நந்தினி பிக் பாஸ் போட்டியிலும் கலந்துக் கொண்டு பிரபலமானார். சில படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 7 வருடமாக தான் எந்தவொரு சிரீயலிலும் நடிக்கவில்லை என்றும் உண்மையை சொல்லப் போனால் யாரும் தனக்கு வாய்ப்புகளை தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மைனா நந்தினி என்ன செய்கிறார் என்று பார்த்தால் சில படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், தனது கணவருடன் இணைந்து லவ் ஆக்ஷன் டிராமா என ரீல்ஸ் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார்.
முதல் கணவர் மரணம்: 2012ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அழகி சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமான மைனா நந்தினி சமயல் மந்திரம் எனும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர், அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் நடித்த இவர், விஜய் டிவியில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து மைனா நந்தினி என்றே பிரபலமானார். கார்த்திகேயன் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட மைனா நந்தினி அதே வருடத்தில் தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டு மரணிக்க ஏகப்பட்ட பழிகளையும் மோசமான வசவுகளையும் சந்தித்து மனதளவில் காயப்பட்டார்.
2வது திருமணம் செய்யக்கூடாதா?: மைனா நந்தினி 2019ம் ஆண்டு யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பிரியங்கா தேஷ்பாண்டே சமீபத்தில் 2வது திருமணம் செய்த நிலையில், ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வருவது போல அப்போதே மைனா நந்தினியை சுற்றி பல சர்ச்சைகள் வெடித்தன. மலடி, விதவை, கறுப்பி என பல அவமானங்களை தான் சந்தித்ததாகவும் தற்போது அதையெல்லாம் ஒவ்வொரு டாப்பிக்காக வைத்து லவ் ஆக்ஷன் டிராமாவில் சீரிஸாக செய்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமணமான ஒரே மாசத்துல: முதல் கணவருடன் குழந்தை ஏதும் பிறக்காத நிலையில், 2வதாக யோகேஸ்வரனை திருமணம் செய்துக் கொண்ட ஒரே மாதத்தில் மைனாவின் மாமியார் பீரியட்ஸ் வந்ததும் என்னம்மா இப்படி ஏமாத்திட்ட என்று வேடிக்கையாக பேசியதும் தன்னை ஹர்ட் செய்தது என வெளிப்படையாக கூறியுள்ளார். மைனா நந்தினியின் கணவர் யோகேஷ்வரனை பார்த்து அவரது அம்மா என்னடா உனக்கு தெம்பு இல்லையா என்றே கேட்டுள்ளார் என்றும் அவர் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. என்னதான் படித்து, சுயமாக சம்பாதித்தாலும் இன்னமும் இந்த சமூகம் பெண்களிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்டு முடக்கிக் கொண்டு தான் இருக்கின்றன என்றும் பெண்களே இதுபோன்ற கேள்விகளை பெண்களுக்கு முன்பாக எழுப்புவது தான் இதில் காலக்கொடுமை என்றும் அவர் பேசியுள்ளார்.
குழந்தை இருக்கு: 2வது மாதமும் கர்ப்பமாகாத நிலையில், மைனா நந்தினி வீட்டிலும் ஒரு மாதிரி பேச ஆரம்பித்துவிட்டார்களாம். 3வது மாதத்தில் எப்படியாவது தனக்கு குழந்தை உண்டாக வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்த நிலையில், கர்ப்பமானதும் தான் அனைத்து வாய்களும் பேசுவதை நிறுத்தின என்றார். அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாக உள்ளார் மைனா நந்தினி என்பது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக பட வாய்ப்புகளோ சீரியல் வாய்ப்புகளோ தனக்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











