என்ன குடும்பம்யா உங்களது? இளையராஜாவை நினைத்து கங்கை அமரனிடம் வாய்விட்ட மிஷ்கின்.. இது எப்போ?
சென்னை: இயக்குநர் மிஷ்கின் - இளையராஜா காம்பினேஷன் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். 80களில் இருந்து இசையமைத்து வரும் இளையராஜா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாக உள்ளார். திரை இசையில் அவர் செய்த மாயாஜாலங்கள் பலரது கற்பனைக்கும் எட்டாதது. இப்படி இருக்கும்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டு வருகிறார் இயக்குநர் மிஷ்கின். இதில் அவர் இளையராஜா குறித்து பகிர்ந்து வரும் பல சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் மிஷ்கின் கங்கை அமரனை நோக்கி, உங்கள் குடும்பம் எல்லாம் என்ன மாதிரியான குடும்பம்யா என்று கேட்டார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சூப்பர் சிங்கர் சீசன் 11இல் கடந்த வாரத்தில் சில்க் ஸ்மிதா ரவுண்ட் என்ற தலைப்பில் பாடல்கள் பாடப்பட்டது. அதாவது இந்த ரவுண்டில் போட்டியாளர்கள் அனைவரும் கிளாமர் பாடல்களைப் பாடினார்கள். அதில் போட்டியாளர், ஆன் பென்சன் மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற பொன்மேனி உருகுதே என்ற பாடலைப் பாடினார். பாடலை அவர் சிறப்பாக பாடி முடித்த பின்னர், சூப்பர் சிங்கரில் இசை அமைத்து வரும் இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணி, இந்த பாடலின் இசையில் இளையராஜா எப்படி எல்லாம் மேஜிக் செய்துள்ளார் என்று தான் இசைத்து வந்த பேஸ் கிட்டாரில் வாசித்துக் காட்டினார்.

அதாவது பாடலின் முன் இசையை பேஸ் கிட்டாரில் இளையராஜா இசையமைத்து இருப்பார். அதை வாசித்துக் காட்டினார் மணி. இதை பார்த்ததும் நடுவராக அமர்ந்திருந்த மிஷ்கின் தனக்கு அருகில் அமர்ந்திருந்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரனைப் பார்த்து, என்னயா குடும்பம் உங்களுது, ஏன்யா உன் குடும்பத்துல இருப்பவர்கள் எல்லாம் இப்படி இருக்கீங்க? எதுக்குயா இப்படி எல்லாம் மியூசிக் போடுறீங்க என்று கத்திக் கொண்டே விளையாட்டாக கேட்டார்.

இதைக் கேட்ட கங்கை அமரனோ, ஆமாம், இது எங்க குடும்பம் தான். நாங்க அப்படித்தான் மியூசிக் போடுவோம் உனக்கு என்னயா? என்று விளையாட்டாக பதில் அளித்தார். அதை அடுத்து கங்கை அமரனின் தலையில் அழுத்தமாக முத்தமிட்டார் மிஷ்கின். இவர்களின் இந்த நடவடிக்கை பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் இளையராஜா என்றாலே இயக்குநர் மிஷ்கின் குழந்தை போல மாறிவிடுகிறார். அவரது பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம் என்பது போல நடந்து கொள்வார். இளையராஜாவை ஆராதிப்பதில் முதல் நபராக இருக்க ஆசைப்படும் மிஷ்கின் சில்க் ரவுண்ட் முழுவதும் இளையராஜாவைக் கொண்டாடிக் கொண்டே இருந்தார்.


Click it and Unblock the Notifications











