புதுயுகம் டிவியில் எறிபத்த நாயனார் கதை
தீவிர பக்தியினால் இறைவனுடன் கலந்த 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு 'நாயன்மார்கள்' மெகா தொடராக புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை, 'தினமும் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை திருநீலகண்டர், மாற நாயனார், மானக்கஞ்சார நாயனார், ஐயடிகள், இடங்கழி நாயனார், புகழ்த்துணை நாயனார், குறும்ப நாயனார், கண்ணப்ப நாயனார், காரைக்கால் அம்மையார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகியுள்ளது.

எறிபத்த நாயனார்
இந்த வாரம் முதல் எறிபத்த நாயனாரின் வாழ்க்கைக் கதை ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
சிவனடியார்களுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம், தன்னுடைய கோடரி ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்களைக் காக்கும் பணியை செய்துவருகிறார் எறிபத்தர்.

பட்டத்து யானை
அவரது ஊரில் வசிக்கும் சிவகாமியாண்டார் ஒரு நாள் பூக்கூடையுடன் கோயிலுக்குச் செல்கிறார். அப்போது கருவூரை ஆளும் புகழ்ச் சோழருடைய பட்டத்து யானை எதிரே வந்தது.

மதம் பிடித்த யானை
அந்த யானைக்குக் காவலாக ஐந்து பாகன்களும் உடன் வந்தனர் திடீரென அந்த யானைக்கு மதம் பிடிக்கவே வெறிபிடித்து ஓடத் தொடங்கியது. பயந்துபோன மக்கள் சிதறி ஓடினார்கள்.

சிதறிய மலர்கள்
ஆவேசத்துடன் ஓடிவந்த யானை, சிவகாமியாண்டாரின் பூக்கூடையை தரையில் தட்டிவிட்டது. இறைவனுக்கு பூஜை செய்யும் மலர்கள் வீணாகிவிட்டதே என்று சிவகாமியாண்டார் கதறியழுதார்.
அப்போது அங்கு வந்த எறிபத்தர், யானை மீது சினம் கொண்டார். மதம் கொண்ட யானையுடன் மோதி, அதன் துதிக்கையை வெட்டித்தள்ளினார். தடுக்க முயற்சித்த பாகன்களையும் வெட்டி சாய்த்தார்.

எறிபக்தரின் நிலை
இந்தத் தகவல் கேள்விப்பட்டு மன்னர் புகழ்ச்சோழர் ஆத்திரத்துடன் எறிபத்தரைக் கொல்வதற்குக் கிளம்புகிறார். அடுத்து நடக்கும் அற்புதங்களை புதுயுகம் டிவியில் கண்டு மகிழலாம்.

பிரபல நடிகர்கள்
இந்தத் தொடரை பிரம்மா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்ராஜ் ஜோதி, ஹர்சவர்தனா தயாரிக்க, பிரம்மா இயக்குகிறார். இந்தத் தொடரில் பாலமுருகன், ஹன்சினி, செந்தில் அரசு, சுஜி, வினோத்குமார், அனு, ஹரிஸ்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயன்மார்கள் தொடர்கள்
இறைவன் திருவிளையாடல்களை விவரிக்கும், ‘நாயன்மார்கள்' மெகா தொடரை புதுயுகம் சேனலில் தினமும் மாலை 6.00 மணிக்குக் காணத்தவறாதீர்கள் என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











