சாதி வெறியும்…. கெளரவக் கொலைகளும்…. ''நீயா நானா'' உணர்த்திய உண்மை!

By Mayura Akilan

நான் திருமணம் செய்து கொண்டவர் ஒரு தலித் என்பதால் அவரை இழந்து விட்டு வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறேன் என்று அழுதார் ஒரு இளம் பெண்.

பார்வை இழந்தவர்கள் காதலித்தால் கூட அவர்களுக்கு குறுக்கே சாதி நிற்கிறது என்று பேசினார்கள் கண்ணிழந்த ஒரு தம்பதியர்.

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதாலேயே ஒதுக்கப்பட்டு நிற்கிறோம் என்று குமுறினார்கள் காதல் திருமணம் செய்து கொண்ட எண்ணற்ற காதலர்கள்.

இந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் குறிப்பாக சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். காதலித்த காரணத்தாலும், வேறு சாதிக்காரரை திருமணம் செய்து கொண்ட காரணத்தாலும் தாங்கள் சந்திக்கும், சிக்கல்களை விவரித்தனர்.

காதல்தான் ஜெயித்தது

காதல்தான் ஜெயித்தது

வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக பெற்றோர்கள் பிரிக்க முயற்சித்தனர். அழுது அடம் பிடித்து காதலில் ஜெயித்தோம் என்று கூறினர் ஒரு தம்பதி.

பிரிக்க நினைத்தும் முடியவில்லை

பிரிக்க நினைத்தும் முடியவில்லை

பார்வை குறைபாடு உடைய ஒரு பெண் முற்றிலும் பார்வையற்ற ஒருவரை நேசித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் இருந்து பிரித்து மறைத்து வைத்தனர். பின்னர் பலவித போராட்டத்திற்குப் இணைந்தோம் என்றார். மந்தீரகம், செய்வினை எல்லாம் செய்தும் எதுவும் பலிக்கவில்லை, காதல்தான் ஜெயித்தது என்றார்.

சினிமாவில் பதிவு செய்யப்படுகிறதா?

சினிமாவில் பதிவு செய்யப்படுகிறதா?

சினிமாவில் கூட சொல்லாத பல கண்ணீர்கதைகள் பேசப்பட்டன. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த திரைப்பட இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சேரன் ஆகியோர் காதல் பற்றி தங்கள் திரைப்படங்களில் கையாண்ட விதத்தை கூறினர்.

நான் வெட்கப்படுகிறேன்

நான் வெட்கப்படுகிறேன்

பாண்டவர் பூமி படத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட சகோதரியின் கழுத்தை வெட்டுவது போன்ற ஒரு காட்சி இருந்தது. அதை தியேட்டரில் பார்த்த போது எல்லோரும் அந்த காட்சிக்கு கை தட்டினார்கள். இது போன்ற ஒரு காட்சி எடுத்ததற்கு இப்போது நான் வெட்கப்படுகிறேன் என்றார் சேரன். ஏனென்றால் அதன் தாக்கம் மக்களிடம் வேறு விதமாக சென்று சேர்ந்து விட்டது என்றார்.

என்ன சாதி என்று சொல்லுங்கள்

என்ன சாதி என்று சொல்லுங்கள்

சாதியை ஒழிப்பதற்கு வழி பள்ளிகளில் இருந்தே தொடங்கவேண்டும் என்றார் சேரன். என்னுடைய குழந்தைக்கு நான் என்ன சாதி என்று குறிப்பிடுவதில்லை. இதற்காக பல சிக்கல்களை சந்தித்திருக்கிறேன் என்றார். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சலுகைகளைப் பெற சாதியை குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று வாதடினர் சில சமூக ஆர்வலர்கள்.

காதலித்தால் கொலைதான்

காதலித்தால் கொலைதான்

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனை தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டால்தான் எதிர்ப்புகளும், கவுரவக் கொலைகளும் அதிகம் நடைபெறுகிறது என்றார் ஒரு சமூக உணர்வாளர்.

கணவரை கொலை செய்த பெற்றோர்

கணவரை கொலை செய்த பெற்றோர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண், தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்பதாக கூறினார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட தங்களை, குழந்தை பிறந்த பின்னரும் விட்டு வைக்காமல், தன்னுடைய பெற்றோரும் உறவினரும் இணைந்து கணவரை கொலை செய்து விட்டனர் என்றார். இப்போது ஆதரவற்று நிற்கும் தன்னையும். தன் குழந்தையும் கூட கொல்ல முயல்வதாக கண்ணீருடன் கூறினார் அவர்.

கண்ணீர் விட்டு அழுத பார்வையாளர்கள்

கண்ணீர் விட்டு அழுத பார்வையாளர்கள்

அந்தப் பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரத்தைக் கேட்டு இயக்குநர்கள் சேரன், பாலாஜி சக்திவேல், ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். அதிர்ச்சியில் உறைந்து போன பார்வையாளர்களிடம், இதுவும் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது என்றார் கோபிநாத்.

சாதி என்பது மூளையில் இருக்கிறது

சாதி என்பது மூளையில் இருக்கிறது

சுவரினாலோ, பொருளினாலோ சாதியை உணர்த்த முடியாது, கொலை செய்வதினால் சாதியை அழித்து விட முடியாது. இருவேறு சமூகத்தை பிரிக்க சுவர் எழுப்புவதும், அதை உடைப்பதனால் மட்டும் தீண்டாமையை அழித்து விட முடியாது. சாதி என்பது மனிதர்களின் மூளையில் இருக்கும் உணர்வு இதை முளையிலேயே கிள்ளி எறிவதன் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்றார் ஒரு சமூக ஆர்வலர்.

தர்மபுரி சம்பவம் உணர்த்துவது என்ன?

தர்மபுரி சம்பவம் உணர்த்துவது என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டனர் என்பதற்காக மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பின்னர் கவுரவக் கொலைகள் இந்த மாவட்டத்தில் அதிகரித்துவிட்டது என்று பதிவு செய்தார் கவின்மலர்.

பிரகாஷ்ராஜ் தயாரித்த கௌரவம்

பிரகாஷ்ராஜ் தயாரித்த கௌரவம்

சாதி மாறி திருமணம் செய்தவர்களை கவுரக் கொலை செய்வது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இதை ஒரு படமாக கௌரவம் என்ற பெயரில் தயாரித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ், ராதா மோகன் இயக்கியுள்ள இந்த படத்தின் கேசட் நீயா நானா நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

காதலர்களுக்கு கவுரவம்

காதலர்களுக்கு கவுரவம்

பார்வையிழந்த நிலையிலும் போராடி காதலில் வெற்றி பெற்ற தம்பதியர் கேசட் வெளியிட அதை கவுரக் கொலையினால் கணவரை இழந்த இளம்பெண் பெற்றுக் கொண்டார்.

என் பெற்றோரும் கஷ்டப்பட்டனர்.

என் பெற்றோரும் கஷ்டப்பட்டனர்.

கௌரவம் படத்தின் பாடலாசிரியர் மதன் கார்க்கி, காதல் திருமணத்தால் தன்னுடைய பெற்றோர், வைரமுத்து, பொன்மணி வைரமுத்து எத்தனை சிரமத்திற்கு ஆளாயினர் என்று பதிவு செய்தார். அவர்கள் போராடி வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டார்.

சினிமாவிலும் சாதி இருக்கே

சினிமாவிலும் சாதி இருக்கே

இன்றைக்கு எல்லா இடத்திலும் சாதி இருக்கிறது. அதேபோல் சினிமாத்துறையில் சாதி இருக்கிறதா என்று கேட்டார் கோபிநாத், அதற்கு சேரன், தன்னிடம் உதவி இயக்குநர்களாக வருபவர்களிடம் தான் என்ன சாதி என்று கேட்பதில்லை என்றார். ஆனால், என்னதான் காதல் திருமணத்தைப் பற்றியும், சாதிய மறுப்பு பற்றியும் பேசினாலும் திரைத்துறையிலும் சாதி இருக்கிறது என்று ஒத்துக் கொண்டார் பிரகாஷ்ராஜ்.

சாதி இரண்டொழிய வேறில்லை…

சாதி இரண்டொழிய வேறில்லை…

பள்ளியில் படிக்கும் போதே "சாதி இரண்டொழிய வேறில்லை"... என்று கூறிய ஔவையார், இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் என்று சாதி பற்றி விளக்கியுள்ளார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நீதி நெறியை படித்தும் கூட நம் மக்கள் இன்னமும் சாதிய முகமூடியை அணிந்து கொண்டுதான் வலம் வருகின்றனர். மூளையில் படிந்திருக்கும் அந்த எண்ணத்தை அகற்றாத வரை தர்மபுரி சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்த்தியது இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X