போன மாசம் நீயா நானாவில் 20 தோசையால் பிரபலமான பிரணவ்! அம்மா கூட அப்படி சொன்னாங்களே! ரயிலில் அடிபட்டு பலி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் விதவிதமான சாப்பாட்டு காதல் பற்றிய எபிசோடு நடைபெற்றது. அதில் ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில் ப்ரணிதா என்ற பெண் தன்னுடைய அண்ணனுக்கு தோசை பிடிக்கும் என்பதால் எங்க வீட்டில் தினமும் தோசை மட்டும் தான் இருக்கும் என்று சொல்லி இருந்தார்.
அதைத்தொடர்ந்து பிரணிதாவின் அம்மாவும் தன்னுடைய மகன் 20 தோசைக்கு மேலே சாப்பிடுவார் என்று சொல்லி பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த புதன்கிழமை சென்னையில் நடந்த ரயில் விபத்தில் பிரணிதாவின் அண்ணன் பிரணவ் பலியாகி இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 20 தோசை என்னுடைய பையன் சாப்பிடுவான் என்று பிரணவ் என்பவரின் அம்மா பேசியிருந்த நிலையில் யார்ரா அந்த பிரணவ் என்ற தேடல் இணையத்தில் அதிகமாக இருந்த நிலையில் பல சேனல்களும் இந்த குடும்பத்தை பேட்டி எடுத்திருந்தனர்.
நீயா நானா நிகழ்ச்சியில் பிரபலமான பலரை பல நிகழ்ச்சிகள் பேட்டி எடுத்து வருவது போல தான் இவர்களும் எடுக்கப்பட்டிருந்தனர். அதில் அந்த பிரணவ் என்பவரின் அம்மா பேசுகையில் என்னுடைய மகன் தோசை நல்லா விரும்பி சாப்பிடுவான். நான் வேலை பார்ப்பதால் எனக்கு தோசை சுடுவது தான் எளிமையாக இருக்கும். அதனால் காலையிலும் மாலையிலும் இரண்டு நேரமும் எங்கள் வீட்டில் தோசை தான்.
மதியம் மட்டும் தான் சாப்பாடு இருக்கும் என்று பேசி இருந்தார். அதற்கு அந்தப் பெண்ணின் மகள் பிரணிதா பேசுகையில், எங்க அண்ணனுக்கு தோசை பிடிக்கும் என்பதற்காகத்தான் அம்மா தினமும் இந்த வீட்டில் தோசை சுடுறாங்க.. சில நேரங்களில் அம்மாவுக்கு உடம்புக்கு முடியலன்னா என்னை தான் தோசை சுட சொல்லுவாங்க. அப்போ தோசை போதுமானு நான் கேட்டா அம்மா என்னை திட்டுறாங்க என்று கம்ப்ளைன்ட் பண்ண, அதற்கு கோபிநாத் ஏன் அப்படி என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்ணின் அம்மா பேசுகையில், என் பையன் நாலு அஞ்சு தோசை இல்ல 20க்கு மேல கூட சாப்பிடுவான். நான் ஒரு நாள் கூட இது எத்தனாவது தோசை என்று சொல்ல மாட்டேன். அதுபோல போதுமா என்று கேட்க மாட்டேன். அது என் மகனுக்கு மட்டுமல்ல யாருக்கா இருந்தாலும் நான் அப்படித்தான்.. நான் தோசை சுட்டு கொடுத்தா அவங்க வயிறு நிறையனுமே தவிர இது போதுமா என்று கேட்டால் அவங்களுக்கு பாதியிலே போதும் என்று சொல்லிடுவாங்க.
நான் அப்படி சொல்ல மாட்டேன் என்று சொல்லியிருந்தார். அதே நேரத்தில் அந்தப் பெண்ணிற்கு ஒரு கை செயலற்றுப் போய் இருக்கிறது அவர் ஆபீசில் வேலை பார்த்துவிட்டு வீட்டையும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு கோபிநாத் யாரு உங்க மகன் 20 தோசைக்கு மேலே சாப்பிடுவார் என்ற சொல்றீங்களே எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு என்று சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் இந்த குடும்பத்தினர் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி இருந்தனர். ஆனால் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை. கடந்த புதன்கிழமை குரோம்பேட்டை மற்றும் பொன்னேரியில் ரயில் நிலையங்களில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் விபத்து ஏற்பட்டு நாலு பேர் மரணம் அடைந்திருந்தனர் அதில் பிரணவும் ஒருவர்.
கடந்த புதன்கிழமை இரவு பத்து முப்பது மணி அளவில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற போது பிரணவ் மற்றும் அவரோடு வந்த சதீஷ் என்பவர் மீதும் தின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரணவ் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது மொபைல் போனில் பேசிக்கொண்டு ரயில் பாதையை கடக்க நடந்ததாகவும், அதனால் டிரெயின் சத்தத்தை அவர் கேட்கவில்லை அதனால் விபத்து ஏற்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்தியை கேட்ட இணையவாசிகள் பலர் தங்களுடைய வருத்தங்களை சொல்லி வருகிறார்கள். அந்த அம்மா தன்னுடைய மகன் மீது எவ்வளவு பாசமாக அவருக்காக பார்த்து பார்த்து விதவிதமாக தோசை சுட்டுக்கொடுப்பேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் யார் கண்ணு பட்டு விட்டதோ தெரியவில்லை ஒரு மாதத்திற்குள் இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டு விட்டதே என்று பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications